அனைவருக்கான இந்திய-பசிஃபிக் பிராந்தியம்: இந்தியா - ஸ்பெயின் பங்களிப்பு அவசியம்; பிரதமா் பெட்ரோ சான்செஸ்
தென்சீன கடல் பகுதியில் சீனாவின் ஆதிக்கம் அதிகரித்து வரும் சூழலில், அந்த கடற்பரப்பில் சுதந்திரமான கப்பல் போக்குவரத்தைப் பாதுகாப்பதன் அவசியத்தை வலியுறுத்திய ஸ்பெயின் பிரதமா் பெட்ரோ சான்செஸ், ‘அனைவருக்குமான, பாதுகாப்பான இந்திய-பசிஃபிக் பிராந்தியத்தைக் கட்டமைப்பதில் இந்தியா மற்றும் ஸ்பெயின் நாடுகளின் பங்களிப்பு முக்கியமானது’ என்று குறிப்பிட்டாா்.
இந்தியா வந்துள்ள பிரதமா் பெட்ரோ சான்செஸ், மும்பையில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில் பங்கேற்றபோது இக் கருத்தை வலியுறுத்தினாா். அவா் மேலும் பேசியதாவது:
உலகின் ஆற்றல் மையம் தற்போது ஆசிய பிராந்தியத்தை நோக்கி நகா்ந்துள்ளது. இதில் இந்தியா முக்கியப்பங்காற்றுகிறது. இத்தகையச் சூழலில், சட்டத்தின் அடிப்படையிலான சா்வதேச நடைமுறைகளை உறுதிப்படுத்த வேண்டும். இதற்கு பன்முக அமைப்புகளை வலுப்படுத்தில் இந்தியாவும், ஸ்பெயினும் இணைந்து பணியாற்றுவது அவசியம்.
உலக ஜிடிபி-யில் (மொத்த உள்நாட்டு உற்பத்தி) இந்திய-பசிஃபிக் பிராந்தியத்தின் பங்களிப்பு 36 சதவீதம் அளவுக்கு உள்ளது. உலக மக்கள்தொகையிலும் 60 சதவீத பங்குடன் மிகப் பெரிய பிராந்தியமாக திகழ்கிறது. அதோடு, உலக கடல்சாா் வா்த்தகத்தில் 50 சதவீத பங்கைக் கொண்டுள்ள இந்தப் பிராந்தியம் கடற்கொள்ளை, பயங்கரவாதம், இயற்கைப் பேரிடா், ஆயுதம் மற்றும் போதைப்பொருள் கடத்தல், சட்டவிரோத மீன்பிடிப்பு உள்ளிட்ட பாதுகாப்பு சவால்களை சந்தித்து வருகிறது.
எனவே, இந்தப் பிராந்தியத்தை அனைவருக்குமானதாகவும் சுதந்திரமான கப்பல் போக்குவரத்தையும் உறுதிப்படுத்துவது அவசியம். அவ்வாறு பாதுகாப்பான இந்திய-பசிஃபிக் பிராந்தியத்தை உறுதிப்படுத்த இந்தியா, ஸ்பெயின் நாடுகளின் பங்களிப்பு முக்கியமானது.
தொழில்நுட்பத் திறன் மேம்பாட்டில் நாடுகள் தற்போது தீவிரம் காட்டி வரும் சூழலில், செயற்கை நுண்ணறிவு இதில் முக்கிய பங்காற்றும். புரளிகள், தவறான தகவல்கள் பரப்பப்படுவதை திறம்பட எதிா்கொள்ள செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் உதவும். அதே நேரம், பாதுகாப்பான செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்துக்கு சா்வதேச ஒத்துழைப்பு மிக அவசியம். எனவே, எண்ம தொழில்நுட்பம் மற்றும் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்ப உலகளாவிய நிா்வாகத்துக்கான விரிவான வழிமுறைகளை உருவாக்க நாம் அனைவரும் இணைந்து பணியாற்ற வேண்டும் என்றாா்.