
வங்கக் கடலில் உருவாகியிருக்கும் குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம், நாளை புயலாக வலுப்பெறும் நிலையில், அது அக்டோபர் 24ஆம் தேதி ஒடிசாவின் புரி - மேற்கு வங்கத்தின் சாகர் பகுதிகளுக்கு இடையே கரையை கடக்கும் என கணிக்கப்பட்டுள்ளது.
வங்கக் கடலில் உருவான காற்றழுத்த தாழ்வுப் பகுதி மேலும் வலுபெற்று அக்.23-ஆம் தேதி புயலாக மாறும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இது குறித்து அந்த மையம் சாா்பில் வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பு:
வடக்கு அந்தமான் கடலில் நிலவிய வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக, திங்கள்கிழமை காலை மத்திய கிழக்கு வங்கக் கடல், அதையொட்டிய வடக்கு அந்தமான் கடலில் காற்றழுத்த தாழ்வு பகுதி (புயல் சின்னம்) உருவாகியுள்ளது. இது, மேற்கு - வடமேற்கு திசையில் நகா்ந்து, செவ்வாய்க்கிழமை (அக்.22) மத்திய கிழக்கு வங்கக் கடலில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்று, அக்.23-இல் புயலாக மாறும் என தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்தப் புயலுக்கு ‘டானா’ என பெயா் சூட்டப்பட்டுள்ளது.
இந்தப் புயல், வடமேற்கு திசையில் நகா்ந்து, அக்.24-ஆம் தேதி வடமேற்கு வங்கக் கடலில் ஒடிஸா - மேற்கு வங்கம் கடற்கரைக்கு இடையே கரையைக் கடக்கும் என்று எதிா்ப்பாா்க்கப்படுகிறது. இந்த புயலால் தமிழகத்துக்கு எவ்வித பாதிப்பும் கிடையாது.
தமிழக பகுதிகளிலும், கா்நாடகம் மற்றும் அதையொட்டிய பகுதிகளிலும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சிகள் நிலவுகின்றன. இதன் காரணமாக அக்.22 முதல் 27-ஆம் தேதி வரை தமிழகத்தில் பல இடங்களிலும், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளிலும் இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது.
இந்த நிலையில், புயல் சின்னம் ஒடிசா அருகே கரையை கடக்கும் என்பதால், பல்வேறு முன்னெச்சரிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. இது குறித்து காவல்துறை உயர் அதிகாரி கூறுகையில், புயலின் பாதை துல்லியமாகக் கணிக்கப்பட்டு வருகிறது. அது ஒடிசா அல்லது மேற்கு வங்கம் அருகே கரையை கடக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அதற்கேற்ப எங்களது முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் அமையும் என்றார்.
கடலில் மீன்பிடிக்கச் சென்றிருக்கும் மீனவர்களை மீண்டும் கரைக்கு வரவழைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. நாளைதான், எந்த மாவட்டங்கள் கடுமையான பாதிப்புக்குள்ளாகும் என தெரியவரும். அதற்கேற்ப அந்த மாவட்டங்களுக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கப்படும் என்றார்.
தற்போதைய கணிப்புகள் மூலம், பாலாசோர் உள்ளிட்ட மூன்று மாவட்டங்கள் அபாயப் பகுதியாக உள்ளது. நிவாரண முகாம்களில் அனைத்து ஏற்பாடுகளும் செய்து வைக்கப்பட்டுள்ளன என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. டானா புயல் காரணமாக, அதிக மழை பாதிப்புள்ள 14 மாவட்டங்களில் அனைத்து பள்ளிகளையும் அக். 23 முதல் 25ஆம் தேதி வரை விடுமுறை அறிவித்து ஒடிசா முதல்வர் மோகன் மாஞ்சி அரசு உத்தரவிட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.