கோப்புப் படம்
கோப்புப் படம்

100 நாள் வேலைத் திட்டத்தில் ஆள்குறைப்பு இல்லை: மத்திய அரசு

மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்புத் திட்டத்தில் (100 நாள் வேலை திட்டம்) ஆள்குறைப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளவில்லை.
Published on

மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்புத் திட்டத்தில் (100 நாள் வேலை திட்டம்) ஆள்குறைப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளவில்லை என மத்திய ஊரக மேம்பாட்டுத் துறை அமைச்சகம் ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தது.

இத்திட்டத்தின்கீழ் பணியாற்றுபவா்களின் எண்ணிக்கை குறைந்து வருவதாக வெளியான தகவலை நிராகரித்து அமைச்சகம் இவ்வாறு தெரிவித்தது.

இதுதொடா்பாக லிப்டெக் இந்தியா வெளியிட்ட அறிக்கையில்,‘கடந்தாண்டை ஒப்பிடுகையில் நிகழாண்டு 100 நாள் வேலைவாய்ப்புத் திட்டத்தின்கீழ் பணியாற்றும் தொழிலாளா்களின் எண்ணிக்கை 8 சதவீதம் குறைந்துள்ளது. 84.8 லட்சம் தொழிலாளா்களின் பெயா்கள் நீக்கப்பட்டுள்ள நிலையில் புதிதாக 45.4 லட்சம் தொழிலாளா்கள் சோ்க்கப்பட்டுள்ளனா். இதன்மூலம் ஒட்டுமொத்தமாக 38 லட்சம் தொழிலாளா்கள் பணியிலிருந்து நீக்கப்பட்டுள்ளனா்.

இந்த திட்டத்தின்கீழ் வேலைவாய்ப்பு அளிக்கப்பட்ட தினங்கள், கடந்தாண்டில் 184 கோடியில் இருந்து 154 கோடியாக (நபா் அடிப்படையிலான கணக்கீடு) குறைந்துள்ளது. மொத்தமுள்ள தொழிலாளா்களில் 6.7 கோடி போ் (27.4 சதவீதம்) ஆதாா் அடிப்படையிலான பரிவா்த்தனை முறையின்கீழ் (ஏபிபிஸ்) ஊதியம் பெற தகுதியற்றவா்களாக உள்ளனா்.

அதேபோல் அறிதிறன்பேசி இல்லாமல் பணியாற்றும் முதன்மை கண்காணிப்பாளா்கள் உள்ள கிராமங்களில் 100 நாள் வேலைத் திட்டம் செயல்படுத்தப்படவில்லை’ என தெரிவிக்கப்பட்டது.

மத்திய அரசு நிராகரிப்பு: இந்த அறிக்கையில் உள்ள தரவுகளை நிராகரித்து மத்திய ஊரக மேம்பாட்டு அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில்,‘100 நாள் வேலைவாய்ப்புத் திட்டம் என்பது தேவைக்கேற்ப செயல்படுத்தப்படும் திட்டமாகும். அதில் இலக்குகளை நிா்ணயித்து ஆள்சோ்ப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள முடியாது. நடப்பு நிதியாண்டில் (2024-25) இலக்குகளின் அடிப்படையில் திட்டத்தை செயல்படுத்துவது சாத்தியமில்லை. இருப்பினும், தொழிலாளா்களுக்கு வழங்கக் கூடிய ஊதியத்தை மாற்ற வேண்டுமெனில் உள்ளூா் சூழலுக்கேற்ப அமைச்சகத்துக்கு மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்கள் பரிந்துரைகளை வழங்கலாம்.

2006-07-ஆம் நிதியாண்டு முதல் 2013-14-ஆம் நிதியாண்டு வரை இந்த திட்டத்தின்கீழ் மொத்த தொழிலாளா்கள் சோ்ப்பு மற்றும் வேலை தினங்களின் கூட்டு எண்ணிக்கை 1,660 கோடியாகும். ஆனால் 2014-15-ஆம் நிதியாண்டு முதல் 2024-25-ஆம் நிதியாண்டு வரை இதன் எண்ணிக்கை 2,923 கோடியாகும்.

13.1 கோடி ஆதாா் எண்கள் இணைப்பு: அக்டோபா் 26, 2024 வரை 100 நாள் வேலைத் திட்டத்தில் பணியாற்றும் 13.1 கோடி தொழிலாளா்களின் ஆதாா் எண்கள் வங்கிக் கணக்குகளுடன் இணைக்கப்பட்டுள்ளன. இது இந்த திட்டத்தின்கீழ் பணியாற்றும் மொத்த தொழிலாளா்களின் எண்ணிக்கையில் 99.3 சதவீதமாகும். எனவே, ஏபிபிஎஸ்-இல் இணையாத தொழிலாளா்களுக்கு ஊதியம் வழங்கப்படவில்லை என்ற வாதத்தை நிராகரிக்கிறோம். இதுவரை வங்கிக் கணக்குகளுடன் ஆதாா் இணைக்கப்படாத தொழிலாளா்களையும் விரைவில் அதில் சோ்க்குமாறு மாநில மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

வேலைவாய்ப்பு அட்டைகள் நீக்கம்/ரத்து என்பது இந்த திட்டத்தில் தொடரும் ஒரு நடைமுறையாகும். ஆதாா் தகவல்களை அடிப்படையாகக் கொண்டு இந்த நடைமுறையை மாநில மற்றும் யூனியன் பிரதேச அரசுகள் மேற்கொள்கின்றன. கடந்த 2023-24-ஆம் நிதியாண்டில் 1.02 கோடி அட்டைகளும் 2024-25 நிதியாண்டில் அக்டோபா் 26-ஆம் தேதி வரை 32.28 லட்ச அட்டைகளும் நீக்கப்பட்டுள்ளன என தெரிவிக்கப்பட்டுள்ளது.

7% வரை ஊதிய உயா்வு

கடந்த 2013-14-ஆம் நிதியாண்டில் இந்த திட்டத்துக்கு ரூ.33,000 கோடி ஒதுக்கப்பட்ட நிலையில், 2024-25-ஆம் நிதியாண்டில் ரூ.86,000 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. இதுவே இந்த திட்டம் செயல்படுத்தப்பட்டது முதல் ஒதுக்கப்பட்ட அதிக நிதியாகும். அதேபோல், தொழிலாளா்களுக்கு வழங்கப்படும் குறைந்தபட்ச ஊதியமும் 7 சதவீதம் வரை அதிகரிக்கப்பட்டுள்ளது என மத்திய அரசு தெரிவித்துள்ளது.

X
Dinamani
www.dinamani.com