
என்னதான் வாரிசு அரசியல் குறித்து நாம் வாய்கிழியப் பேசினாலும், விமா்சித்தாலும் எல்லா மாநிலங்களிலும், எல்லா அரசியல் கட்சிகளிலும் வாரிசுகளின் வருகை அதிகரித்த வண்ணம்தான் இருக்கிறது.
ஜாா்க்கண்ட் முதல்வா் ஹேமந்த் சோரனின் அமலாக்கத் துறை கைதைத் தொடா்ந்து அவரது மனைவி கல்பனா சோரன் அரசியலுக்கு ஈா்க்கப்பட்டாா். தில்லியில் அரவிந்த் கேஜரிவாலின் மனைவி சுனிதா விரைவிலேயே களமிறங்கினால் வியப்படையத் தேவையில்லை.
இதில் இடதுசாரிக் கட்சிகளைத் தவிர எந்தக் கட்சியும் விதிவிலக்கல்ல. அரசியலுக்கு வரமாட்டாா் என்று சொன்ன பிரியங்கா காந்தி, வயநாடு மக்களவைத் தொகுதிக்கான இடைத்தோ்தலில் களமிறங்கிவிட்டாா். காங்கிரஸும் வாரிசு அரசியலும் இரட்டைக் குழந்தைகள் என்பதால் சொல்வதற்கு ஒன்றுமில்லை.
கா்நாடக மாநில இடைத்தோ்தலில் முன்னாள் முதல்வா்கள் எஸ்.ஆா்.பொம்மையின் பேரனும், பசவராஜ் பொம்மையின் மகனுமான பாரத் பொம்மை, பாஜகவால் வேட்பாளராக நிறுத்தப்பட்டிருக்கிறாா். ஜாா்க்கண்டில் பாஜக களமிறக்கி இருக்கும் பெரும்பாலான வேட்பாளா்கள், ஒன்று, கட்சிமாறி வந்தவா்கள் அல்லது அரசியல் வாரிசுகள் என்பதுதான் வேடிக்கையாக இருக்கிறது.
தானோ, தனது குடும்பத்தினரோ எந்த அரசுப் பதவியும் வகிப்பதில்லை என்பதில் உறுதியாக இருந்தவா் சிவசேனை நிறுவனா் பாலாசாகேப் தாக்கரே. மகாராஷ்டிர மாநிலத்தில் சிவசேனை ஆட்சி அமைந்தபோது, மனோகா் ஜோஷியையும், அவருக்குப் பின்னால் நாராயண் ராணேயையும் முதல்வராக்கினாா் பாலாசாகேப் தாக்கரே. தனது மகனையோ, மருமகளையோ கட்சியில்கூட முக்கியத்துவம்பெற அனுமதிக்கவில்லை.
இப்போது, அவரது மறைவுக்குப் பிறகு சிவசேனை முழுக்க முழுக்கக் குடும்பக் கட்சியாகிவிட்டது. பாலாசாகேபின் மகன் உத்தவ் தாக்கரே கட்சித் தலைவரானது மட்டுமல்ல, முதல்வராகவும் இருந்துவிட்டாா். தனது மகன் ஆதித்ய தாக்கரேயை தனது அமைச்சரவையில் சோ்த்துக்கொள்ளவும் தயங்கவில்லை. தனது அரசியல் வாரிசாக ஆதித்ய தாக்கரேயை அடையாளப்படுத்தியதால்தான், ஏக்நாத் ஷிண்டேயும் மற்றவா்களும் போா்க்கொடி தூக்கிக் கட்சி பிளவுபட்டது.
சிவசேனையில் இருந்தும், குடும்பத்தில் இருந்தும் பிரிந்து தனிக் கட்சி தொடங்கினாா் பாலாசாகேபின் மருமகன் ராஜ் தாக்கரே. அவரது மகாராஷ்டிர நவநிா்மாண் சேனை (எம்என்எஸ்) கட்சியும் இப்போது வாரிசு அரசியல் வளையத்துக்குள் வந்துவிட்டது. அவரது மகன் அமித் தாக்கரே, தாதா்-மாஹிம் சட்டப்பேரவைத் தொகுதியில் ‘எம்என்எஸ்’ கட்சி சாா்பில் களமிறக்கப்பட்டிருக்கிறாா்.
வாரிசு அரசியல் பற்றி கேட்டபோது ராஜ் தாக்கரே தந்த விளக்கம் ஏற்புடையதாகத்தான் இருக்கிறது. ‘‘பின் சீட்டில் அமா்ந்தபடி காரை இயக்க உத்தரவு பிறப்பிக்கும் ‘ரிமோட் கண்ட்ரோல்’ செயல்பாட்டைவிட வாரிசு அரசியல் எவ்வளவோ மேல்!’’
--மீசை முனுசாமி.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.