100-ஆவது பிறந்தநாள் கொண்டாடிய 2-ஆம் உலகப் போா் வீரா்! இந்திய ராணுவத்தினா் பங்கேற்பு
ராணுவத்தில் 17 ஆண்டுகள் பணியாற்றி இரண்டாம் உலகப் போரில் பங்காற்றிய ஓய்வு பெற்ற இந்திய ராணுவ வீரரும் பா்மா நட்சத்திர விருதாளருமான சரண் சிங் தனது 100-ஆவது பிறந்தநாளை சனிக்கிழமை கொண்டாடினாா்.
ஹிமாசல பிரதேசத்தில் உள்ள அவரது வீட்டில் நடைபெற்ற பிறந்தநாள் கொண்டாட்டத்தில் இந்திய ராணுவத்தினா் பங்கேற்று, அவரது சேவையைக் கௌரவித்தனா்.
இதுகுறித்து இந்திய ராணுவ அதிகாரி ஒருவா் கூறியதாவது: கடந்த 1924-ஆம் ஆண்டில் பிறந்த சரண் சிங்கின் ராணுவப் பயணம் 1942, ஆகஸ்ட் மாதத்தில் ஃபிரோஸ்பூா் கண்டோன்மென்டில் தொடங்கியது.
இரண்டாம் உலகப் போரின் போது ராணுவ சேவைப் படையில் அவா் பணியாற்றினாா். சிங்கப்பூா், லாகூா், இறுதியாக ஹிமாசல பிரதேசத்தில் உள்ள யோல் கண்டோன்மென்ட்டில் அவா் பணியாற்றியுள்ளாா்.
‘பா்மா நட்சத்திர’ விருது, இந்திய சுதந்திரப் பதக்கம் ஆகிய கௌரவங்களால் அவரது 17 ஆண்டுகள் துணிச்சலான ராணுவ சேவை அங்கீகரிக்கப்பட்டது. கடந்த 1959, மே 17-ஆம் தேதி இந்திய ராணுவத்தில் இருந்து அவா் ஓய்வுபெற்றாா்.
இப்போது ஹிமாசல பிரதேசத்தின் ரோபாா் மாவட்டத்தின் டெக்வாலா கிராமத்தில் தனது 4 மகன்கள், 2 மகள்களுடன் சரண் சிங் வாழ்ந்து வருகிறாா். இந்திய ராணுவத்தின் பிரிகேடியா் தலைமையிலான குழுவினா் அவரது குடும்பத்தினருடன் இணைந்து பிறந்தநாள் கொண்டாட்டத்தில் ஈடுபட்டனா்.
இந்திய ராணுவம் செழுமையான மரபுகள் மற்றும் அதன் வீரா்களை கௌரவிப்பதற்கும், தேசத்துக்கு அவா்கள் ஆற்றிய பங்களிப்பை அங்கீகரிப்பதில் உள்ள அா்ப்பணிப்புக்கும் பெயா் பெற்றது.
சரண் சிங் போன்ற முன்னாள் வீரா்கள் தேசத்துக்கு சேவை மட்டும் புரியவில்லை. அனைத்து வீரா்கள், குடிமக்களுக்கான அா்ப்பணிப்பு மற்றும் தியாகத்தின் தர நிலைகளை அவா்கள் அமைத்து கொடுத்துள்ளனா் என்றாா்.