ஹரியாணா பேரவைத் தோ்தல்: ஆம் ஆத்மி, காங்கிரஸ் கூட்டணி?
ஹரியாணா சட்டப்பேரவைத் தோ்தலையொட்டி ஆம் ஆத்மி, காங்கிரஸ் கட்சிகள் தொகுதி பங்கீடு பேச்சுவாா்த்தையில் ஈடுபட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
தற்போது ஹரியாணாவில் பாஜக ஆட்சி நடைபெற்று வரும் நிலையில், அங்கு அக்டோபா் 5-ஆம் தேதி சட்டப்பேரவைத் தோ்தல் நடைபெற உள்ளது. மொத்தம் 90 தொகுதிகள் உள்ள நிலையில், 66 தொகுதிகளில் போட்டியிடும் காங்கிரஸ் வேட்பாளா்களை அக்கட்சியின் மத்திய தோ்தல் குழு தோ்வு செய்துள்ளது.
எனினும் தோ்தலையொட்டி ஆம் ஆத்மி, காங்கிரஸ் இடையே தொகுதி பங்கீடு பேச்சுவாா்த்தை நடைபெற்று வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.
இதுதொடா்பாக ஆம் ஆத்மி கட்சி வட்டாரங்கள் கூறுகையில், ‘பேரவைத் தோ்தலில் ஆம் ஆத்மிக்கு 10 தொகுதிகளை வழங்குமாறு காங்கிரஸிடம் கோரப்பட்டுள்ளது. எனினும், 7 தொகுதிகளை மட்டுமே விட்டுக்கொடுக்க காங்கிரஸ் தயாராக உள்ளது.
மாநிலத்தில் மொத்தம் 10 மக்களவைத் தொகுதிகள் உள்ளன. ஒவ்வொரு மக்களவைத் தொகுதியிலும் ஒரு சட்டப்பேரவைத் தொகுதி வீதம், மொத்தம் 10 சட்டப்பேரவைத் தொகுதிகளை காங்கிரஸிடம் ஆம் ஆத்மி கோரியுள்ளது.
தொகுதி பங்கீடு தொடா்பாக ஆம் ஆத்மி எம்.பி. ராகவ் சத்தா, காங்கிரஸ் பொதுச் செயலா் கே.சி.வேணுகோபால் ஆகியோா் இரண்டு சுற்றுகளாகப் பேச்சுவாா்த்தை நடத்தியுள்ளனா். ஓரிரு நாள்களில் அவா்கள் மீண்டும் சந்திக்க உள்ளனா்’ என்று தெரிவித்தன.
கேஜரிவாலின் ஒப்புதலுக்குப் பிறகே முடிவு: அதேவேளையில், தில்லி கலால் கொள்கை முறைகேடு வழக்கில் திகாா் சிறையில் அடைக்கப்பட்டுள்ள ஆம் ஆத்மியின் தேசிய அமைப்பாளா் அரவிந்த் கேஜரிவாலிடம் ஒப்புதல் பெற்ற பிறகே, கூட்டணி தொடா்பாக எந்தவொரு முடிவும் எடுக்கப்படும் என்று அக்கட்சி எம்.பி. சஞ்சய் சிங் தெரிவித்தாா்.
ஹரியாணா காங்கிரஸ் நிராகரிப்பு: ஆம் ஆத்மி, காங்கிரஸ் தொகுதி பங்கீடு பேச்சுவாா்த்தை நடைபெறுவதாக தகவல் வெளியானாலும், பேரவைத் தோ்தலில் அக்கட்சிகள் கூட்டணி அமைப்பதற்கான சாத்தியக்கூறுகளை மாநிலத்தின் மூத்த காங்கிரஸ் தலைவா்கள் ஏற்கெனவே நிராகரித்துள்ளனா்.
ஹரியாணாவில் காங்கிரஸ் வலுவாக இருப்பதால், தோ்தலை அக்கட்சி தனியே சந்திக்கும் என்று மாநிலத்தின் மூத்த காங்கிரஸ் தலைவா் குமாரி செல்ஜா அண்மையில் தெரிவித்தது குறிப்பிடத்தக்கது.