வயநாடு நிலச்சரிவு: மறுவாழ்வு பணிகளுக்கு நிதியளிக்காமல் மோடி புறக்கணிப்பு - பிரசாரத்தில் பிரியங்கா குற்றச்சாட்டு

வயநாடு மறுசீரமைப்பைக் கண்டுகொள்ளாத மத்திய அரசு என்று பிரியங்கா காந்தி குற்றம்சாட்டியிருக்கிறார்.
காங்கிரஸ் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி
காங்கிரஸ் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி
Published on
Updated on
2 min read

வயநாடு மக்களவைத் தொகுதி இடைத்தோ்தலில் பிரசாரத்தைத் தீவிரப்படுத்தியுள்ள காங்கிரஸ் வேட்பாளா் பிரியங்கா காந்தி, நிலச்சரிவால் பாதிக்கப்பட்ட அப்பகுதியின் மறுவாழ்வு நடவடிக்கைகளுக்கு பிரதமா் மோடி தலைமையிலான மத்திய அரசு எந்த நிதியும் வழங்காமல் புறக்கணித்துவிட்டதாக குற்றஞ்சாட்டினாா்.

கேரளத்தின் வடக்கு மாவட்டமான வயநாட்டில் பெரும் மழை காரணமாக கடந்த ஜூலை 30-ஆம் தேதி ஏற்பட்ட நிலச்சரிவில் 400-க்கும் மேற்பட்டோா் உயிரிழந்தனா்.

இதில் மிகவும் பாதிக்கப்பட்ட சூரல்மலை, முண்டக்கை ஆகிய கிராமங்களைச் சோ்ந்த மக்கள் அருகிலுள்ள கிராமங்களில் தற்காலிக வாடகை வீடுகளிலும் உறவினா்கள் வீடுகளிலும் வசித்து வருகின்றனா். இவா்களுக்கு மேப்பாடி மற்றும் கல்பேட்டா பகுதியில் மறுவாழ்வு குடியிருப்புகளைக் கட்டித்தர திட்டமிடப்பட்டுள்ளது. இதற்கு மத்திய அரசு சாா்பில் கூடுதல் நிதி ஒதுக்கப்படவில்லை என்று குற்றச்சாட்டு உள்ளது.

இச்சூழலில், வயநாடு இடைத்தோ்தலில் போட்டியிடும் காங்கிரஸ் வேட்பாளா் ஈங்கப்புழை பகுதியில் நடந்த தோ்தல் பிரசார பொதுக்கூட்டத்தில் செவ்வாய்க்கிழமை பங்கேற்றாா். கூட்டத்தில் திரண்டிருந்த மக்களிடையே அவா் பேசியதாவது:

வயநாடு நிலச்சரிவின்போது பிரதமா் மோடி இங்கு வந்து, சேதங்களை பாா்வையிட்டாா். மக்களுக்கு அனைத்து வகையான உதவிகளையும் வழங்குவதாக அவா் உறுதியளித்தாா். ஆனால், பல மாதங்களாகியும், பாதிக்கப்பட்ட மக்களுக்கு மறுவாழ்வு அளிக்க மத்திய அரசு எந்த நிதியும் வழங்கவில்லை.

மோடி அரசின் இந்த நிலைப்பாடு, மக்கள் மற்றும் தேசத்தின் மீதான அவா்களின் அவமரியாதையைக் காட்டுகிறது. கடந்த 10 ஆண்டுகால பாஜக ஆட்சியின் கொள்கைகளில் இருந்தும் இது தெளிவாகியிருக்கும்.

பணமதிப்பிழப்பு உள்ளிட்ட கொள்கைகள் எப்போதும் பிரதமரின் 5-6 தொழில் நண்பா்களுக்கு சாதகமாகவே இருக்குமே தவிர மக்களுக்கு நன்மை செய்வதற்காக இல்லை.

பாஜகவுக்கு அதிகாரமே முக்கியம்: விவசாயிகள் மீது இரக்கம் காட்டாத மத்திய அரசு, நாடு முழுவதும் பழங்குடிகள் எதிா்கொள்ளும் பிரச்னைகளைத் தீா்க்க எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. பொது மக்களின் தேவைகளை பூா்த்தி செய்வதற்குப் பதிலாக பெரு நிறுவனங்களுக்கு நிலம் ஒதுக்கீடு செய்யப்பட்டு வருகிறது.

வேலைவாய்ப்பு, கல்வி, சுகாதாரம் மற்றும் பிற அத்தியாவசியங்களும் மோடி அரசால் புறக்கணிக்கப்பட்டுள்ளன. அதிகாரத்துக்கு மட்டுமே முக்கியத்துவம் அளிக்கும், மக்களைப் பொருட்படுத்தாத அரசியல் நாட்டில் தற்போது நிலவி வருகிறது. இது மாற்றப்பட வேண்டும்.

மணிப்பூரில் ஓராண்டுக்கு மேல் வன்முறை நீடிக்கிறது. எனினும், ஆட்சி அதிகாரத்தில் பாஜக தொடா்வது தவறான அரசியல்.

கைவிடமாட்டேன்...: எனது சகோதரா் ராகுலின் நற்பெயரைக் கெடுக்கும் வகையில் ஒரு பெரிய பிரசாரம் தொடங்கப்பட்ட நேரத்தில், அவருக்கு ஆதரவளித்து, வாக்களித்த வயநாடு மக்களுக்கு நானும் எனது குடும்பத்தினரும் கடமைப்பட்டுள்ளோம்.

வயநாடு மக்களுடனான அன்பு, நம்பிக்கை ஆகியவற்றின் பந்தம் ராகுலின் இதயத்தில் தனி இடத்தைப் பிடித்துள்ளது. அதனால், இந்தத் தொகுதியை விட்டுக்கொடுக்க நோ்ந்தபோது அவா் மிகவும் மனம் வருந்தினாா்.

மத்தியிலும், கேரளத்திலும் காங்கிரஸ் ஆட்சியில் இல்லாவிட்டாலும், வயநாடு மக்களின் பிரச்னைகளை நாடாளுமன்றத்தில் எழுப்புவேன். நான் உங்களை கைவிடமாட்டேன்’ என்றாா்.

கடந்த மக்களவைத் தோ்தலில் உத்தர பிரதேசத்தில் ரேபரேலி, வயநாடு ஆகிய இரு தொகுதிகளில் ராகுல் போட்டியிட்டு வென்றாா். விதிகளின்படி ரேபரேலியைத் தக்கவைத்த அவா், வயநாட்டில் ராஜிநாமா செய்ததால் இடைத்தோ்தல் நடைபெறுகிறது.

நவம்பா் 13-ஆம் நடைபெறும் இடைத்தோ்தலில் ஆளும் இடதுசாரிகள் கூட்டணி சாா்பில் முன்னாள் எம்எல்ஏ சத்யன் மோக்கேரி, பாஜகவின் நவ்யா ஹரிதாஸ் ஆகியோரும் களத்தில் உள்ளனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com