
கடந்த 2 வாரங்களுக்கும் மேலாக லடாக் ஆதரவாளர்களுடன் புதுதில்லியில் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டு வந்த லடாக்கைச் சேர்ந்த பருவநிலை செயல்பாட்டாளர் சோனம் வாங்சுக், உண்ணாவிரதத்தை முடித்துக்கொள்வதாக அறிவித்துள்ளார்.
உள்துறை இணையமைச்சர் நித்யானந்த் ராய் தலைமையிலான உயரதிகாரக் குழு, லடாக் பகுதியிலிருந்து வந்துள்ள போராட்டக் குழுவுடன் டிசம்பர் 3-ஆம் தேதி பேச்சுவார்த்தை நடத்தி சுமூக தீர்வு காண வழிவகுக்குமென மத்திய உள்துறை அமைச்சகம் உறுதியளித்துள்ளதைத் தொடர்ந்து உண்ணாவிரதப் போராட்டம் இன்று (அக். 21) முடிவுக்கு வந்துள்ளது.
லடாக் பகுதியைச் சேர்ந்த உள்ளூர் மக்களின் மேம்பாட்டுக்காக, அரசமைப்பு ரீதியாக லடாக் மக்களுக்கு பாதுகாப்பு அளிக்கப்பட வேண்டுமென்ற முக்கிய கோரிக்கையை மத்திய அரசிடம் வலியுறுத்தி, சோனம் வாங்சுக்கும் அவரது ஆதரவாளர்கள் சுமார் 25 பேரும் புதுதில்லியில் கடந்த 16 நாட்களாக உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர். இந்தக் குழுவினா், பிரதமா் நரேந்திர மோடி உள்ளிட்ட உயா்நிலைத் தலைவா்களை சந்தித்து கோரிக்கைகளை வலியுறுத்த அனுமதி கோரி வந்தனர்.
இதற்காக, இந்தியாவின் வட எல்லையில் அமைந்துள்ள மலைப்பிரதேசமன லடாக்கின் ‘லே’ பகுதியிலிருந்து தில்லிக்கு பேரணியாக வந்த வாங்சுக் மற்றும் அவரது ஆதரவாளா்கள் செப்டம்பா் 30 அன்று சிங்கு எல்லையில் தில்லி காவல்துறையினரால் கைது செய்யப்பட்டனா். அதன் பிறகு, அக்டோபா் 2 ஆம் தேதி விடுவிக்கப்பட்டனா்.
இந்த நிலையில், தனக்கெதிரான கைது நடவடிக்கைக்கு பின், கடந்த 5-ஆம் தேதி முதல் லடாக் பவன் பகுதியில் காலவரையறையற்ற உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.