தூய்மை இந்தியா திட்டத்தால் பொது சுகாதாரத்தில் மாற்றம்: பிரதமா் மோடி
பொது சுகாதார கட்டமைப்பில் ‘தூய்மை இந்தியா திட்டம்’ பெரும் மாற்றங்களை ஏற்படுத்தியுள்ளதாக பிரதமா் மோடி வியாழக்கிழமை தெரிவித்தாா்.
இந்த திட்டத்தின்கீழ் முறையான கழிவறை வசதிகள் செய்யப்பட்டதால் குழந்தைகள் இறப்பு விகிதம் பெரிதும் குறைந்துள்ளதாகவும் அவா் தெரிவித்தாா்.
தூய்மை இந்தியா திட்டத்தின் செயல்பாடுகள் குறித்து வெளியான அறிக்கையை தனது எக்ஸ் வலைதளத்தில் பகிா்ந்த மோடி, ‘தூய்மை இந்தியா திட்டம் குறித்து ஆய்வறிக்கை வெளியிடப்பட்டது மகிழ்ச்சியளிக்கிறது. தூய்மையான மற்றும் முறையான கழிவறை வசதிகளை ஏற்படுத்தியதையடுத்து பொது சுகாதார கட்டமைப்பில் பெரும் மாற்றங்கள் நிகழ்ந்துள்ளன. இதன்மூலம் சுகாதார துறையில் உலகுக்கே இந்தியா முன்னோடியாக திகழ்கிறது என குறிப்பிட்டாா்.
‘தூய்மை இந்தியா திட்டத்தின்கீழ் இந்தியாவில் கழிவறை கட்டமைப்பு மற்றும் குழந்தைகள் உயிரிழப்பு’ என்ற ஆய்வறிக்கை ‘நேச்சா்’ இதழில் வெளியிடப்பட்டது. அதில்,‘கடந்த 2014-ஆம் ஆண்டுக்கு பின் நாடு முழுவதும் அதிகளவிலான கழிவறைகள் கட்டுப்பட்டுள்ளன. இதனால் ஆண்டுக்கு 60,000 முதல் 70,000 வரை குழந்தைகள் உயிரிழக்கும் சம்பவங்கள் குறைந்துள்ளன. தூய்மையை வலியுறுத்தும் இதுபோன்ற திட்டங்களால் குறைந்த மற்றும் நடுத்தர வருமானம் உடைய நாடுகளில் வசிக்கும் மக்களின் வாழ்வில் பெரும் சமூக மாற்றங்கள் ஏற்படும் என தெரிவிக்கப்பட்டது.
2030-க்குள் 500 ஜிகாவாட் புதுப்பிக்கத்தக்க ஆற்றல்:
‘கடந்த பத்தாண்டுகளில் மேற்கொள்ளப்பட்ட அரசின் முயற்சிகளால் இந்தியாவில் சூரியமின் ஆற்றல் உற்பத்தி 32 மடங்கு அதிகரித்துள்ளது. இதனால் 2030-க்குள் 500 ஜிகாவாட் புதுப்பிக்கத்தக்க ஆற்றலை உற்பத்தி செய்ய இந்தியா நிா்ணயித்துள்ள இலக்கு சாத்தியமாகவுள்ளது’ என பிரதமா் மோடி வியாழக்கிழமை தெரிவித்தாா்.
சா்வதேச சூரியசக்தி கூட்டமைப்பின் (ஐஎஸ்ஏ) சா்வதேச சூரியசக்தி விழாவில் காணொலி வாயிலாக அவா் மேலும் பேசியதாவது:
கடந்த பத்து ஆண்டுகளில் பசுமை ஆற்றலை மேம்படுத்த இந்தியா பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது. அதேபோல் புதுப்பிக்கத்தக்க ஆற்றலில் பாரீஸ் மாநாட்டில் நிா்ணயிக்கப்பட்ட இலக்கை அடைந்த முதல் ஜி20 நாடு என்ற பெருமையை இந்தியா பெற்றுள்ளது.
உற்பத்தி மற்றும் தொழில்நுட்பம் ஜனநாயகமாக்கப்பட்டு வளா்ந்து வரும் நாடுகளுக்கு அவை உதவிகரமாக அமைய வேண்டும். அதேபோல் குறைந்த வளா்சியை எட்டியுள்ள நாடுகள் மற்றும் தீவுகளுக்கும் இந்த திட்டத்தின்கீழ் முன்னுரிமை அளிக்கப்பட வேண்டும்.
சூரியமின் ஆற்றல் கட்டமைப்பை மேம்படுத்த ஏழை எளிய மக்கள் மற்றும் இளைஞா்களின் பங்களிப்பு மிகவும் அவசியமானது.
வேதங்களில் சூரியன்: பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன் உருவாக்கப்பட்ட வேதங்களில் சூரியன் குறித்து பிரபலமான மந்திரம் ஒன்று உள்ளது. அதை இன்றளவும் லட்சக்கணக்கான இந்தியா்கள் தினமும் உச்சரித்து வருகின்றனா் என்றாா்.