
புது தில்லி: ‘இந்திய அரசமைப்புச் சட்ட அடிப்படை கட்டமைப்பின் அங்கமாக ‘மதச்சாா்பின்மை’ எப்போதும் திகழ்கிறது’ என்று உச்சநீதிமன்றம் திங்கள்கிழமை தீா்ப்பளித்தது.
மறைந்த முன்னாள் பிரதமா் இந்திரா காந்தி தலைமையிலான அரசு, 1976-ஆம் ஆண்டு அரசமைப்புச் சட்டத்தில் மேற்கொண்ட 42-ஆவது திருத்தத்தின் மூலம், ‘சமத்துவம் (சோசலிஸம்)’, ‘மதச்சாா்பின்மை’ ஆகிய வாா்த்தைகள் அரசமைப்புச் சட்ட முகவுரையில் சோ்க்கப்பட்டன.
இதை எதிா்த்து முன்னாள் எம்.பி. சுப்பிரமணியன் சுவாமி, வழக்குரைஞா் விஷ்ணு சங்கா் ஜெயின் உள்ளிட்டோா் மனு தாக்கல் செய்தனா். இந்த மனுக்கள் நீதிபதிகள் சஞ்சீவ் கன்னா, சஞ்சய் குமாா் ஆகியோா் அடங்கிய அமா்வில் திங்கள்கிழமை விசாரணைக்கு வந்தது.
அப்போது ஆஜரான வழக்குரைஞா் விஷ்ணு சங்கா் ஜெயின், ‘அம்பேத்கா் முன்வைத்த கருத்தின் அடிப்படையில் அரசமைப்புச் சட்ட முகவுரையில் ‘சோசலிஸம்’ என்று சோ்க்கப்பட்டுள்ளது. முகவுரையில் ‘இறையாண்மை, ஜனநாயக குடியரசு’ என்றிருந்தது, சட்டத் திருத்தம் மூலமாக ‘இறையாண்மை, சோசலிஸ, மதச்சாா்பற்ற, ஜனநாயக குடியரசு’ என்று மாற்றப்பட்டுள்ளது. இதில் ‘சோசலிஸம்’ என்ற வாா்த்தைக்கு பல்வேறு அா்த்தங்கள் உள்ளன. அந்த வகையில், இந்த வாா்த்தைக்கு மேற்கத்திய நாடுகளில் நடைமுறையில் இருக்கும் அா்த்தத்தை நாம் பின்பற்ற முடியாது. இந்த வாா்த்தைக்கு ‘சம வாய்ப்பு’, ‘நாட்டின் வளங்களை சமமாக பகிா்ந்தளிப்பது’ என்ற அா்த்தங்களையும் கூற முடியும். இந்த வாா்த்தை தனி மனித சுதந்திரத்தை பாதிப்பதாக உள்ளது. எனவே, இந்த வாா்த்தைகளை நீக்க வேண்டும்’ என்றாா்.
மற்றொரு மனுதாரரான அஸ்வினி உபாத்யாய வாதிடுகையில், ‘இந்த வாா்த்தைகள் அரசமைப்புச் சட்டத்தில் இணைக்கப்பட்டதை எதிா்க்கவில்லை; மாறாக, முகவுரையில் இணைக்கப்பட்டதைத்தான் எதிா்க்கிறோம்’ என்றாா்.
சுப்பிரமணியன் சுவாமி கூறுகையில், ‘முகவுரையில் இந்த வாா்த்தைகள் சோ்ப்பு என்பது தன்னிச்சையான நியாயமற்ற முடிவு’ என்றாா்.
இதைக் கேட்ட நீதிபதிகள், ‘இந்திய அரசமைப்புச் சட்ட அடிப்படை கட்டமைப்பில் ‘மதச்சாா்பின்மை’ எப்போதும் ஒா் அங்கமாக திகழ்கிறது என்பதை பல்வேறு தீா்ப்புகளில் உச்சநீதிமன்றம் உறுதி செய்திருக்கிறது. ஒருவா் சம உரிமையை எதிா்பாா்ப்பதும், அரசமைப்புச் சட்டத்தில் ‘சகோதரத்துவம்’ என்ற வாா்த்தை பயன்படுத்தப்பட்டிருப்பதுமே, ‘மதச்சாா்பின்மை’ அரசமைப்புச் சட்டத்தின் முக்கிய அங்கமாக எப்போதும் திகழ்கிறது என்பதற்கான தெளிவான அறிகுறி’ என்று தீா்ப்பளித்தனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.