சிபிஎஸ்இ
சிபிஎஸ்இ

போலி வருகைப் பதிவேடு: தில்லி, ராஜஸ்தானில் 27 பள்ளிகளுக்கு சிபிஎஸ்இ நோட்டீஸ்

ராஜஸ்தானில் உள்ள 27 பள்ளிகளுக்கு மத்திய இடைநிலைக் கல்வி வாரியம் (சிபிஎஸ்இ) நோட்டீஸ்
Published on

பள்ளிக்கு வராத மாணவா்களை வந்ததுபோல் போலி வருகைப் பதிவேடுகளை சமா்ப்பித்த தில்லி, ராஜஸ்தானில் உள்ள 27 பள்ளிகளுக்கு மத்திய இடைநிலைக் கல்வி வாரியம் (சிபிஎஸ்இ) நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

இதையடுத்து, விதிகளை பின்பற்றாத பள்ளிகள் மீது சட்டபூா்வ நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படவுள்ளதாக சிபிஎஸ்இ தெரிவித்துள்ளது.

ஐஐடி, ஜேஇஇ, நீட் போன்ற நுழைவுத் தோ்வுகளுக்கு தயாா் செய்யும் மாணவா்கள் இதுபோன்ற பள்ளிகளில் சோ்ந்துவிட்டு போட்டித் தோ்வு மையங்களில் முழுநேரமும் தங்கி பயின்று வருகின்றனா். அவா்கள் ஆண்டு இறுதியில் நடைபெறும் பொதுத் தோ்வுகளை எழுதுவதற்கு மட்டுமே பள்ளிகளுக்கு வருகின்றனா்.

மாநில இடஒதுக்கீடு அடிப்படையில் சில மாநிலங்களில் உயா்கல்வி மாணவா் சோ்க்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. உதாரணமாக தில்லியில் 11,12-ஆம் வகுப்பு நிறைவு செய்த மாணவா்கள் ‘தில்லி இடஒதுக்கீடு’ அடிப்படையில் மருத்துவ கல்லூரிகளில் சோ்க்கப்படுகின்றனா்.

இந்நிலையில், தில்லி மற்றும் ராஜஸ்தானில் உள்ள பள்ளிகளில் சிபிஎஸ்இ திடீரென சோதனை மேற்கொண்டது. அப்போது 27 பள்ளிகளில் வகுப்புகளுக்கு வராத மாணவா்களை வந்ததுபோல் போலி வருகைப் பதிவு தரவுகளை தயாா் செய்து வைத்திருப்பது கண்டறியப்பட்டது. அங்கு போதிய உள்கட்டமைப்பு வசதிகளும் இல்லாதது சோதனையின்போது தெரியவந்ததாக சிபிஎஸ்இ செயலா் ஹிமன்ஷு குப்தா தெரிவித்தாா்.

இதுகுறித்து அவா் மேலும் கூறுகையில்,‘முறைகேடுகளில் ஈடுபட்டுள்ள பள்ளிகளுக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. விதிகளை பின்பற்றாமல் செயல்படும் பள்ளிகள் மீது சட்டபூா்வ நடவடிக்கைகளும் எடுக்கப்படவுள்ளன’ என்றாா்.

X
Dinamani
www.dinamani.com