
நடைபாதை, சுயவேலைவாய்ப்பு அல்லது தற்காலிக தொழிலாளர்கள் சமூக பாதுகாப்புடன் இருப்பதை உறுதிக்கான வழிவகை காண அரசு தீவிரமாக ஆய்வு செய்வதாக மத்திய தொழிலாளர் நலன் மற்றும் வேலைவாய்ப்புத் துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா ஞாயிற்றுக்கிழமை தெரிவித்துள்ளார். தற்காலிக தீர்வாக "இ-ஷ்ரம்' இருப்பதாகவும் அமைச்சர் தெரிவித்தார்.
தில்லி ஷ்ரம் சக்தி பவனில் உள்ள மத்திய தொழிலாளர்த் துறை அமைச்சக அலுவலகத்தில் அமைச்சர் மன்சுக் மாண்டவியா துறை அதிகாரிகளுடன் ஞாயிற்றுக்கிழமை ஆலோசனை மேற்கொண்டார்.
இந்தக் கூட்டத்துக்குப் பிறகு செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது:
தற்போது மிகப்பெரிய அளவில் மின்னணு வர்த்தகம், உணவு விநியோக பணிகளில் (கிக்) தற்காலிக பணியாளர்கள் (செயலிகள் மூலம் பணி ), சுயவேலைவாய்ப்புப் பணியாளர்கள், நடைபாதைப் பணியாளர்கள் போன்றவர்கள் அதிகரித்து வருகின்றனர். இவர்கள் சமூகப் பாதுகாப்புத் திட்டங்களின் கீழ் இருப்பதை உறுதி செய்ய அரசு தீவிரமாக ஆராய்ந்து வருகிறது. சமூதத்தில் முக்கிய அங்கமாக இருக்கும் இந்த அமைப்பு சாரா தொழிலாளர்களின் நல்வாழ்வுக்கு சமூகப் பாதுகாப்பு நடவடிக்கைகளைச் செயல்படுத்த மத்திய அரசு முழுமையாக உறுதிபூண்டு வழிவகைகளைக் கண்டு வருகிறது.
இருப்பினும், தற்போது இத்தகைய தொழிலாளர்கள் வசதிக்காக, "இ-ஷ்ரம்' தளம் உள்ளது. இதில், 30 தொழில் பிரிவுகளும் 400 துணைத் தொழில் பிரிவுகளும் இந்த உள்ளன. இதன் கீழ் அமைப்பு சாரா தொழிலாளர்கள் சுய பிரகடன அடிப்படையில் இந்தத் தளத்தில் பதிவு செய்யலாம். இந்தப் பிரிவுகளின்படி தொழிலாளர் சுய பிரகடன அடிப்படையில் பதிவு செய்யலாம். இ-ஷ்ரம், தேசிய தொழில் சேவை தளத்துடன் ஒருங்கிணைக்கப்பட்டுள்ளது. ஒரு அமைப்புசாரா தொழிலாளர் தனது தனித்துவக் கணக்கு எண்ணை (யுஏஎன்) பயன்படுத்தி பதிவு செய்து பொருத்தமான வேலைவாய்ப்புகளைத் தேடலாம். இந்தத் தளம் பிரதமரின் "ஷ்ரம்-யோகி மான்தன்' உடன் ஒருங்கிணைக்கப்பட்டுள்ளது. 18 முதல் 40 வயதுக்குள்பட்ட அமைப்புசாரா தொழிலாளர்களுக்கான ஓய்வூதியத் திட்டத்தையும் வழங்குகிறது.
தனிப்பட்ட தொழிலாளி மட்டுமலல்ல இத்தகைய தொழிலாளர்களை வேலைக்கு அமர்த்தும் முகமைகளும் தங்கள் தொழிலாளர்களை இந்தத் தளத்தில் பதிவு செய்வது பயன் அளிக்க அரசு கேட்டுக் கொள்கிறது. சிக்கலற்ற பதிவு செயல்முறையை உறுதி செய்வதற்கு இணைய சாளரம் கிடைக்கும்.
நாட்டில் 'கிக்', நடைபாதை தொழிலாளர்களின் வேலைவாய்ப்பு நிலையைப் பொருட்படுத்தாமல் சமூக பாதுகாப்புக்கான உரிமை வழங்கியுள்ளது. முதன்முறையாக இத்தகைய தொழிலாளர்களை வரையறுக்கும் சமூக பாதுகாப்பு குறியீட்டை வழங்கியுள்ளது. நமது பொருளாதாரத்துக்குள் இத்தகைய தொழிலாளர்களின் பங்கை அங்கீகரித்து முறைப் படுத்தப்பட்டுள்ளது. அனைவரையும் உள்ளடக்கிய வளர்ச்சியிலும் "கிக்' தொழிலாளர்கள் உள்பட அனைத்துப் பிரிவு தொழிலாளர்களுக்கும் அதிகாரம் அளிப்பதில் அரசு உறுதிபூண்டுள்ளது என்றார் அவர்.
இந்தக் கூட்டத்தில் மத்திய தொழிலாளர் நலன், வேலைவாய்ப்பு அமைச்சகத்தின் செயலர் சுமிதா தவ்ரா, மற்றும் அமைச்சகத்தின் மூத்த அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.