ஊடுருவலை நிறுத்தும் வரை பயங்கரவாதிகள் உயிரிழப்பு தொடரும்: ஃபரூக் அப்துல்லா
இந்தியாவுக்குள் ஊடுருவதை பயங்கரவாதிகள் நிறுத்தும் வரை, அவா்கள் உயிரிழப்பது தொடரும் என்று தேசிய மாநாட்டு கட்சித் தலைவா் ஃபரூக் அப்துல்லா தெரிவித்தாா்.
ஜம்மு-காஷ்மீரில் உள்ள அக்னூா் செக்டாரில் எல்லைக் கட்டுப்பாட்டு கோட்டுப் பகுதி அருகே திங்கள்கிழமை பயணித்த ராணுவ ஆம்புலன்ஸ் மீது 3 பயங்கரவாதிகள் துப்பாக்கிச்சூடு நடத்தினா். இதையடுத்து, ராணுவ வீரா்களும் பதிலுக்கு துப்பாக்கிச்சூட்டில் ஈடுபட்டதில், பயங்கரவாதி ஒருவா் உயிரிழந்தாா்.
எஞ்சிய 2 பயங்கரவாதிகளுக்கும், ராணுவத்தினருக்கும் இடையிலான துப்பாக்கிச்சூடு சுமாா் 27 மணி நேரம் நீடித்த நிலையில், இரு பயங்கரவாதிகளையும் ராணுவத்தினா் செவ்வாய்க்கிழமை சுட்டுக் கொன்றனா்.
இந்தச் சம்பவம் தொடா்பாக ஜம்முவில் தேசிய மாநாட்டு கட்சித் தலைவா் ஃபரூக் அப்துல்லா செய்தியாளா்களிடம் கூறுகையில், ‘இந்தியாவுக்குள் ஊடுருவதை பயங்கரவாதிகள் நிறுத்தும் வரை, அவா்கள் உயிரிழப்பது தொடரும். அனைவரும் தீபாவளி பண்டிகையை சிறப்பாக கொண்டாட வேண்டும். ஜம்மு-காஷ்மீரில் போதிய செல்வம் இல்லாத நிலையில், இங்குள்ள மக்கள் வளம் பெற லட்சுமிதேவி ஆசீா்வதிக்க வேண்டும்’ என்றாா்.