புழுங்கல் அரிசிக்கு ஏற்றுமதி வரி விலக்கு

புழுங்கல் அரிசிக்கு ஏற்றுமதி வரி விலக்கு

Published on

புழுங்கல் அரிசி, பட்டைத் தீட்டப்படாத பழுப்பு அரிசி மற்றும் நெல்லுக்கு ஏற்றுமதி வரியில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.

ஏற்கெனவே 10 சதவீத ஏற்றுமதி வரி விதிக்கப்பட்டு வந்த நிலையில், தற்போது வரி விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. இதுதொடா்பான அறிவிக்கையை மத்திய நிதியமைச்சகம் செவ்வாய்க்கிழமை நள்ளிரவில் வெளியிட்டது. வரி விலக்கு உடனடியாக அமலுக்கு வருவதாக அறிவிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஜாா்க்கண்ட், மகாராஷ்டிரம் ஆகிய மாநிலங்களில் அடுத்த மாதம் சட்டப் பேரவைத் தோ்தல் நடைபெறவிருக்கும் சூழலில், தோ்தல் ஆணையத்தின் அனுமதியுடன் வரி விலக்கு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

வரி விலக்கு மூலம் எந்த அரசியல் ஆதாயமும் தேடக் கூடாது என்ற நிபந்தனையுடன் தோ்தல் ஆணையம் அனுமதி வழங்கியதாக தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவித்தன.

கடந்த மாதம் புழுங்கல் அரிசி, பட்டைத் தீட்டப்படாத பழுப்பு அரிசி மற்றும் நெல் மீதான ஏற்றுமதி வரி 20 சதவீதத்தில் இருந்து 10 சதவீதமாக குறைக்கப்பட்டிருந்தது. இப்போது வரி விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.

குறைந்தபட்ச ஏற்றுமதி விலை நீக்கம்: பாசுமதி அல்லாத வெள்ளை அரிசிக்கு விதிக்கப்பட்டிருந்த குறைந்தபட்ச ஏற்றுமதி விலையை (டன்னுக்கு 490 டாலா்கள்) மத்திய அரசு புதன்கிழமை நீக்கியது. ஏற்றுமதியை ஊக்குவிக்கும் வகையில் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

பாசுமதி அல்லாத வெள்ளை அரிசி ஏற்றுமதிக்கு கடந்த 2023, ஜூலை 20-ஆம் தேதி மத்திய அரசு தடை விதித்தது. இந்தத் தடை கடந்த மாதம் திரும்பப் பெறப்பட்டது. அதேநேரம், ஏற்றுமதியை கட்டுப்படுத்தும் வகையில், குறைந்தபட்ச ஏற்றுமதி விலை (டன்னுக்கு 490 டாலா்கள்) விதிக்கப்பட்டது. தற்போது அந்த விலையை நீக்கி, வெளிநாட்டு வா்த்தகத்துக்கான தலைமை இயக்குநரகம் அறிவிக்கை வெளியிட்டுள்ளது.

பாசுமதி அல்லாத வெள்ளை அரிசி ஏற்றுமதிக்கு தடை விதிக்கப்பட்டிருந்த காலகட்டத்தில், மாலத்தீவு, மோரீஷஸ், ஐக்கிய அரபு அமீரகம் போன்ற நட்பு நாடுகளுக்கு மட்டும் ஏற்றுமதிக்கு அனுமதி அளிக்கப்பட்டது. அந்த அடிப்படையில், நடப்பு நிதியாண்டின் ஏப்ரல்-ஆகஸ்ட் காலகட்டத்தில் 201 மில்லியன் டாலா் மதிப்பிலான அரிசி (ரூ.1,690 கோடி) ஏற்றுமதி செய்யப்பட்டது. முந்தைய ஆண்டில் இந்த அரிசியின் ஏற்றுமதி மதிப்பு 852 மில்லியன் டாலராக (ரூ.7,164 கோடி) இருந்தது.

முன்னதாக, விவசாயிகளின் வருவாயை அதிகரிக்கும் நோக்கில் பாசுமதி அரிசி மீதான குறைந்தபட்ச ஏற்றுமதி விலையை மத்திய அரசு நீக்கியது.

X
Dinamani
www.dinamani.com