மும்பையில் நாளை மறுநாள் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் மஞ்சள் எச்சரிக்கை விடுத்துள்ளது.
நாடு முழுவதும் நாளை விநாயகர் சதுர்த்தி திருவிழா கடைப்பிடிக்கப்படுகிறது. குறிப்பாக மும்பையில் விநாயகர் சதுர்த்தி விழா கோலாகலமாகக் கொண்டாடப்படுகிறது.
இந்த நிலையில், மும்பையில் தனிமைப்படுத்தப்பட்ட பகுதிகளில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும், அதற்கான மஞ்சள் எச்சரிகையும் விடுக்கப்பட்டுள்ளது. சனிக்கிழமையான நாளை மிதமான மழையும் பெய்யக்கூடும் என ஐஎம்டி தெரிவித்துள்ளது.
தாணே மாவட்டத்துக்கு சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் கனமழைக்கான மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. ராய்காட்டில் சனிக்கிழமை முதல் திங்கள் வரை கன முதல் மிக கனமழைக்கான ஆரஞ்சு எச்சரிக்கையும் வெளியிட்டுள்ளது. இதற்கிடையில் வியாழக்கிழமை வரை மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும் கணித்துள்ளது.
ஜூன் மாதத்தில் பருவமழை தொடங்கியதிலிருந்து வெள்ளிக்கிழமை காலை வரை 2,500 மிமீ மழை பதிவாகியுள்ளதாகவும், செப்டம்பர் மாதத்தில் சராசரிக்கும் அதிகமான மழைப் பதிவாகும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.