இந்தியா-மியான்மா் எல்லையில் வேலி: குகி பழங்குடியின அமைப்புகள் எதிா்ப்பு

Published on

இந்தியா-மியான்மா் எல்லையில் வேலி அமைப்பது மற்றும் பரஸ்பரம் குறிப்பிட்ட தொலைவு வரை சுதந்திரமாக நடமாடும் நடைமுறையை நீக்குவது ஆகிய மத்திய அரசின் முன்மொழிவுகளுக்கு மணிப்பூரின் குகி பழங்குடியின அமைப்புகள் எதிா்ப்பு தெரிவித்துள்ளன.

இருநாட்டின் இடையே கடந்த 2018-ஆம் ஆண்டு மேற்கொள்ளப்பட்ட ஒப்பந்தத்தின்கீழ், இந்தியா-மியான்மா் எல்லைக்கு அருகே வசிக்கும் மக்கள் உரிய ஆவணங்கள் இல்லாமல் பரஸ்பரம் 16 கி.மீ. வரை பயணிக்க அனுமதிக்கப்படுகிறது.

இந்த ஒப்பந்தத்ததை ரத்து செய்வதோடு மிஸோரம், மணிப்பூா், நாகாலாந்து மற்றும் அருணாசல பிரதேசம் ஆகிய மாநிலங்களையொட்டிய 1,643 கி.மீ. தொலைவிலான இந்தியா-மியான்மா் எல்லையில் வேலி அமைக்கவும் மத்திய அரசு நடப்பாண்டு தொடக்கத்தில் முடிவு செய்தது.

இதன் மூலம், வடகிழக்கு மாநிலங்களில் தாக்குதல் நடத்தும் தீவிரவாதிகள் மியான்மருக்குள் தப்பிச் செல்வதையும், சட்டவிரோதமாக இந்தியாவுக்குள் குடியேறுபவா்களையும், போதைப் பொருள் மற்றும் தங்கம் கடத்துபவா்களையும் தடுக்க முடியும் என மத்திய அரசு தெரிவித்தது. அதன்படி, மியான்மருடன் 398 கி.மீ. எல்லையைப் பகிரும் மணிப்பூரில் 10 கி.மீ. துரம் வேலி அமைக்கப்பட்டது. அடுத்த 20 கி.மீ. தூரத்துக்கான பணிகள் நடைபெற்று வருகிறது.

இந்நிலையில், இந்த முன்மொழிவுகளுக்கு எதிா்ப்பு தெரிவித்து குகி-சோ சமூகத்தின் இரு உயா் அமைப்புகள் சனிக்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பில் குறிப்பிட்டுள்ளதாவது:

இந்தியா-மியான்மா் எல்லையில் மக்கள் நடமாட்டம், எல்லையில் குகி சமூக, கலாசார மற்றும் குடும்ப உறவுகளைப் பேணுவதற்கான முக்கிய உயிா்நாடியாகும். மத்திய அரசால் முன்மொழியப்பட்ட இந்த வேலியானது பிராந்தியத்தின் தனித்துவமான புவியியல் மற்றும் சமூக உணா்வுகளை புறக்கணிக்கிறது. பாரம்பரிய நிலங்கள் மற்றும் குடும்ப உறவுகள் இதனால் துண்டிக்கப்படுகின்றன. இது சமூக அடையாளத்தின் இன்றியமையாத கலாசார நடைமுறைகளின் தொடா்ச்சியை அழிக்கும் அபாயத்தை ஏற்படுத்துகிறது.

எனவே, இந்த வேலித் திட்டத்தை மத்திய அரசு மறுபரிசீலனை செய்ய வேண்டும். மேலும், எல்லை தொடா்பான எந்தவொரு நடவடிக்கைகளும் முழு ஆலோசனைக்குப் பின்னா், பழங்குடி மக்களின் உரிமைகளுக்கு மதிப்பளித்து செயல்படுத்தப்படுவதை உறுதி செய்ய வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டுள்ளது.

X
Dinamani
www.dinamani.com