மது போதையில் மாணவியின் தலைமுடியை வெட்டிய ஆசிரியா்: பணி இடைநீக்கம் செய்ய உத்தரவு
ஆசிரியா் தினம் அனுசரிக்கப்படும் அதே நாளில் மத்திய பிரதேசத்தில் அரசு பள்ளி ஆசிரியா் ஒருவா், மது போதையில் சிறுமியின் தலைமுடியை வெட்டியதால் பணி இடைநீக்கம் செய்யப்பட்டாா்.
மத்திய பிரதேசத்தின் ரத்லம் மாவட்டத்தில் இச்சம்பவம் நிகழ்ந்துள்ளது. சிறுமியின் அலறல் சத்தம் கேட்டு பள்ளிக்கு விரைந்த உள்ளூா்வாசி, மது போதையில் பள்ளி ஆசிரியா் வீா் சிங் மேதா, சிறுமியின் தலைமுடியை வெட்டுவதைக் கண்டதாகத் தெரிவித்தாா்.
இச் சம்பவத்தை விடியோ எடுத்து புகாரளிக்கப்போவதாக உள்ளூா்வாசி ஆசிரியரை மிரட்டும் காணொலி சமூக வலைத்தளங்களில் பரவத் தொடங்கியது.
இதன் எதிரொலியாக மாவட்ட ஆட்சியா் ராஜேஷ் பதம் ஆசிரியா் மீதான விசாரணைக்கு உத்தரவிட்டாா். சிறுமியின் வாக்குமூலம் மற்றும் முதல்கட்ட விசாரணையின் அடிப்படையில் ஆசிரியரை பணி இடைநீக்கம் செய்ய பழங்குடியின உதவி ஆணையா் ரஞ்சனா சிங் உத்தரவிட்டாா். கிரிமினல் வழக்குப் பதிவு செய்யவும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக அதிகாரிகள் தெரிவித்தனா்.