முன்னாள் பயிற்சி ஐஏஎஸ் பூஜா கேத்கர், அளித்த மாற்றுத்திறனாளி சான்றிதழ் போலியானது என்றும், மூன்று வெவ்வேறு பெயர்களில் அவர் 12 முறை தேர்வெழுதியிருப்பதாகவும் தில்லி உயர் நீதிமன்றத்தில் காவல்துறை தெரிவித்துள்ளது.
மகாராஷ்டிர மாநிலத்தில் பயிற்சி ஐஏஎஸ் அதிகாரியாக பணியாற்றிவந்த பூஜா கேத்கா், இடஒதுக்கீட்டை தவறாகப் பயன்படுத்தி 2022-ஆம் ஆண்டு குடிமைப் பணித் தோ்வில் தேற்ச்சி பெற்றதாக வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
குற்றம் நிரூபிக்கப்பட்டதைத் தொடா்ந்து, அவா் தோ்ச்சி பெற்றது செல்லாது எனவும், எதிா்காலத்தில் அவா் குடிமைப் பணித் தோ்வுகளில் பங்கேற்பதற்கு தடை விதிப்பதாகவும் மத்திய அரசுப் பணியாளா் தோ்வாணையம் (யுபிஎஸ்சி) கடந்த ஜூலை 31-ஆம் தேதி அறிவித்தது.
இது தொடர்பான வழக்கு தில்லி உயர் நீதிமன்றத்தில் விசாரிக்கப்பட்டு வரும் நிலையில், குடிமைப் பணித் தோ்வுகளில் மோசடியில் ஈடுபட்ட பெண் ஐஏஎஸ் அதிகாரி பூஜா கேத்கரை கைது செய்ய இடைக்காலத் தடை அமலில் உள்ளது.
மூன்று பெயர்களில் 12 முறை தேர்வு
இந்நிலையில், தில்லி உயர் நீதிமன்றத்தில் இன்று, தில்லி காவல்துறையினர் சமர்ப்பித்த விசாரணை அறிக்கையில், பூஜா கேத்கர், இரண்டு மாற்றுத்திறனாளி சான்றிதழ்களை (பல உடல்குறைபாடு) யுபிஎஸ்சி-யில் அளித்திருக்கிறார். ஆனால், அதுபோன்ற சான்றிதழ்கள் எதையும் மகாராஷ்டிர மாநிலம் அகமதுநகர் அதிகாரிகள் அளிக்கவில்லை என்று விசாரணையில் தெரிய வந்திருப்பதாகக் கூறியுள்ளனர்.
எனவே, யுபிஎஸ்இயின் இட ஒதுக்கீட்டினைப் பெற பூஜா கேத்கர் அளித்த அந்த மாற்றுத்திறனாளி சான்றிதழ் போலியாகத் தயாரிக்கப்பட்டதாக இருக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதுபோல, தனது பெயரை மூன்று முறைகளில் மாற்று குறிப்பிட்ட எண்ணிக்கையை விட, 12 முறை யுபிஎஸ்சி தேர்வெழுதி, விதிகளை மீறியிருக்கிறார் என்றும் கூறப்பட்டுள்ளது.
கேத்கர் பூஜா தீலிப்ராவ், பூஜா தீலிப் கேத்கர், பூஜா மனோர்மா திலிப் கேத்கர் என தனது பெயரை மாற்றி மாற்றி, 2012 முதல் 2023 வரை 12 தேர்வுகளை எழுதியிருக்கிறார். என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.