கொல்கத்தாவில் பெண் பயிற்சி மருத்துவர் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டு கொலை செய்யப்பட்ட வழக்கில், கைதான சஞ்சய் ராயின் நீதிமன்றக் காவல் மேலும் நீட்டிக்கப்பட்டுள்ளது.
இதுதொடர்பான வழக்கு கொல்கத்தா நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வந்தபோது, வழக்கில் தொடர்புடைய வழக்கறிஞர்கள் நேரடியாகவும், சஞ்சய் ராய் காணொளி வழியாகவும் ஆஜராகியிருந்தனர். மாநில சட்ட உதவியால் நியமிக்கப்பட்ட சஞ்சய் ராயின் வழக்கறிஞர், தனது வாடிக்கையாளர் சட்டத்தில் சிக்கியவர் என்றும், அவருக்கும் குற்றத்துக்கும் எந்தத் தொடர்பும் இல்லை என்றும் கூறி ஜாமீன் கோரினார்.
40 நிமிடம் தாமதமாக நீதிமன்றத்தை வந்தடைந்த சிபிஐ வழக்கறிஞர், ஜாமீன் மனுவை எதிர்த்தார். இருத்தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி, சஞ்சய் ராய் தரப்பின் ஜாமீன் கோரிக்கையை நிராகரித்ததோடு அவரை செப்டம்பர் 20ஆம் தேதி வரை நீதிமன்றக் காவலில் வைக்க உத்தரவிட்டார். இதனிடையே இந்த வழக்கின் விசாரணை தொடங்கியதும், சஞ்சய் ராய் அழத் தொடங்கினார் என்று சிபிஐ வட்டாரங்கள் தெரிவித்தன.
மேற்கு வங்க மாநிலம், கொல்கத்தாவில் உள்ள ஆர்.ஜி.கர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் முதுநிலை பெண் பயிற்சி மருத்துவா் ஒருவா், கடந்த மாதம் பாலியல் வன்கொடுமை செய்து கொல்லப்பட்டாா். இதுதொடா்பாக காவல் துறைக்கு உதவும் தன்னாா்வலராகப் பணியாற்றி வந்த சஞ்சய் ராய் என்பவா் கைது செய்யப்பட்டு அவரிடம் விசாரணை நடைபெற்று வருகிறது.
கொல்கத்தா உயா்நீதிமன்ற உத்தரவைத் தொடா்ந்து, இந்த வழக்கை சிபிஐ விசாரித்து வருகிறது. விசாரணையில், இதுவரை வேறு யாருக்கும் தொடர்பிருப்பதற்கான எந்த தடயமும் கிடைக்கவில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மரபணு மற்றும் தடயவியல் சோதனைகள் மூலம், கூட்டு பாலியல் வன்கொடுமை நடைபெறவில்லை என்பதை சிபிஐ அதிகாரிகள் உறுதி செய்திருபப்தாகவும், சஞ்சய் ராய் ஒருவர் மட்டுமே இந்த குற்றத்தில் ஈடுபட்டிருப்பதாக உறுதி செய்யப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.