தள்ளுபடி விலையில் கார்கள் விற்பனை!
கார் விற்பனையில் ஏற்பட்ட மந்தநிலை காரணமாக பல்வேறு கார் உற்பத்தி நிறுவனங்களும் தங்களது பல்வேறு மாடல்களுக்கும் ஆயிரங்களில் அல்ல லட்சங்களில் தள்ளுபடி அறிவித்திருக்கின்றன.
மாருதி சுசூகி, ஹோன்டா, ஜேஎஸ்டபிள்யு எம்ஜி, மஹிந்திரா அன்ட் மஹிந்திரா, டாடா மோட்டார்ஸ் உள்ளிட்ட கார் உற்பத்தி நிறுவனங்கள், தங்களது ஆடி, மெர்சிடிஸ்-பென்ஸ், பிஎம்டபிள்யூ என பல சொகுசு கார்களுக்கும் தள்ளுபடி அறிவித்து மக்களுக்கு பேரதிர்ச்சியை அளித்திருக்கின்றன.
இந்த தள்ளுபடியின் முழு விவரம்
கார்களில் அதிகம் விரும்பப்படும் ஆடம்பர ஆடி க்யூ8 இ-டிரான், 10 லட்சம் தள்ளுபடியைப் பெறும். இந்த தள்ளுபடியானது கடை விலையில் வழங்கப்படுகிறது.
கியா இவி6 வகை கார்களுக்கு 12 லட்சமும், சுசூகி ஜிம்னி கார்களின் விலையில் தோராயமாக ரூ.2.3 லட்சமும் தள்ளுபடி வழங்கப்படுகிறது.
சுசூகியின் மிகவும் பிரபலமான ஜிம்னி கார், ஏனோ, நாட்டின் மிக முன்னனி கார் உற்பத்தி நிறுவனத்தின் அதிகம் விற்பனையாகும் கார் என்ற புகழைப் பெறத் தவறிவிட்டதால், இப்போது, அதிக தள்ளுபடியுடன் விற்பனைக்கு வந்திருக்கிறது.
இது ஏதோ வழக்கமான கார்களுக்கு மட்டுமல்ல, விற்பனையில் படுஜோராக இருக்கும் டோயோடோ இன்னோவா ஹைக்ராஸ் மற்றும் மஹிந்திரா 3-டோர் தார் வகை கார்களும் கூட மிகப்பெரிய தள்ளுபடி விலையில் விற்பனைக்கு வந்திருப்பது, கார் வாங்க வேண்டும் என்று திட்டமிட்டிருப்பவர்களுக்கு இந்த தீபாவளியை மறக்க முடியாத தீபாவளியாக மாற்றக் காத்திருக்கிறது.
மஹிந்திரா நிறுவனத்தின் எக்ஸ்யுவி400 மாடல் வகை மின்சார காருக்கு மிகப்பெரிய தள்ளுபடி அறிவிக்கப்பட்டுள்ளது. அதாவது ஒன்றல்ல, இரண்டல்ல ரு.3 லட்சம் விலை தள்ளுபடியில் இந்த காரை வாங்கலாம். இதில் குறிப்பிடத்தக்க அம்சம் என்னவென்றால், கடந்த ஜூலையில்தான் மஹிந்திரா நிறுவனம் எக்ஸ்யுவி700 மாடல் காருக்கு ரூ.2 லட்சம் வரை தள்ளுபடி அறிவித்திருந்தது.
ஆனால், கார் உற்பத்தி துறை தொடர்பான தரவுகளை கணிக்கும் நிபுணர்கள் சொல்வது என்னவென்றால், தீபாவளிக்குப் பிறகுதான் இந்த தள்ளுபடி இன்னும்கூட அதிகரிக்கும், ஏனென்றால், டீலர்களும், கார் உற்பத்தி நிறுவனங்களும், புதிய நவீன உற்பத்தியைத் தொடங்கவும், ஏற்கனவே விற்பனையாகாமல் இருக்கும் கார்களை விற்கவும் இதுபோன்ற தள்ளுபடிகளை மேலும் அதிகரிக்கும் என்று தெரிவிக்கின்றனர்.
