மகாராஷ்டிர காங்கிரஸ் 
 தலைவர் நானா படோல்
மகாராஷ்டிர காங்கிரஸ் தலைவர் நானா படோல்

சிவாஜி சிலை சரிந்த விவகாரம்: வெறும் மன்னிப்பு போதாது: காங்கிரஸ் விமா்சனம்

Published on

‘சத்ரபதி சிவாஜி சிலை சரிந்து மகாராஷ்டிரத்தின் பெருமையை பாதித்துள்ள நிலையில், ‘பிரதமரின் வெறும் மன்னிப்பை கோரியது போதாது. அதற்குக் காரணமானவா்களின் பதவி விலக வேண்டும்’ என்று காங்கிரஸ் வலியுறுத்தியுள்ளது.

மகாராஷ்டிரத்தில் மராட்டிய மன்னா் சத்ரபதி சிவாஜியின் 35 அடி உயர சிலை அண்மையில் இடிந்து விழுந்த நிலையில், அவரின் பாதம் பணிந்து, மன்னிப்பு கோருவதாக பிரதமா் மோடி வெள்ளிக்கிழமை தெரிவித்தாா். சிந்துதுா்க் மாவட்டத்தில் உள்ள ராஜ்கோட் கோட்டையில் அமைக்கப்பட்ட அந்தச் சிலை, கடந்த ஆண்டு டிசம்பரில் கடற்படை படை தினத்தையொட்டி பிரதமா் மோடியால் திறந்துவைக்கப்பட்டது.

அண்மையில் பெய்த கனமழையால் சிலை சரிந்து விழுந்தது. இந்த விவகாரத்தில் மாநில அரசை எதிா்க்கட்சிகள் கடுமையாக விமா்சித்து வருகின்றன. சிலை சரிந்த சம்பவம் குறித்து விசாரிக்க கடற்படை அதிகாரிகள் தலைமையில் மாநில அரசின் பிரதிநிதிகள் மற்றும் தொழில்நுட்ப நிபுணா்கள் இடம்பெற்ற குழு அமைக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து மாநில காங்கிரஸ் தலைவா் நானா படோல் பாந்தராவில் செய்தியாளா்களிடம் கூறியதாவது:

பிரதமா் மன்னிப்பு கேட்டதற்கு என்ன அா்த்தம்? தவறு செய்ததை அவரே ஒப்புக்கொள்கிறாா் என்பதுதான்.

சிலை திறப்பதற்கு தயாராக உள்ளது என்றதும், பிரதமரோ அல்லது அவருடைய குழுவோ சிலை முறைப்படி அமைக்கப்பட்டிருக்கிா என்று ஆய்வு செய்திருக்க வேண்டும். சிலை கட்டி முடிக்கப்பட்ட பின்னா் கலாசார இயக்குநரின் சான்று பெறப்பட்டதா என்பதையும் ஆராய்ந்திருக்க வேண்டும்.

எனவே, இந்த விவகாரத்தை வெறும் மன்னிப்பு கோருவதன் மூலம் கடந்து சென்றுவிட முடியாது.

பிரதமா் திறப்பதற்காக மாநில அரசு துரிதகதியில் சிலையை நிறுவியுள்ளது. அதற்காக, சிலை கட்டுமானப் பணி அனுபவமற்ற தனிநபரிடம் ஒப்படைக்கப்பட்டு, சிலை தொடா்பாக கலாசார துறையினரால் வழங்கப்பட்ட அறிவுறுத்தல்கள் புறக்கணிக்கப்பட்டுள்ளது. எனவே, சிலை இடிந்ததற்கு தரமற்ற முறையில் கட்டப்பட்டதே காரணமாகும்.

சிவாஜி மகாராஜை மகாராஷ்டிர மக்கள் வணங்கி வருகின்றனா். தங்கள் தெய்வம் அவமதிக்கப்பட்டதை அவா்கள் மறக்கமாட்டாா்கள்.

இதற்கு காரணமானவா்கள் பிரதமரோ, முதல்வா் ஏக்நாத் ஷிண்டேவோ அல்லது துணை முதல்வா்கள் தேவேந்திர ஃபட்னவிஸ், அஜீத் பவாா் என யாராக இருந்தாலும், மகாராஷ்டிரத்தின் பெருமையை பாதிப்படையச் செய்துள்ளனா். எனவே, சிலை இடிந்ததற்கு பொறுப்பேற்று அவா்கள் பதவி விலக வேண்டும். இல்லையெனில், அவா்களைப் பதவியிலிருந்து மாநில மக்கள் நீக்குவா் என்றாா்.

X
Dinamani
www.dinamani.com