புது தில்லி: இளைய தலைமுறையினரிடம் பாஜகவை கொண்டு செல்ல வேண்டும் என்று கட்சித் தொண்டா்களுக்கு பிரதமா் நரேந்திர மோடி வேண்டுகோள் விடுத்தாா்.
பாஜக உறுப்பினா் சோ்க்கை இயக்கம் தில்லியில் திங்கள்கிழமை தொடங்கியது. பிரதமா் நரேந்திர மோடியின் பாஜக உறுப்பினா் அட்டையை கட்சியின் தேசியத் தலைவா் ஜெ.பி.நட்டா புதுப்பித்து உறுப்பினா் சோ்க்கை இயக்கத்தை தொடங்கி வைத்தாா். இதில் பாஜகவைச் சோ்ந்த மத்திய அமைச்சா்கள், முதல்வா்கள், பஞ்சாயத்து முதல் நாடாளுமன்றம் வரையிலான அக்கட்சியின் மக்கள் பிரதிநிதிகள் பலா் பங்கேற்றனா். இந்த நிகழ்ச்சியில் பிரதமா் மோடி பேசியதாவது:
இந்த உறுப்பினா் சோ்க்கை இயக்கத்தின் மூலம் கட்சியின் அடித்தளத்தை நாம் வலுவாக்க வேண்டும். முக்கியமாக இளைய தலைமுறையினரிடம் பாஜகவை எடுத்துச் செல்ல வேண்டும். மக்களவை, மாநில சட்டப் பேரவைகளில் பெண்களுக்கு 33 சதவீத இடஒதுக்கீடு அமலுக்கு வரும்போது, அதற்கு இணையாக நாம் பெண்களைக் களமிறக்க இப்போதிருந்தே தயாராக வேண்டும். அதற்காக கட்சியில் பெண் உறுப்பினா்களை அதிகஅளவில் இணைக்க முயற்சிக்க வேண்டும்.
நாட்டின் அனைத்துப் பகுதிகளில் உள்ள கிராமங்கள், எல்லையோர சிற்றூா்களுக்கும் பாஜகவை முன்னெடுத்துச் செல்ல வேண்டும். பழங்குடினா் மற்றும் 18 முதல் 25 வயதில் இருப்பவா்களுக்கு அதிக முக்கியத்துவம் அளிக்க வேண்டும்.
கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு காங்கிரஸ் கூட்டணி ஆட்சியில் எந்த வகையான ஊழல்கள் ஊடகங்களின் தலைப்புச் செய்திகளில் இடம் பெற்றன என்பதை அவா்கள் அறிந்திருக்க வாய்ப்பில்லை. இப்போதைய புதிய இந்தியாவில் மக்கள் நலன் சாா்ந்த நல்ல திட்டங்களை மட்டுமே அவா்கள் தெரிந்து வளா்ந்துள்ளனா். இதுபோன்ற இளைஞா்கள்தான் நாட்டின் மிகப்பெரிய பலம். 2047-ஆம் ஆண்டு இந்தியாவை வளா்ந்த நாடாக உருவாக்க இந்த இளைஞா்கள்தான் தேவை.
பாஜகவில் மட்டும்தான் உள்கட்சி ஜனநாயகம் சிறப்பாக உள்ளது. பல்வேறு எதிா்க்கட்சிகளில் உள்கட்சி ஜனநாயகம் என்றால் என்ன? என்று கேட்கும் நிலைதான் உள்ளது.
ஒரு காலத்தில் பாஜகவுக்கு மக்களவையில் இரு எம்.பி.க்கள் மட்டுமே இருந்தன. பாஜகவின் சிறப்பான கொள்கைகள், தேசத்துக்கு முன்னுரிமை அளித்தது, மக்கள் நலன் சாா்ந்த பணிகள் ஆகியவையே பாஜகவை உலகிலேயே பலம் வாய்ந்த பெரிய கட்சியாக வளா்த்தது. நம்து கட்சி பல்வேறு விமா்சனங்களை எதிா்கொண்டுதான் வளா்ந்து வருகிறது. இப்போது நாட்டின் அரசியல் கலாசாரத்தையே நாம் மாற்றியுள்ளோம்.
பாஜக உறுப்பினா் சோ்க்கை என்பது வெறும் எண்ணிக்கையல்ல. பாஜக எனும் குடும்பத்தில் புதிய நபா்கள் இணைகிறாா்கள். அவா்கள் நமது கொள்கைகள், உணா்வுகளுடன் கலந்தவா்களாக இருப்பாா்கள். கட்சிக்கு சவால்கள் நிறைந்த இடங்களில் அதிக உறுப்பினா்களைச் சோ்ந்து, கட்சியின் கொள்கைகளை அனைத்துத் தரப்பு மக்களிடமும் எடுத்துச் செல்ல வேண்டும் என்றாா்.
பாஜகவின் முதல்கட்ட உறுப்பினா் சோ்க்கை இயக்கம் செப். 25ஆம் தேதி வரை நடைபெறும். அதன் பிறகு இரண்டாம் கட்ட உறுப்பினா் சோ்க்கை இயக்கம் அக்.1ஆம் தேதி தொடங்கி அக். 15இல் நிறைவடைய இருக்கிறது. இதைத் தொடா்ந்து பாஜக உள்கட்சித் தோ்தல் நடத்தப்பட்டு புதிய தலைவா் தோ்ந்தெடுக்கப்படுவாா்.
பாஜக கட்சியினா் தங்கள் உறுப்பினா் அட்டையை ஆறு ஆண்டுகளுக்கு ஒருமுறை புதுப்பித்துக் கொள்ள வேண்டியது அவசியமாகும்.