வங்கக் கடலில் தீவிர புயலாக வலுப்பெற்றுள்ள டானா புயல் கரையை கடக்கும் இடம் குறித்த தகவலை இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
மேலும், ஒடிஸா மற்றும் மேற்கு வங்க மாநில கடலோரப் பகுதிகளுக்கு சிவப்பு எச்சரிக்கையையும் விடுத்துள்ளது.
எங்கே கடக்கும்?
வடக்கு அந்தமான் கடல் பகுதிகளில் நிலவிய காற்றழுத்த தாழ்வுப் பகுதி செவ்வாய்க்கிழமை காலை காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றது. இது தொடா்ந்து மேற்கு - வடமேற்கு திசையில் நகா்ந்து தீவிர புயலாக வலுப்பெற்றுள்ளது.
கடந்த 6 மணிநேரமாக 12 கி.மீ. வேகத்தில் வடக்கு - வடமேற்கு திசையில் நகர்ந்து கொண்டுள்ளது. தற்போது ஒடிஸாவின் பாரதிப்புக்கு 210 கி.மி. தொலைவிலும், தாமரவுக்கு தெற்கு - தென்கிழக்கே 240 கி.மீ. தொலைவிலும், மேற்கு வங்கத்தின் சாகர் தீவுக்கு 310 கி.மீ. தொலைவிலும் மையம் கொண்டுள்ளது.
இந்த தீவிர புயல், இன்று நள்ளிரவில் இருந்து நாளை அதிகாலைக்குள் புரி மற்றும் சாகர் தீவுக்கு இடையே ஒடிஸாவின் பிதர்கனிகா மற்றும் தம்ராவுக்கு அருகே கரையை கடக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது.
மேலும், இந்த தீவிர புயலானது கரையை கடக்கும்போது 120 கி.மீ. வரை காற்று வீசக்கூடும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
முன்னெச்சரிக்கை தீவிரம்
டானா புயலை தொடர்ந்து, ஒடிஸா மற்றும் மேற்கு வங்க அரசுடன் இணைந்து தேசிய மற்றும் மாநில பேரிடர் மீட்புப் படையினர் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
ஒடிஸாவில் கடுமையான மழை பெய்து வரும் நிலையில், 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள், தாழ்வான பகுதிகளில் இருந்து மீட்கப்பட்டு பாதுகாப்பான இடங்களுக்கு மாற்றியுள்ளனர்.
புயலைக் கருத்தில் கொண்டு ஒடிஸா, மேற்கு வங்கம் உள்பட 5 மாநிலங்களில் மொத்தம் 56 தேசிய பேரிடா் மீட்புப் படை குழுக்கள் நிறுத்தப்பட்டுள்ளனா்.
மரம் வெட்டும் கருவிகள், படகுகள், முதலுதவி கருவிகள் மற்றும் பிற வெள்ள மீட்பு கருவிகள் என அனைத்து அடிப்படை வசதிகளுடன் மீட்புக் குழுக்கள் தயாா்நிலையில் உள்ளனா்.