கரோனா பொதுமுடக்கத்தின்போது மிகவும் பெரிய சவாலை எதிர்கொண்ட கார் உற்பத்தி நிறுவனங்கள், பொதுமுடக்கத்துக்குப் பிறகு 2021ஆம் ஆண்டு தங்களது பொருளாதார நடவடிக்கைகளைத் தொடங்கியதிலிருந்து ஒரு சீரான வளர்ச்சியை சந்தித்து வந்தாலும், இதற்கு முன் இருந்திராதவகையில், இந்த ஆண்டு, புதிதாக வரும் வாகனங்களை வாங்குவதில், மக்கள் பெரிய அளவில் ஆர்வம்காட்டவில்லை.
பெரும்பாலான கார் உற்பத்தி நிறுவனங்களும் கார் உற்பத்தியை ஓரளவுக்குக் கட்டுப்படுத்தியும், டீலர்களுக்கு விநியோகிக்கும் எண்ணிக்கையிலும் கட்டுப்பாடுகள் வந்ததும் கடந்த சில மாதங்களாகவே அதிகமாகவே இருந்தன. இவை ஏதோ ஒரு சில நிறுவனங்களுக்கு என்றில்லாமல், மாருதி, ஹூண்டாய், டாடா மோட்டார்ஸ், ஹோண்டா கார்ஸ், வோல்க்ஸ்வேகன், ஸ்கோடா, ஆடி உள்ளிட்ட நிறுவனங்களுக்குமே பொதுவான விதியாக மாறியது.
கார் உற்பத்தித் துறையின் தற்போதைய நிலவரத்தில், விலை தள்ளுபடி என்பது ஒரு பக்கக் கதைதான். ஆனால், புதிய கார்களின் தேவை குறைந்து வருகிறது என்பதுதான், கார் உற்பத்தி நிறுவனங்கள் சந்தித்துவரும் சவால். ஏற்கனவே, இந்தந்த துறையின் கீழ்மட்டத்தில் மிகப்பெரிய பொருளாதார சருக்கலை அடைந்து அழுத்தத்தில் இருக்கும் நிலையில், தற்போது இந்தத் துறையின் முக்கிய ஆணிவேரான காரின் தேவை குறைந்ததால், உயர் தரப்பையும் பொருளாதார அளவில் உலுக்கிப் பார்த்துக்கொண்டிருக்கிறது என்பதே கவலை தரும் விஷயம்.
இந்த பிரச்னை என்பது ஏதோ ஒரு குறிப்பிட்ட சில வகை மாடல் அல்லது நிறுவனங்களுக்கு என்றில்லாமல், அனைத்துத்தரப்புக்கும் பரவலாக இருக்கிறது. அதாவது, தற்போது ஒரு தொழிற்சாலையில், உற்பத்தியாகும் கார், வெளியேறுவதற்கான கால அளவு 80 நாள்கள் வரை ஆகிறது. இது வழக்கமான கால அவளை விட இரண்டு மடங்கு அதிகம். இதனால், இந்த ஆண்டு இறுதியில், உற்பத்தி கட்டுப்படுத்தப்படும், அதாவது 2025ஆம் ஆண்டு பிறந்துவிட்டால், இந்த ஆண்டில் உற்பத்தி செய்த கார்களின் உற்பத்தி ஆண்டு மாறும் என்பதால் கார் தயாரிப்பு நிறுவனங்கள் இந்த முடிவை எடுக்கும் என்றும் கூறப்படுகிறது.
டீலர்களும், நிறுவனங்களும் மிகப்பெரிய தள்ளுபடியை அறிவித்தாலும், அதில் சில நிபந்தனைகளும் இருக்கலாம். கிரெடிட் ஸ்கோர், சில குறிப்பிட்ட நிதி நிறுவனங்களை தேர்ந்தெடுப்பவர்களுக்கு என சில நிபந்தனைகள் அல்லது ஒரு சில நிபந்தனைகள் இணைந்து இருந்தால் இந்த தள்ளுபடிகள் கிடைக்கலாம் என்று அறிவிக்கலாம். அதையும் கார்களை தேர்வு செய்வோர் கவனமாக தேர்வு செய்வது அவசியம்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.