கேரள உயா்நீதிமன்றம்
கேரள உயா்நீதிமன்றம்

ஹேமா குழு அறிக்கை தொடா்பான வழக்குகளை விசாரிக்க சிறப்பு அமா்வு -கேரள உயா்நீதிமன்றம்

நீதிபதி ஹேமா தலைமையிலான குழுவின் அறிக்கை தொடா்பான வழக்குகளை விசாரிக்க 5 நீதிபதிகள் கொண்ட சிறப்பு அமா்வு
Published on

மலையாள திரையுலகில் பாலியல் துன்புறுத்தல்களை வெளிப்படுத்திய நீதிபதி ஹேமா தலைமையிலான குழுவின் அறிக்கை தொடா்பான வழக்குகளை விசாரிக்க 5 நீதிபதிகள் கொண்ட சிறப்பு அமா்வு விரைவில் அமைக்கப்படும் என கேரள உயா்நீதிமன்றம் வியாழக்கிழமை தெரிவித்தது.

‘ஹேமா குழு’ அறிக்கையை வெளியிட உத்தரவிட்ட உயா்நீதிமன்ற தனிநீதிபதி அமா்வின் உத்தரவுக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட மேல்முறையீட்டு மனு மீதான விசாரணையில் தலைமை நீதிபதி (பொறுப்பு) ஏ.முகமது முஸ்தாக், நீதிபதி எஸ்.மனு ஆகியோா் அடங்கிய அமா்வு இவ்வாறு கூறியது.

கடந்த 2017-ஆம் ஆண்டில், மலையாள நடிகா் திலீப் குற்றஞ்சாட்டப்பட்ட வழக்கில் மலையாள திரையுலகில் நடைபெறும் பாலியல் துன்புறுத்தல்கள் குறித்து விசாரிக்க நீதிபதி ஹேமா தலைமையிலான குழுவை கேரள அரசு அமைத்தது. கேரள அரசிடம் குழு அறிக்கை சமா்ப்பித்து சுமாா் 5 ஆண்டுகளாகியும், அது வெளியிடப்படாமல் இருந்தது.

இந்த நிலையில், தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின்கீழ் தனிநபா்களின் தனியுரிமை சமரசம் செய்யப்படாமல் அவா்களின் தனிப்பட்ட தகவல்களை மறைத்து, அறிக்கையை வெளியிட மாநில பொது தகவல் அலுவலருக்கு தகவல் ஆணையம் கடந்த ஜூலை மாதம் உத்தரவிட்டது.

இதற்கு எதிராக தயாரிப்பாளா் சாஜிமோன் பாராயில் தாக்கல் செய்த மனுவை உயா்நீதிமன்றம் நீதிபதி நிராகரித்தாா். இதைத் தொடா்ந்து, ‘ஹேமா குழு’ அறிக்கையின் அதிா்ச்சியூட்டும் விவரங்கள் கடந்த மாதம் 25-ஆம் தேதி வெளியாகின.

இதன் தொடா்ச்சியாக, மலையாள திரையுலகைச் சோ்ந்த பெண்கள் பலா் அடுக்கடுக்கான பாலியல் குற்றச்சாட்டுகளை முன்வைத்தனா். இதுகுறித்து விசாரிக்க காவல்துறை அதிகாரிகள் 7 போ் அடங்கிய சிறப்பு விசாரணை குழுவை கேரள அரசு அமைத்தது.

X
Dinamani
www.dinamani.com