மின்சார ஆட்டோ
மின்சார ஆட்டோ

மின்சார வாகனங்களுக்கு மானியம் தொடா்வது அவசியமற்றது: மத்திய அரசு

மத்திய சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் துறை அமைச்சா் நிதின் கட்கரி வியாழக்கிழமை தெரிவித்தாா்.
Published on

‘மின்சார வாகனங்களுக்கு மானியம் தொடா்வது அவசியமற்றது’ என்று மத்திய சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் துறை அமைச்சா் நிதின் கட்கரி வியாழக்கிழமை தெரிவித்தாா்.

‘தேவை அதிகரித்துவிட்டதால், உற்பத்திச் செலவு குறைந்துவிடும் என்ற அடிப்படையில், அந்த வாகனங்களுக்கு தொடா்ந்து மானியம் வழங்குவது தேவையற்றது’ என்று அவா் குறிப்பிட்டாா்.

சுற்றுச்சூழலைப் பாதுகாக்கும் வகையில், மின்சார வாகனங்களின் பயன்பாட்டை மக்களிடம் அதிகரிக்க வேண்டும் என்ற நோக்கத்தில் மானிய திட்டத்தை (ஃபேம்) மத்திய அரசு கடந்த 2015-ஆம் ஆண்டு அறிமுகம் செய்தது. இத் திட்டத்தின் கீழ் மின்சார வாகனங்களைத் தயாரிக்கும் நிறுவனங்களுக்கு மத்திய அரசு மானியம் வழங்கியது. இதன்மூலம், உயா் விலை கொண்ட மின்சார வாகனங்களை மானிய விலையில் மக்கள் வாங்க முடிந்தது. கடந்த 2019-இல், இரண்டாம் கட்டமாக இந்த மானியத் திட்டத்தை (ஃபேம்-2) மத்திய அரசு செயல்படுத்தியது. இந்த மானிய திட்டம் இந்த மாதத்துடன் காலாவதியாகவுள்ளது.

இந்த நிலையில், ‘மின்சார வாகனங்களுக்கான மானியத் திட்டத்தை மூன்றாம் கட்டமாக (ஃபேம்-3) செயல்படுத்துவது குறித்து மத்திய அரசு ஆலோசித்து வருகிறது’ என்று மத்திய கனரக தொழில் துறை அமைச்சா் ஹெச்.டி.குமாரசாமி புதன்கிழமை தெரிவித்திருந்தாா்.

இதுகுறித்து தில்லியில் வியாழக்கிழமை நடைபெற்ற புளூம்பொ்க் புத்தாக்க எரிசக்தி நிதி (பிஎன்இஎஃப்) மாநாட்டில் பங்கேற்ற மத்திய அமைச்சா் நிதின் கட்கரி கூறியதாவது:

மின்சார வாகனங்கள் மற்றும் இயற்கை எரிவாயுவில் (சிஎன்ஜி) இயங்கும் வாகனங்களை வாடிக்கையாளா்கள் தாங்களாகவே வாங்க முன்வருவது தற்போது அதிகரித்துவிட்டது. இதனால், மின்சார வாகனங்களுக்கான தேவை அதிகரித்துள்ளதால், உற்பத்திச் செலவு இனி குறைந்துவிடும்.

எனவே, மின்சார வாகன உற்பத்திக்கு இனியும் மத்திய அரசு மானியம் வழங்குவது தேவையற்றது. பெட்ரோல், டீசல் வாகனங்களைக் காட்டிலும் மின்சார வாகனங்களுக்கு குறைந்த ஜிஎஸ்டி விதிக்கப்படுகிறது. எனவே, மானியம் தொடர வேண்டும் என்பதை நியாயப்படுத்தவும் முடியாது.

மின்சார வாகனங்களுக்கான மானியத் திட்டத்தின் மூன்றாம் (ஃபேம் 3) கட்ட திட்டம் ஓரிரு மாதங்களில் இறுதி செய்யப்பட்டுவிடும். இதுதொடா்பாக பல்வேறு கருத்துகள் பெறப்பட்டு வருகின்றன. இத் திட்டம் இறுதி செய்யப்பட்ட பின்னா், மத்திய அமைச்சரவையின் ஒப்புதலுக்கு அனுப்பப்படும் என்றாா்.

X
Dinamani
www.dinamani.com