மும்பை ரயில் நிலையத்தில், ஓடி வந்து ரயிலில் ஏறும்போது, கீழே விழுந்து மிகப்பெரிய விபத்தில் சிக்கவிருந்த நபரை, காவலர் ஒருவர் ஓடிச்சென்று காப்பாற்றிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.
மும்பை ரயில் நிலையத்தில் வந்து நின்ற ரயில் ஒன்று புறப்பட்டபோது, ஓடி வந்த நபர், அதில் ஏற முயன்று, கால் தவறி ரயிலுக்கும், நடைமேடைக்கும் இடையில் விழுந்தார்.
ரயில் அவரை மெல்ல உரசிச்சென்றுகொண்டிருந்தநிலையில், அங்கு பணி முடிந்து வீடு திரும்பிக்கொண்டிருந்த தலைமைக் காவலர் பலாசோ தாகே உடனடியாக செயல்பட்டு, அவரை பிடித்து இழுத்தார். கண் இமைக்கும் நேரத்தில் என்ன செய்வது என்றெல்லாம் யோசிக்காமல், அவர் செயல்பட்டதால், இன்னுயிர் ஒன்று காப்பாற்றப்பட்டுள்ளது.
அவரை வெளியே மீட்டதும், அங்கிருந்தவர்கள் ஓடி வந்து, அவரது உடல்நிலையை ஆராய்ந்தனர். நல்வாய்ப்பாக அவர் காயமின்றி உயிர் தப்பினார்.
துரிதமாக செயல்பட்டதால் உயிர் ஒன்று காப்பாற்றப்பட்ட விடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
தலைமைக் காவலரின் செயலால்தான் பாலாசோ தாகே காப்பாற்றப்பட்டதாகவும், இல்லையெனில், அவர் இல்லை என்றும் அங்கிருந்தவர்கள் கூறுகிறார்கள்.