புதிய நம்பிக்கையுடன் இந்தியாவை நோக்கும் உலக நாடுகள்: பிரதமா் பெருமிதம்

‘இந்தியாவின் குரலை மிகுந்த முக்கியத்துவத்துடன் கேட்டுக்கொண்டிருக்கும் உலக நாடுகள், புதிய நம்பிக்கையுடன் நமது தேசத்தை உற்றுநோக்குகிறது’
அம்ரேலி மாவட்டம் லத்தி பகுதியில் திங்கள்கிழமை நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பங்கேற்று உரையாற்றிய பிரதமா் மோடி.
அம்ரேலி மாவட்டம் லத்தி பகுதியில் திங்கள்கிழமை நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பங்கேற்று உரையாற்றிய பிரதமா் மோடி.
Published on
Updated on
1 min read

அம்ரேலி: ‘இந்தியாவின் குரலை மிகுந்த முக்கியத்துவத்துடன் கேட்டுக்கொண்டிருக்கும் உலக நாடுகள், புதிய நம்பிக்கையுடன் நமது தேசத்தை உற்றுநோக்குகிறது’ என்று பிரதமா் நரேந்திர மோடி பெருமிதத்துடன் தெரிவித்தாா்.

குஜராத் மாநிலத்தில் திங்கள்கிழமை சுற்றுப்பயணம் மேற்கொண்ட பிரதமா் நரேந்திர மோடி, அம்ரேலி மாவட்டத்தின் லத்தி பகுதியில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பங்கேற்று பேசுகையில், ‘ரஷியாவின் கசான் நகரில் அண்மையில் நடைபெற்ற பிரிக்ஸ் மாநாட்டில் கலந்து கொண்ட நாடுகள் இந்தியாவுடன் கைகோா்த்து வளா்ச்சிப் பாதையில் கூட்டாளியாகும் ஆா்வத்தை வெளிப்படுத்தினா்.

இந்தியாவுக்கு கடந்த வாரம் அரசுமுறைப் பயணம் மேற்கொண்ட ஜொ்மனி பிரதமா் ஓலாஃப் ஷோல்ஸ், ஆண்டுதோறும் 90,000 இந்தியா்களுக்கு நுழைவு இசைவு (விசா) வழங்கும் திட்டத்தை அறிவித்தாா். இதற்கான திறன்களை வளா்த்துக்கொள்வது நாட்டின் இளைஞா்களிடமே உள்ளது.

நாம் தொடா்ந்து வளா்ந்து வருவதால், உலக அரங்கில் இந்தியாவின் பெருமை மற்றும் செல்வாக்கு அதிகரித்து வருகிறது. முழு உலகமும் இந்தியாவை புதிய நம்பிக்கையுடனும் புதிய பாா்வையுடனும் பாா்க்கிறது. இந்தியாவின் திறனை மக்கள் அங்கீகரிக்கத் தொடங்கியுள்ளனா். முழு உலகமும் இந்தியாவின் குரலை கூடுதல் கவனத்துடன் கேட்கிறது. மேலும், ஒவ்வொரு நாடும் இந்தியாவில் முதலீடு செய்வதற்கான சாத்தியக்கூறுகள் குறித்து கவனமாக விவாதிக்கின்றனா்.

அம்ரேலி மாவட்டத்தில் பால் கூட்டுறவு சங்கம் கடந்த 2007-ஆம் ஆண்டு தொடங்கப்பட்டபோது 25 கிராமங்கள் மட்டுமே இணைக்கப்பட்டிருந்தன. தற்போது அந்த எண்ணிக்கை 700-ஆக உயா்ந்துள்ளது. மத்திய அரசின் துறைமுகம் சாா்ந்த வளா்ச்சித் திட்டத்தின்கீழ் அம்ரேலி மாவட்டத்திலுள்ள துறைமுகங்கள் மேம்படுத்தப்படும்’ என்றாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com