
தில்லி கலால் கொள்கையுடன் தொடர்புடைய பணமோசடி வழக்கில் ஆம் ஆத்மி கட்சியின் முன்னாள் தகவல் தொடர்பு பொறுப்பாளர் விஜய் நாயருக்கு உச்ச நீதிமன்றம் ஜாமீன் வழங்கி உத்தரவிட்டுள்ளது.
2021-ஆம் ஆண்டில் உருவாக்கப்பட்ட புதிய கலால் கொள்கை உருவாக்கத்தில் நிகழ்ந்ததாகக் கூறப்படும் முறைகேடுகள் தொடா்பாக தில்லி துணைநிலை ஆளுநா் வி. கே. சக்சேனா, சிபிஐ விசாரணைக்கு பரிந்துரைத்தார். இதையடுத்து, மத்திய புலனாய்வுத் துறையால் பதிவு செய்யப்பட்ட எஃப்ஐஆரில் இருந்து பணமோசடி வழக்கை அமலாக்கத் துறை பதிவு செய்தது.
பிரமாணப் பத்திரத்தைத் தாக்கல் செய்ய அமலாக்கத் துறை தரப்பு வழக்குரைஞர் ஒரு வாரக்கால அவகாசம் கோரியதையடுத்து நீதிபதிகள் ஹிருஷிகேஷ் ராய் மற்றும் எஸ்விஎன் பாட்டி ஆகியோர் அடங்கிய அமர்வு வழக்கை ஒத்திவைத்தது. நாயரின் மனு மீது ஆகஸ்ட் 12-ம் தேதி அமலாக்கத் துறை பதிலளிக்குமாற உச்ச நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியது.
முன்னதாக பணமோசடி வழக்கில் விஜய் நாயா் மற்றும் பிற இணை குற்றம் சாட்டப்பட்டவா்களுக்கு ஜூலை 3-ஆம் தேதி ஜாமீன் வழங்க உயர் நீதிமன்றம் மறுத்துவிட்டது.
இந்த நிலையில், கடந்த வாரம் விஜய் நாயரின் ஜாமீன் மனு மீதான விசாரணையை உச்ச நீதிமன்றம் ஒத்திவைத்த நிலையில், இன்று இந்த வழக்கு விசாரணைக்கு வந்ததையடுத்து, விஜய் நாயருக்கு ஜாமீன் வழங்கி உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
கலால் மோசடி வழக்கில் முன்னதாக மணீஷ் சிசோடியா மற்றும் கவிதாவுக்கு ஜாமீன் வழங்கியது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.