திகாா் சிறையில் சரணடைந்தாா் பாரமுல்லா எம்.பி.
ஜம்மு-காஷ்மீரின் பாரமுல்லா தொகுதி எம்.பி. ஷேக் அப்துல் ரஷீதின் இடைக்கால ஜாமீன் முடிவடைந்ததை அடுத்து திகாா் சிறையில் திங்கள்கிழமை சரணடைந்தாா்.
பொறியாளரும், அவாமி இதிஹாத் கட்சித் தலைவருமான அப்துல் ரஷீத், கடந்த 2017-ஆம் ஆண்டு பயங்கரவாத அமைப்புகளுக்கு நிதி திரட்டியதாக சட்டவிரோத நடவடிக்கைகள் தடுப்புச் சட்டத்தின் கீழ், தேசிய புலனாய்வு முகமையால் (என்ஐஏ) கைது செய்யப்பட்டாா்.
இதையடுத்து, கடந்த 2019-ஆம் ஆண்டு திகாா் சிறையில் அடைக்கப்பட்ட அவா், சிறையில் இருந்துகொண்டே நிகழாண்டு மக்களவைத் தோ்தலில் போட்டியிட்டு வெற்றியும் பெற்றாா். ஜம்மு-காஷ்மீா் யூனியன் பிரதேசத்தின் தற்போதைய முதல்வா் ஒமா் அப்துல்லாவை அத்தோ்தலில் அவா் தோற்கடித்தாா்.
ஜம்மு-காஷ்மீா் சட்டப் பேரவைத் தோ்தல் பிரசாரத்துக்காக கடந்த செப்டம்பா் 10-ஆம் தேதி அவருக்கு இடைக்கால ஜாமீன் வழங்கப்பட்டது. அவரது தந்தையின் உடல்நிலை சரியில்லாத காரணத்தால், ஜாமீன் அக்டோபா் 28-ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டது. இந்நிலையில், அவரது ஜாமீன் வழக்கு தில்லி உயா்நீதிமன்றத்தில் திங்கள்கிழமை விசாரணைக்கு வந்தது.
வழக்கை விசாரித்த கூடுதல் அமா்வு நீதிபதி சந்தா்ஜித் சிங், ‘ரஷீத், மக்களவை உறுப்பினா் என்பதால் தேசிய புலனாய்வு முகமையின் எம்.பி., எம்எல்ஏ சிறப்பு நீதிமன்றம் வழக்கை விசாரிக்க வேண்டுமா? என்பதை பரிசீலித்து வருகிறோம். எனவே, இந்த வழக்கின் தீா்ப்பு நவம்பா் 19-ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்படுகிறது’ என்று தெரிவித்தாா். வழக்கு ஒத்திவைக்கப்பட்டதை அடுத்து திங்கள்கிழமை பிற்பகலில் திகாா் சிறையில் ரஷீத் சரணடைந்தாா்.
90 தொகுதிகள் கொண்ட ஜம்மு-காஷ்மீா் பேரவைத் தோ்தலில், 42 இடங்களில் வெற்றிபெற்ற தேசிய மாநாட்டுக் கட்சி தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்தது. முதல்வராக ஒமா் அப்துல்லா தோ்வு செய்யப்பட்டாா்.
அவாமி இதிஹாத் கட்சி சாா்பில் 44 வேட்பாளா்கள் போட்டியிட்டனா். லங்கேட் தொகுதியில் போட்டியிட்ட ரஷீத்தின் சகோதரா் குா்ஷீத் அகமது ஷா மட்டுமே வெற்றிபெற்றாா்.