
ஹிந்தி நடிகர் சல்மான் கான் மீதான கொலை முயற்சியை கைவிடுவதற்கு ரூ. 5 கோடி கேட்டு, பிஷ்னோய் கும்பல் கொலை மிரட்டல் விடுத்துள்ளனர்.
நவி மும்பையின் பான்வேல்லில் உள்ள நடிகர் சல்மான் கானின் பண்ணை வீட்டுக்குச் செல்லும் வழியில் அவரைக் கொல்ல, பிஷ்னோய் அமைப்பினர் கடந்த ஜூன் மாதத்தில் சதித்திட்டம் தீட்டினர்; இருப்பினும், நல்வாய்ப்பாக அவர்களின் சதித்திட்டம் முறியடிக்கப்பட்டது.
இந்த நிலையில், சல்மான் கானின் மீதான கொலை முயற்சியில் ஈடுபட்டதாகக் கூறப்படும் சுகா என்பவர், ஹரியாணாவின் பானிபட்டில் புதன்கிழமை (அக். 16) கைது செய்யப்பட்டார். இதனைத் தொடர்ந்து, சுகாவை வியாழக்கிழமையில் (அக். 17) நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திய காவல்துறையினர், குற்றப்பத்திரிகையையும் தாக்கல் செய்தனர்.
இந்த நிலையில், மும்பை போக்குவரத்து காவல்துறையினருக்கு அனுப்பப்பட்ட ஒரு வாட்ஸ்ஆப் செய்தியில் சல்மான் கானுக்கு கொலை மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது.
அந்த வாட்ஸ்ஆப் செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது, ``இந்த செய்தியை எளிதாக எடுத்துக் கொள்ளாதீர்கள். நடிகர் சல்மான் கான் உயிருடன் இருக்கவும், லாரன்ஸ் பிஷ்னோயுடனான பகைமையை முடிவுக்கு கொண்டுவரவும் விரும்பினால், ரூ. 5 கோடி செலுத்த வேண்டும். பணம் கொடுக்காவிட்டால், சல்மான் கானின் நிலை, கடந்த வாரம் கொல்லப்பட்ட பாபா சித்திகியைவிட மோசமானதாக இருக்கும்’’ என்று கூறியுள்ளனர்.
நடிகர் சல்மான் கான் கடந்த 1998 ஆம் ஆண்டு ராஜஸ்தானில், அபூர்வ வகை மானை வேட்டையாடியுள்ளார். அவரால் கொல்லப்பட்ட வகை மான்கள், வடமாநிலங்களில் வாழும் பிஷ்னோய் இன மக்களால் தெய்வமாகக் கருதப்படுகிறது. இதனைத் தொடர்ந்து, சல்மான் கான் கைது செய்யப்பட்டு, பின்னர் நீதிமன்ற உத்தரவின்பேரில் வெளிவந்தார்.
இந்த நிலையில், மான்களை வேட்டையாடியதற்காக சல்மான் கான் மன்னிப்பு கேட்க வேண்டும்; இல்லையெனில் அவர் கொலை செய்யப்படுவார் என்று பிஷ்னோய் அமைப்பினர் பகிரங்கமாக கொலை மிரட்டல் விடுத்தனர். ஆனால், இன்றுவரையில் சல்மான் கான் மன்னிப்பு கோரவில்லை.
இதையும் படிக்க: ஹமாஸ் தலைவா் கொல்லப்பட்டாலும் சண்டை தொடரும்! - இஸ்ரேல் அறிவிப்பு
இதனைத் தொடர்ந்து, நடிகர் சல்மான் கானை கொலை செய்ய, லாரன்ஸ் பிஷ்னோய் தலைமையில் ரூ. 25 லட்சம் மதிப்பில் ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டிருந்தது விசாரணையில் தெரிய வந்தது. அவரைக் கொல்வதற்காக ஏ.கே. 47, ஏ.கே. 92, எம் 16, ஜிகானா முதலான ஆயுதங்களை பாகிஸ்தானிலிருந்து வாங்குவதாகத் திட்டமிட்டிருந்தனர்.
மேலும், சல்மான் கானைக் கொல்ல 18 வயதுக்குள்பட்டவர்களையே சதித்திட்டத்தில் ஈடுபடுத்தியுள்ளனர். அவர்கள் அனைவரும் புணே, ராய்காட், நவி மும்பை, தாணே, குஜராத்தில் மறைந்துள்ளதாகக் கூறப்படுகிறது. இப்போதும்கூட, சல்மான் கானின் வீடு, பண்ணை வீடு, அவருடைய தயாரிப்பு நிறுவனம் முதலான பகுதிகளில் சுமார் 60 முதல் 70 பேர் வரையில் மறைந்திருந்து சல்மான் கானை கண்காணித்து வருகின்றனர்.
சல்மான் கான் மீது துப்பாக்கிச் சூடு நடத்திய பின்னர், கன்னியாகுமரி வழியாக இலங்கை சென்று, அங்கிருந்து வெளிநாடு செல்வதாகத் திட்டமிட்டிருந்தனர். இந்தத் திட்டங்கள் முழுவதும் 2023 ஆம் ஆண்டு ஆகஸ்ட் முதல் 2024 ஆம் ஆண்டு ஏப்ரல் வரையில் தீட்டப்பட்டதாகத் தெரிகிறது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.