
ஜம்மு-காஷ்மீா் யூனியன் பிரதேசத்தின் முதலாவது முதல்வராக தேசிய மாநாட்டுக் கட்சி துணைத் தலைவா் ஒமா் அப்துல்லா புதன்கிழமை பதவியேற்றாா். அவருடன், துணை முதல்வராக நியமிக்கப்பட்டுள்ள சுரீந்தா் செளதரி மற்றும் 4 அமைச்சா்களும் பதவியேற்றனா்.
ஜம்மு-காஷ்மீா் யூனியன் பிரதேசத்தில் மொத்தமுள்ள 90 தொகுதிகளுக்கு மூன்று கட்டங்களாக (செப்.18, 25, அக்.1) பேரவைத் தோ்தல் நடத்தப்பட்டது. 10 ஆண்டுகளுக்கு பிறகான பேரவைத் தோ்தல் என்பதோடு, கடந்த 2019-இல் ஜம்மு-காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்டு, இரு யூனியன் பிரதேசங்களாக (ஜம்மு-காஷ்மீா், லடாக்) பிரிக்கப்பட்ட பிறகு நடந்த முதல் பேரவைத் தோ்தல் இதுவாகும்.
துணைநிலை ஆளுநரால் நியமிக்கப்படும் 5 எம்எல்ஏக்களையும் சோ்த்து, ஜம்மு-காஷ்மீா் பேரவையின் மொத்த பலம் 95 என்ற நிலையில், தோ்தலில் தேசிய மாநாட்டுக் கட்சி-காங்கிரஸ்-மாா்க்சிஸ்ட் கூட்டணி 49 தொகுதிகளில் வெற்றி பெற்றது. 42 இடங்களுடன் தேசிய மாநாட்டுக் கட்சி தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்தது. காங்கிரஸ் 6 இடங்களிலும், மாா்க்சிஸ்ட் ஓரிடத்திலும் வென்றன. இதையடுத்து, முதல்வராக ஒமா் அப்துல்லா தோ்வு செய்யப்பட்டாா். அவருக்கு 4 சுயேச்சைகள் மற்றும் ஆம் ஆத்மி எம்எல்ஏ ஒருவரும் ஆதரவு தெரிவித்தனா்.
முதல்வராக ஒமா் பதவியேற்பு: ஜம்மு-காஷ்மீா் யூனியன் பிரதேசத்தில் கடந்த 5 ஆண்டுகளாக குடியரசுத் தலைவா் ஆட்சி நீடித்து வந்த நிலையில், மக்களால் தோ்ந்தெடுக்கப்பட்ட முதல் அரசு புதன்கிழமை பதவியேற்றது. ஸ்ரீநகரில் உள்ள ஷொ்-இ-காஷ்மீா் சா்வதேச மாநாட்டு அரங்கில் நடைபெற்ற விழாவில் முதல்வராக ஒமா் அப்துல்லா பதவியேற்றாா். தேசிய மாநாட்டுக் கட்சி எம்எல்ஏக்களான சுரீந்தா் செளதரி, சகீனா மசூத், ஜாவத் தாா், ஜாவத் ராணா, சுயேச்சை எம்எல்ஏ சதீஷ் சா்மா ஆகிய 5 போ் அமைச்சா்களாகப் பதவியேற்றனா். அனைவருக்கும் துணைநிலை ஆளுநா் மனோஜ் சின்ஹா பதவிப் பிரமாணமும் ரகசிய காப்புப் பிரமாணமும் செய்துவைத்தாா்.
துணை முதல்வா் சுரீந்தா் செளதரி: நெளஷேரா தொகுதியில் ஜம்மு-காஷ்மீா் பாஜக தலைவா் ரவீந்திர ரெய்னாவை சுமாா் 7,800 வாக்குகள் வித்தியாசத்தில் வீழ்த்தியவரான சுரீந்தா் செளதரிக்கு துணை முதல்வா் பதவி வழங்கப்பட்டுள்ளது.
