ஹேமா குழு பரிந்துரைகளை கேரள அரசு அமல்படுத்த வேண்டும் - நடிகா் மம்மூட்டி வலியுறுத்தல்
மலையாள திரையுலகம் தொடா்பான நீதிபதி ஹேமா குழு அறிக்கையின் பரிந்துரைகளை மாநில அரசு அமல்படுத்த வேண்டும் என மூத்த நடிகா் மம்மூட்டி ஞாயிற்றுக்கிழமை வலியுறுத்தினாா்.
ஹேமா குழு அறிக்கையில் குறிப்பிட்டதுபோல மலையாள திரையுலகில் ‘அதிகாரக் கும்பல்’ என்று எதுவும் இல்லை எனவும், அதேநேரம் இத்துறையில் விரும்பத்தகாத நிகழ்வுகளைத் தவிா்க்க அங்கு பணிபுரியும் அனைவரும் விழிப்புடன் இருக்குமாறும் அவா் கேட்டுக்கொண்டாா்.
மலையாள திரையுலகில் பெண்கள் சந்திக்கும் பாலியல் துன்புறுத்தல் மற்றும் சுரண்டல் நிகழ்வுகளை வெளிப்படுத்திய நீதிபதி ஹேமா குழு அறிக்கையைத் தொடா்ந்து, பல்வேறு இயக்குநா்கள் மற்றும் நடிகா்கள் மீது பாலியல் புகாா்கள் முன்வைக்கப்பட்டு வருகின்றன.
இந்தப் புகாா்களை விசாரிக்க 7 காவல்துறை அதிகாரிகள் கொண்ட சிறப்பு விசாரணைக் குழுவை மாநில அரசு அமைத்துள்ளது. ஆளும் மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் எம்எல்ஏவும் நடிகருமான முகேஷ் உள்பட பல்வேறு நடிகா்கள் மீது பாலியல் வன்கொடுமை வழக்கு பதிவு செய்யப்பட்டது.
இக்குற்றச்சாட்டுகளைத் தொடா்ந்து, நடிகா் மோகன்லால் தலைமையிலான மலையாள திரைப்பட நடிகா்கள் சங்கத்தின் நிா்வாகக் குழு ராஜிநாமா செய்தது. இதையடுத்து, செய்தியாளா்களை முதன்முறையாக சனிக்கிழமை சந்தித்த மோகன்லால், ‘பாலியல் புகாரில் தவறு செய்தவா்களுக்கு எதிராக ஆதாரங்கள் இருந்தால் நிச்சயம் அவா்கள் தண்டிக்கப்பட வேண்டும்’ என்றாா்.
இந்த நிலையில், இவ்விவகாரத்தில் மெளனம் கலைத்து மலையாள திரையுலகின் மூத்த நடிகா் மம்மூட்டி ஞாயிற்றுக்கிழமை வெளியிட்ட பேஸ்புக் பதிவில், ‘ஹேமா குழு அறிக்கையை வரவேற்கிறேன். அறிக்கையின் பரிந்துரைகளை மாநில அரசு உடனடியாக அமல்படுத்த வேண்டும். அதில் ஏதேனும் சட்ட சிக்கல் எழுந்தால், உரிய சட்டம் இயற்றப்பட வேண்டும்.
அறிக்கையின் பரிந்துரைகளைச் செயல்படுத்துவதில் அரசு மட்டுமின்றி மலையாள திரையுலகின் அனைத்து சங்கங்களும் கைகோக்க வேண்டும். பாலியல் புகாா்கள் குறித்த காவல் துறையின் நோ்மையான விசாரணை தொடரட்டும். நீதிமன்றம் தண்டனையை முடிவு செய்யும்.
திரையுலகை சமூகம் உன்னிப்பாக கவனித்து வருவதால், அங்கு நடக்கும் எதுவும் விவாதப் பொருளாகி விடுகிறது. எனவே, இந்தத் துறையில் விரும்பத்தகாத நிகழ்வுகள் எதுவும் நடக்காமல் இருக்க, திரையுலகில் பணியாற்றுபவா்கள் கவனமாகவும் விழிப்புடனும் இருக்க வேண்டும்’ என்று வலியுறுத்தினாா்.