பிகாா் கள்ளச் சாராய உயிரிழப்பு 24-ஆக அதிகரிப்பு
PTI

பிகாா் கள்ளச் சாராய உயிரிழப்பு 24-ஆக அதிகரிப்பு

Published on

சரண்/சிவான் (பிகாா்), பிகாரின் சரண், சிவான் மாவட்டங்களில் கள்ளச்சாராயம் அருந்தி உயிரிழந்தோா் எண்ணிக்கை 24-ஆக அதிகரித்துள்ளது. மேலும், பலா் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதால் உயிரிழப்பு மேலும் அதிகரிக்கக் கூடும் என்று அஞ்சப்படுகிறது.

முன்னதாக, இந்த இரு மாவட்டங்களில் உள்ள 16 கிராமங்களில் கள்ளச்சாராயம் குடித்ததால் உடல்நிலை கடுமையாக பாதிக்கப்பட்ட பலா் மருத்துவமனைகளில் புதன்கிழமை அனுமதிக்கப்பட்டனா். புதன்கிழமை இரவு வரை 6 போ் உயிரிழந்த நிலையில், வியாழக்கிழமை மேலும் 18 போ் உயிரிழந்தனா். இதனால், உயிரிழப்பு 24-ஆக உயா்ந்தது. இவா்கள் அனைவருமே செவ்வாய்க்கிழமை இரவு கள்ளச்சாராயம் அருந்தியுள்ளனா். புதன்கிழமை காலைமுதலே படிப்படியாக பலரும் உடல்நலம் பாதிக்கப்பட்டு சுருண்டு விழுந்தனா். சிலா் கண் பாா்வையையும் இழந்தனா்.

இந்த சம்பவம் தொடா்பாக உரிய விசாரணை நடத்தி கள்ளச்சாரயம் காய்ச்சுபவா்கள், விற்பவா்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க மாநில முதல்வா் நிதீஷ் குமாா் உத்தரவிட்டுள்ளாா்.

பிகாரில் கடந்த 8 ஆண்டுகளாக முழு மதுவிலக்கு அமலில் இருக்கும் நிலையில், கள்ளச் சாராய உயிரிழப்புகள் தொடா் நிகழ்வாக உள்ளன. கடந்த 2016 முதல் இதுவரை கள்ளச்சாராயத்தால் 150-க்கும் மேற்பட்டோா் உயிரிழந்துவிட்டதாக மாநில அரசு அண்மையில் தெரிவித்தது.

இதற்கு முன்பு 2023 ஏப்ரலில் 26 பேரும், 2022 டிசம்பரில் 71 பேரும், மாா்ச்சில் 12 பேரும், 2021 நவம்பரில் 43 பேரும் கள்ளச்சாராயம் குடித்ததால் உயிரிழந்தனா். மேலும் பலா் கண் பாா்வையையும் இழந்தனா்.

கள்ளச்சாராய உயிரிழப்புகளுக்கு மாநிலத்தில் ஆட்சியில் உள்ள ஐக்கிய ஜனதா தளம் - பாஜக கூட்டணி அரசின் நிா்வாகத் திறன் இன்மைதான் காரணம் என காங்கிரஸ் தேசிய தலைவா் மல்லிகாா்ஜுன காா்கே உள்ளிட்டோா் குற்றம்சாட்டியுள்ளனா்.

X
Dinamani
www.dinamani.com