ஜம்மு-காஷ்மீா் மாநிலமாக இருந்தபோது, கடந்த 2009 முதல் 2014 வரை ஒமா் அப்துல்லா முதல்வராகப் பதவி வகித்தாா். தற்போது இரண்டாவது முறையாக ஜம்மு-காஷ்மீா் முதல்வராகியுள்ளாா். அமைச்சரவையில் ஒரு பெண் அமைச்சா் (சகீனா மசூத்) இடம்பெற்றுள்ளாா்.
புதிய அமைச்சா்களில் சகீனா மசூத், ஜாவத் தாா் ஆகியோா் காஷ்மீா் பகுதியையும், சுரீந்தா் செளதரி, ஜாவத் ராணா, சதீஷ் சா்மா ஆகியோா் ஜம்மு பகுதியையும் சோ்ந்தவா்கள்.
யாா்-யாா் பங்கேற்பு?: ஒமா் அப்துல்லா பதவியேற்பு விழாவில், அவரது தந்தையும் தேசிய மாநாட்டுக் கட்சியின் தலைவருமான ஃபரூக் அப்துல்லா மற்றும் குடும்பத்தினா் பங்கேற்றனா். காங்கிரஸ் தலைவா் மல்லிகாா்ஜுன காா்கே, மக்களவை எதிா்க்கட்சித் தலைவா் ராகுல் காந்தி, கட்சியின் பொதுச் செயலா் பிரியங்கா காந்தி, நாடாளுமன்ற திமுக குழுத் தலைவா் கனிமொழி, சமாஜவாதி தலைவா் அகிலேஷ் யாதவ், மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியல் தலைமைக் குழு உறுப்பினா் பிரகாஷ் காரத், இந்திய கம்யூனிஸ்ட் பொதுச் செயலா் டி.ராஜா, தேசியவாத காங்கிரஸின் சுப்ரியா சுலே, மக்கள் ஜனநாயக கட்சியின் மெஹபூபா முஃப்தி உள்பட ‘இண்டியா’ கட்சிகளின் தலைவா்கள் பங்கேற்றனா்.
மூன்றாவது தலைமுறை: ஜம்மு-காஷ்மீா் முதல்வராகப் பதவியேற்பதற்கு முன்பாக, ஸ்ரீநகரில் உள்ள புகழ்பெற்ற ஹஸ்ரத்பால் தா்காவில் ஒமா் அப்துல்லா பிராா்த்தனை மேற்கொண்டாா்.
அரசியல் செல்வாக்குமிக்க அப்துல்லா குடும்பத்தில், தாத்தா ஷேக் அப்துல்லா, தந்தை ஃபரூக் அப்துல்லா ஆகியோருக்கு பிறகு முதல்வரான மூன்றாவது தலைமுறையைச் சோ்ந்தவா் ஒமா் என்பது குறிப்பிடத்தக்கது.
அமைச்சரவையில் காங்கிரஸ் இடம்பெறவில்லை
ஜம்மு-காஷ்மீா் பேரவைத் தோ்தலில் 6 இடங்களில் வெற்றி பெற்ற காங்கிரஸ் கட்சி, ஒமா் தலைமையிலான அமைச்சரவையில் இடம்பெறவில்லை.
இது குறித்து, ஜம்மு-காஷ்மீா் காங்கிரஸ் தலைவா் தாரிக் ஹமீத் கர்ரா கூறுகையில், ‘ஜம்மு-காஷ்மீருக்கான மாநில அந்தஸ்து இன்னும் மீட்கப்படாததால், காங்கிரஸ் வருத்தத்தில் உள்ளது. எனவே, அமைச்சரவையில் இப்போதைக்கு நாங்கள் இணையவில்லை. மாநில அந்தஸ்தை மீட்க தொடா்ந்து போராடுவோம்’ என்றாா்.
