பசுப் பாதுகாப்புக் குழுவால் பள்ளி மாணவர் கொல்லப்பட்டது பற்றி பிரதமர் நரேந்திர மோடி பேசுவாரா என்று மாநிலங்களவை உறுப்பினர் கபில் சிபல் கேள்வி எழுப்பியுள்ளார்.
மேலும், வெறுப்பை பரப்புவதற்கு அளித்த ஊக்குவிப்பின் காரணமாக இந்த சம்பவம் நடந்ததாக அவர் குற்றம்சாட்டினார்.
மாணவர் கொலை
ஹரியாணா மாநிலத்தில் 12-ஆம் வகுப்பு படிக்கும் மாணவர், தனது நண்பர்களின் காரில் சென்றபோது, பசுவைக் கடத்துவதாக நினைத்து பசுப் பாதுகாப்புக் குழுவினரால் துப்பாக்கியால் சுட்டுக் கொல்லப்பட்டார்.
இந்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ள நிலையில், கபில் சிபல் எக்ஸ் தளத்தில் பிரதமர் மோடி உள்ளிட்டோருக்கு கேள்வி எழுப்பியுள்ளார்.
கபில் சிபலின் கேள்வி
கபில் சிபல் எக்ஸ் தளத்தில் பதிவிட்டதாவது:
“அவமானம், ஹரியாணாவில் பசுவை கடத்துபவர் என்று தவறுதலாக 12ஆம் வகுப்பு மாணவர் ஆரியன் மிஸ்ரா, பசுப் பாதுகாப்புக் குழுவினரால் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார்.
வெறுப்பை பரப்புவதற்கு ஊக்குவிப்பதே இதற்கான காரணம்.
நமது பிரதமரும், குடியரசுத் துணைத் தலைவரும், உள்துறை அமைச்சரும் இதுகுறித்து பேசுவார்களா?” எனக் குறிப்பிட்டுள்ளார்.
புலம்பெயர் தொழிலாளி கொலை
ஹரியாணாவில் கடந்த வாரம் மேற்கு வங்கத்தைச் சோ்ந்த சபீா் மாலிக் என்ற புலம்பெயா் தொழிலாளி மாட்டிறைச்சி சாப்பிட்டதாக சந்தேகம் எழுந்ததையடுத்து அவரை பசுப் பாதுகாப்புக் குழுவைச் சோ்ந்த 5 போ் அடித்துக்கொலை செய்துள்ளனா்.
ஹரியாணா மாநிலத்தில் அடுத்தடுத்து இரண்டு பேர் பசுப் பாதுகாப்புக் குழுவினரால் தவறுதலாக அடித்துக் கொல்லப்பட்ட சம்பவம் நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.