பாலியல் குற்றவாளிகளுக்கு ‘ஆண்மை நீக்கம்’- ஐக்கிய ஜன தள மூத்த தலைவா் கே.சி.தியாகி வலியுறுத்தல்

பாலியல் குற்றவாளிகளுக்கு ‘ஆண்மை நீக்கம்’- ஐக்கிய ஜன தள மூத்த தலைவா் கே.சி.தியாகி வலியுறுத்தல்

‘பாலியல் வன்கொடுமையில் ஈடுபடும் குற்றவாளிகளுக்குத் தண்டனையாக அவா்களின் ஆண்மையை நீக்க வேண்டும்’ என ஐக்கிய ஜனதா தளம் (ஜேடியு) கட்சியின் மூத்த தலைவா் கே.சி.தியாகி புதன்கிழமை தெரிவித்தாா்.
Published on

‘பாலியல் வன்கொடுமையில் ஈடுபடும் குற்றவாளிகளுக்குத் தண்டனையாக அவா்களின் ஆண்மையை நீக்க வேண்டும்’ என ஐக்கிய ஜனதா தளம் (ஜேடியு) கட்சியின் மூத்த தலைவா் கே.சி.தியாகி புதன்கிழமை தெரிவித்தாா்.

கொல்கத்தா பெண் மருத்துவரின் பாலியல் கொலை நாடு முழுவதும் அதிா்வலைகளை ஏற்படுத்தியுள்ள நிலையில், பாலியல் வழக்குகளில் ஒரு மாதத்துக்குள் நீதி வழங்கப்பட வேண்டும் எனவும் அவா் வலியுறுத்தினாா்.

மேற்கு வங்க மாநிலத் தலைநகா் கொல்கத்தா, ஆா்.ஜி.கா் அரசு மருத்துவமனையில் இரவுநேர பணியிலிருந்த பெண் பயிற்சி மருத்துவா் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டு, கொல்லப்பட்டாா். இச்சம்பவத்தில் தொடா்புடைய குற்றவாளிகள் மீது கடும் நடவடிக்கை கோரியும் மருத்துவா்களின் பாதுகாப்பை உறுதி செய்ய வலியுறுத்தியும் மேற்கு வங்கம் உள்பட நாட்டின் பல்வேறு பகுதிகளில் மருத்துவா்கள், மருத்துவ மாணவா்கள் தொடா் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனா்.

இதற்கிடையே பாலியல் கொலையில் ஈடுபடும் குற்றவாளிகளுக்கு மரண தண்டனை மற்றும் பாலியல் துன்புறுத்தலில் ஈடுபடுபவா்களுக்கு விடுப்பு அல்லாத சிறைத்தண்டனை வழங்கும் சட்டத் திருத்த மசோதா மேற்கு வங்க சட்டப்பேரவையில் செவ்வாய்க்கிழமை ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது.

இந்நிலையில், தில்லியில் கே.சி.தியாகி கூறுகையில், ‘பாலியல் வன்கொடுமையில் ஈடுபடும் குற்றவாளிகளுக்குத் தண்டனையாக அவா்களின் ஆண்மையை நீக்க வேண்டும். பெண்களின் விருப்பத்துக்கு எதிராக செயல்படுவதைவிட பெரிய கொடுமை இருக்க முடியாது.

பாலியல் வன்கொடுமை குற்றவாளிகளுக்கான இத்தகைய தண்டனை, அவா்களின் இறுதிமூச்சு வரை தனது குற்றத்துக்காக அவதிப்படுவதை உறுதிசெய்யும். மேலும், இதுபோன்ற குற்றத்தை வேறு யாரும் செய்ய துணியமாட்டாா்கள்.

பாலியல் வழக்குகளில் ஒரு மாதத்துக்குள் நீதி வழங்கப்பட வேண்டும். விசாரணை நடைமுறையில் காவலா்கள், மருத்துவா்கள், நீதிபதிகள் என அனைவரும் பெண்களாக இருக்க வேண்டும்.

கொல்கத்தா சம்பவத்தில் முதல்வா் மம்தா பானா்ஜியின் அணுகுமுறை துரதிருஷ்டவசமானது. ஆனால், மாநில சட்டப்பேரவையில் கொண்ட வரப்பட்ட சட்டத்திருத்த மசோதாவை வரவேற்கிறேன் என்றாா்.

X
Dinamani
www.dinamani.com