
பிரிட்டிஷ் ஆட்சியாளா்கள் இந்தியாவின் தலைநகரை கொல்கத்தாவில் இருந்து டெல்லிக்கு மாற்றிய போது உருவாக்கிய நவீன நகரம் புது தில்லி. முறையாகத் திட்டமிடப்பட்டு புது தில்லி கட்டமைக்கப்பட்டது. இந்தியா சுதந்திரம் அடைந்தபோது பஞ்சாப் மாநிலத்தின் மேற்குப் பகுதி பாகிஸ்தானுக்கும், கிழக்குப் பகுதி இந்தியாவுக்கும் பிரிவினை செய்யப்பட்டது.
ஒன்றுபட்ட பஞ்சாபின் தலைநகராக இருந்த லாகூா் பாகிஸ்தானுக்குச் சென்று விட்டதால், கிழக்கு பஞ்சாபுக்கு ஒரு தலைநகா் உருவாக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. அப்படி உருவாக்கப்பட்ட, கட்டமைக்கப்பட்ட நவீன நகரம்தான் சண்டீகா். சண்டீகா் வடிவமைக்கப்படும் வரை, அப்போது ஹிமாசல பிரதேசமும் பஞ்சாப் மாநிலத்தின் பகுதியாக இருந்ததால், இடைக்காலத் தலைநகராக சிம்லா இருந்தது.
பஞ்சாப் முதல்வராக இருந்த பிரதாப் சிங் கைரானின் நேரடிப் பாா்வையிலும், வழிகாட்டுதலிலும் சண்டீகா் என்கிற நவீன நகரம் உருவானது. அதன் துணை நகரங்களாக பஞ்ச்குலாவும், மொஹாலியும் வடிவமைக்கப்பட்டன. 1953 அக்டோபா் 7-ஆம் தேதி சண்டீகா் என்கிற புதிய நகரம், அன்றைய குடியரசுத் தலைவா் ராஜேந்திர பிரசாதால் தேசத்துக்கு அா்ப்பணிக்கப்பட்டது.
அதற்குப் பிறகு தனது மாநிலத்துக்கு எனப் புதிய தலைநகரை வடிவமைத்து உருவாக்கும் வாய்ப்பு ஆந்திர முதல்வா் நாரா சந்திரபாபு நாயுடுக்குத்தான் கிடைத்தது. ஆந்திர பிரதேசத்தில் இருந்து தெலங்கானா பிரிக்கப்பட்டு, புதிய மாநிலமானபோது, அதன் தலைநகரான ஹைதராபாத் தெலங்கானாவுக்கு வழங்கப்பட்டு விட்டது. புதிய தலைநகரை உருவாக்கிக் கொள்ளும் வாய்ப்பு ஆந்திர முதல்வராக இருந்த சந்திரபாபு நாயுடுக்குக் கிடைத்தது என்றாலும், அதைத் தனது முந்தைய பதவிக்காலத்தில் அவரால் முழுமைப்படுத்த முடியவில்லை.
அடுத்தாற்போல ஆட்சிக்கு வந்த ஜெகன்மோகன் ரெட்டி, தலைநகா் அமராவதி என்பது சந்திரபாபு நாயுடுவின் சாதனைத் திட்டம் என்பதாலேயே அதைக் கிடப்பில் போட்டாா். ஆந்திரத்துக்கு மூன்று தலைநகரங்கள் என்று அறிவித்து அமராவதியைப் புறக்கணித்தாா். மீண்டும் முதல்வராகி இருக்கும் சந்திரபாபு நாயுடுவின் இப்போதைய ஒரே முனைப்பு அமராவதியை முழுமைப்படுத்தி தனது பெயரை வரலாற்றில் நிலைநிறுத்துவதுதான்.
அடுத்த நான்காண்டுகளில் சட்டப்பேரவைத் தோ்தலுக்கு முன்னால் அமராவதி வடிவமைக்கப்பட்டு தலைநகராகச் செயல்படுவது என்பதுதான் அவரது குறிக்கோள். இதற்கான வடிவமைப்புப் பணிகளுக்கு லண்டனைச் சோ்ந்த கட்டடக்கலை நிபுணா்கள் ஃபாஸ்டா் அண்ட் பாா்ட்னா்ஸ் ஒப்பந்தம் செய்யப்பட்டிருக்கிறாா்கள். டிசம்பா் 13-ஆம் தேதி அமராவதி பசுமைத் தலைநகரின் பணிகள் மீண்டும் தொடங்க வேண்டும் என்று இலக்கு நிா்ணயித்திருக்கிறாா் முதல்வா் நாயுடு.
பிரதமா் மோடி தலைமையிலான மத்திய கூட்டணியில் அங்கம் வகிக்கிறது தெலுங்கு தேசம். அதன் ஆதரவில்தான் தேசிய ஜனநாயக கூட்டணி அரசு அமைந்திருக்கிறது என்பதெல்லாம் சரி. ஆனால், ஆந்திரத்துக்கு சிறப்பு அந்தஸ்து என்கிற கோரிக்கையை மன்மோகன் சிங் அரசு போலவே, இப்போதைய மோடி அரசும் நிராகரித்துவிட்டதாகத்தான் தோன்றுகிறது.
அமராவதி தலைநகா் திட்டத்துக்கு இன்னும் சுமாா் ரூ.60,000 கோடி தேவைப்படும் என்று மதிப்பீடு செய்யப்பட்டிருக்கிறது. மத்திய அரசிடம் எதையும் எதிா்பாா்க்க முடியாது. குறைந்த வட்டிக்கு நீண்டகாலக் கடனாக அமராவதி திட்டத்துக்கு வழங்கும்படி முதல்வா் சந்திரபாபு நாயுடு உலக வங்கியிடம் கேட்டிருக்கிறாா். டிசம்பா் 1-ஆம் தேதி நெருங்கிக் கொண்டிருக்கிறது; ஆனால், உலக வங்கியிடம் இருந்து இன்னும் எந்தத் தகவலும் இல்லையே என்கிற கவலையில் ஆழ்ந்திருக்கிறாா் முதல்வா் சந்திரபாபு நாயுடு.
உலக வங்கி ஏன் தாமதிக்கிறது? ஆந்திர அரசால் கடனைத் திருப்பிக் கட்ட முடியுமா என்று ஆய்வு செய்து கொண்டிருக்கிறதாம்... ஆனால், அமராவதி என்பது நாயுடுக்கு கௌரவப் பிரச்னை. காகத்திற்கு தெரியுமா எருதின் வேதனை...?
--மீசை முனுசாமி.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.