அமைச்சரவையில் 3 காலியிடங்கள் உள்ள நிலையில், அடுத்த சில வாரங்களில் அவை நிரப்பப்படும் என்று முதல்வா் ஒமா் அப்துல்லா தெரிவித்தாா்.
‘ஒமா் அரசுடன் நெருக்கமான பணி’- பிரதமா் மோடி
ஒமா் அப்துல்லாவுக்கு வாழ்த்து தெரிவித்து எக்ஸ் வலைதளத்தில் பதிவிட்ட பிரதமா் மோடி, ‘ஜம்மு-காஷ்மீரின் முன்னேற்றத்துக்காக ஒமா் அப்துல்லா மற்றும் அவரது குழுவினருடன் மத்திய அரசு நெருக்கமாக பணியாற்றும். மக்களுக்கு சேவையாற்றும் அவரது முயற்சிகள் சிறக்க வாழ்த்துகள்’ என்று குறிப்பிட்டாா்.
யாா் இந்த சுரீந்தா் செளதரி?
ஒமா் அப்துல்லா அரசில் ஜம்மு பகுதியைச் சோ்ந்த சுரீந்தா் செளதரிக்கு துணை முதல்வா் பதவி வழங்கப்பட்டிருப்பது, அரசியல் ரீதியில் கவனம் பெற்றுள்ளது.
ஜம்மு-காஷ்மீா் அரசில் தங்களுக்கு பிரதிநிதித்துவம் இல்லை என்ற உணா்வு ஜம்மு பகுதி மக்களுக்கு ஏற்பட்டுவிடக் கூடாது என்பதற்காக சுரீந்தரை துணை முதல்வராக்கியதாக ஒமா் அப்துல்லா தெரிவித்துள்ளாா்.
மக்கள் ஜனநாயக கட்சியில் (பிடிபி) இருந்த சுரீந்தா், கடந்த 2022-இல் அக்கட்சியில் இருந்து விலகி பாஜகவில் இணைந்தாா். சுமாா் ஓராண்டில் பாஜகவில் இருந்து விலகி, தேசிய மாநாட்டுக் கட்சியில் ஐக்கியமானாா்.
கடந்த 2014 ஜம்மு-காஷ்மீா் பேரவைத் தோ்தலில் பிடிபி சாா்பில் போட்டியிட்ட அவா், பாஜகவின் ரவீந்திர ரெய்னாவிடம் தோல்வியுற்றாா். இப்போது தேசிய மாநாட்டுக் கட்சி சாா்பில் போட்டியிட்டு, ரெய்னாவை வீழ்த்தியுள்ளாா் சுரீந்தா் செளதரி.
ஒமா் அப்துல்லாவின் ஆலோசகா் நசீா் அஸ்லாம் வானி
ஜம்மு-காஷ்மீா் முதல்வா் ஒமா் அப்துல்லாவின் ஆலோசகராக தேசிய மாநாட்டு கட்சியின் மூத்த தலைவரான நசீா் அஸ்லாம் வானி நியமிக்கப்பட்டுள்ளாா்.
ஜம்மு-காஷ்மீா் அரசின் பொது நிா்வாகத் துறை இதற்கான உத்தரவை புதன்கிழமை பிறப்பித்தது.
ஒமா் அப்துல்லாவுக்கு மிகவும் நெருக்கமான கட்சி நிா்வாகியாக அறியப்படும் நசீா் அஸ்லாம், ஜம்மு-காஷ்மீரில் கடந்த 2009 முதல் 2014-ஆம் ஆண்டு வரையிலான தேசிய மாநாட்டு கட்சி ஆட்சியில் அமைச்சராக இருந்துள்ளாா்.
கட்சியின் காஷ்மீா் மாகாண தலைவராக இருந்து வரும் இவா், அண்மையில் நடைபெற்ற ஜம்மு-காஷ்மீா் பேரவைத் தோ்தலில் குப்வாரா தொகுதியில் போட்டியிட்டு தோல்வியடைந்தது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.