மல்யுத்த வீரர்களாக பஜ்ரங் புனியா மற்றும் வினேஷ் போகத் காங்கிரஸ் கட்சியில் இணைந்தது அவர்களின் தனிப்பட்ட விருப்பம் என மல்யுத்த வீராங்கனை சாக்ஷி மாலிக் இன்று (செப். 6) கருத்து தெரிவித்தார்.
தனக்கும் கட்சியில் சேர நிறைய அழைப்புகள் வந்ததாகவும், ஆனால் அவற்றை மறுத்துவிட்டதாகவும் , பெண்களை பிரதிநிதித்துவப்படுத்தும் வகையில் மல்யுத்தத்தில் தொடர்ந்து விளையாடப்போவதாகவும் சாக்ஷி குறிப்பிட்டார்.
காங்கிரஸில் வினேஷ் போகத், பஜ்ரங் புனியா
ஒலிம்பிக் போட்டிகளில் இந்தியா சார்பில் பங்கேற்று பதக்கங்களைப் பெற்ற மல்யுத்த வீரர் பஜ்ரங் புனியா மற்றும் வீராங்கனை சாக்ஷி மாலிக் ஆகியோர் இன்று காங்கிரஸ் கட்சியில் இணைந்தனர்.
தில்லியில் உள்ள மல்லிகார்ஜுன கார்கேவை சந்தித்த இருவரும், அதனைத் தொடர்ந்து காங்கிரஸ் பொதுச்செயலாளர் கே.சி. வேணுகோபால் தலைமையில் காங்கிரஸ் கட்சியில் இணைந்தனர். இந்த நிகழ்ச்சியில் காங்கிரஸ் தலைவர் பவன் கேரா, ஹரியாணா காங்கிரஸ் தலைவர் உதய் பான் மற்றும் ஹரியாணா மாநில காங்கிரஸ் பொறுப்பாளர் தீபக் பபாரியா உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.
ஹரியாணா மாநிலத்தில் உள்ள 90 சட்டப்பேரவைகளுக்கு அக்டோபர் 5ஆம் தேதி தேர்தல் நடைபெறவுள்ளது. இதன் வாக்கு எண்ணிக்கை அக்டோபர் 8ஆம் தேதி நடைபெறவுள்ளது.
சட்டப்பேரவைத் தேர்தல் அறிவிக்கப்பட்ட நிலையில், ஹரியாணாவில் வினேஷ் போகத் தேர்தலில் போட்டியிடுவார் எனத் தகவல்கள் வெளியாகின. தற்போது காங்கிரஸ் கட்சியில் அவர் இணைந்துள்ளதால், ஹரியாணா சட்டப்பேரவைத் தேர்தலில் வினேஷ் போகத் போட்டியிடுவார் என்ற எதிர்பார்ப்பு நிலவுகிறது.
கட்சியில் இணைவது தனிப்பட்ட விருப்பம்
இந்நிலையில் பஜ்ரங் புனியா மற்றும் வினேஷ் போகத் ஆகியோர் காங்கிரஸ் கட்சியில் இணைந்தது குறித்து இவர்களின் சகதோழியும் மல்யுத்த வீராங்கனையுமான சாக்ஷி மாலிக் கருத்து தெரிவித்துள்ளார்.
சாக்ஷி மாலிக் பேசியதாவது,
''பஜ்ரங் புனியா, வினேஷ் போகத் ஆகியோர் காங்கிரஸ் கட்சியில் இணைந்தது அவர்களின் தனிப்பட்ட விருப்பம். எனக்கும் கட்சியில் சேர அழைப்புகள் வந்தன. ஆனால் அவற்றை நான் நிராகரித்துவிட்டேன்.
விளையாட்டின் மீது நம்பிக்கை வைத்துள்ளதால், மல்யுத்தத்தில் பெண்களை பிரதிநிதித்துவப்படுத்தும் வகையில் தொடர்ந்து விளையாட்டில் கவனம் செலுத்தவுள்ளேன்.
எங்களின் கிளர்ச்சி, பெண்களுக்கான எங்கள் போராட்டம் தவறானதாகிவிடக் கூடாது. எங்கள் போராட்டம் தொடரும் என்பதே என் கருத்து. இந்திய மல்யுத்த சம்மேளனம் சுத்தப்படுத்தப்பட்டால்தான் பெண்கள் (வீராங்கனைகள்) மீதான சுரண்டலுக்கு முடிவு கிடைக்கும். எங்கள் போராட்டம் நேர்மையானது. அது தொடரும்'' எனக் குறிப்பிட்டார்.
மல்யுத்த சம்மேளன தலைவர் பதவியில் இருந்தபோது பிரிஜ்பூஷண் பாலியல் சீண்டல்களில் ஈடுபட்டதாக அவரை பதவி நீக்கம் செய்யக்கோரிய போராட்டத்தில், வினேஷ் போகத் - பஜ்ரங் புனியாவுடன் சாக்ஷி மாலிக்கும் ஈடுபட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
முன்னதாக, வினேஷ் போகத் தன்னுடைய எக்ஸ் பக்கத்தில், வடக்கு ரயில்வே பணியை ராஜிநாமா செய்த கடிதத்தை இணைத்திருந்தார். ரயில்வேயில் பணியாற்றியது எனது வாழ்நாளில் மறக்க முடியாத மற்றும் பெருமைகொள்ளத் தக்க விஷயம், தற்போது இந்திய ரயில்வேயிலிருந்து தன்னை பிரித்துக்கொள்வதற்கான நேரம் வந்துவிட்டது என்று கூறியிருந்தார்.