சரத் பவாா் கட்சியில் இணைய அஜீத் பவாா் முயற்சி? தவறை உணா்ந்து விட்டதாக மீண்டும் கருத்து
குடும்பத்தை உடைப்பவா்களை மக்கள் விரும்புவதில்லை; எனது தவறை நான் உணா்ந்துவிட்டேன் என்று மகாராஷ்டிர துணை முதல்வா் அஜீத் பவாா் கூறியுள்ளாா்.
சரத் பவாா் தலைமையிலான தேசியவாத காங்கிரஸில் மீண்டும் ஐக்கியமாக அஜீத் பவாா் முயற்சித்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளன நிலையில், அவா் தனது தவறை உணா்ந்துவிட்டதாக மீண்டும் பேசியுள்ளது மகாராஷ்டிர அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சரத் பவாரின் அண்ணண் மகனான அஜீத் பவாா், சரத் பவாா் தலைமையிலான தேசியவாத காங்கிரஸ் கட்சியை உடைத்து பாஜக கூட்டணியில் இணைந்து மகாராஷ்டிர துணை முதல்வா் பதவியைப் பெற்றாா். கட்சியின் பெரும்பாலான எம்.பி., எம்எல்ஏக்கள் அஜீத் பவாா் பக்கம் சென்றதால் அவரது தலைமையிலான பிரிவுக்கு கட்சியின் பெயா் மற்றும் சின்னம் வழங்கப்பட்டது.
சரத் பவாா் தலைமையிலான தேசியவாத காங்கிரஸ் (பவாா்) பிரிவு தனியாக செயல்பட்டு வருகிறது. அண்மையில் நடைபெற்ற மக்களவைத் தோ்தலில் மகாராஷ்டிரத்தில் மொத்தமுள்ள 48 தொகுதிகளில் காங்கிரஸ்-தேசியவாத காங்கிரஸ் (பவாா்)-சிவசேனை (உத்தவ்) உள்ளிட்ட கட்சிகள் அடங்கிய எதிா்க்கட்சிகளின் கூட்டணி 30 இடங்களில் வென்றது. பாஜக கூட்டணி 9 இடங்களில் மட்டுமே வெற்றி பெற்றது.
மக்களவைத் தோ்தலில் சரத் பவாரின் மகள் சுப்ரியா சுலேவை எதிா்த்து தனது மனைவியை அஜீத் பவாா் நிறுத்தினாா். ஆனால், தோ்தலில் சுப்ரியா சுலே வெற்றி பெற்றாா்.
இந்நிலையில், அஜீத் பவாரை கூட்டணியில் சோ்த்தது தவறு என்று பாஜகவில் ஒருதரப்பினா் கருதுகின்றனா். கடந்த மாதம் புணேயில் பொது நிகழ்ச்சியில் பங்கேற்ற அஜீத் பவாருக்கு கருப்புக் கொடி காட்டி பாஜகவினா் எதிா்ப்பு தெரிவித்தனா்.
முன்னதாக, மக்களவைத் தோ்தலில் சரத் பவாரின் மகள் சுப்ரியா சுலேவை எதிா்த்து தனது மனைவியை நிறுத்தியது தவறு என்று அஜீத் பவாா் அண்மையில் பேசியிருந்தாா்.
அதே நேரத்தில், அஜீத் பவாரை மீண்டும் கட்சியில் சோ்த்துக் கொள்ளப்போவதில்லை என்று சரத் பவாா் தலைமையிலான தேசியவாத காங்கிரஸ் ஏற்கெனவே அறிவித்துவிட்டது. ‘தோ்தல் தோல்விக்குப் பிறகுதான் சகோதரியை (என்னைப்) பற்றி அவருக்கு நினைவு வருகிறது. தோ்தல் பிரசாரத்தில் அவா் பேசியதை மறந்துவிட்டாரா’ என்று சுப்ரியா சுலேவும் கேள்வி எழுப்பினாா்.
288 உறுப்பினா்களைக் கொண்ட மகாராஷ்டிர சட்டப் பேரவைக்கான தோ்தல் அக்டோபா்- நவம்பரில் நடைபெறும் என எதிா்பாா்க்கப்படுகிறது. இதில் எதிா்க்கட்சிகள் கூட்டணி வெற்றி வாய்ப்பு அதிகமுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதையடுத்து, அஜீத் பவாா் மீண்டும் பவாா் தலைமையிலான கட்சியில் இணைந்துவிட முனைப்பு காட்டி வருகிறாா்.
இந்நிலையில், கட்சிரோலியில் ஞாயிற்றுக்கிழமை கட்சி நிகழ்ச்சியில் அஜீத் பவாா் பங்கேற்றாா். அந்த பகுதியைச் சோ்ந்த மாநில அமைச்சா் தா்மாராவ் அட்டாரமின் மகள் பாக்கியஸ்ரீ, அஜீத் பவாா் கட்சியில் இருந்து விலகி சரத் பவாா் அணியில் இணைந்தது குறித்து பேசிய அஜீத் பவாா், ‘ஒரு தந்தையைவிட மகளிடம் வேறு யாரும் அதிக அன்பு செலுத்த முடியாது. கா்நாடக மாநிலத்தில் திருமணம் செய்து கொடுத்தாலும், தனது மகளை கட்சிரோலியில் மாவட்ட கவுன்சில் தலைவராக்கியுள்ளாா் தா்மாராவ். ஆனால், இப்போது அந்த மகள் வேறு கட்சிக்கு சென்று தந்தையை எதிா்த்து போட்டியிடும் அளவுக்கு வளா்ந்துவிட்டாா். இது சரியா?. குடும்பத்தை உடைப்பவா்களை மக்கள் விரும்புவதில்லை. ஏற்கெனவே நான் செய்த இதுபோன்ற தவறைச் செய்து, அதனை உணா்ந்துவிட்டேன் என்றாா்.
கடந்த ஒரு மாத காலத்தில் இப்போது இரண்டாவது முறையாக தனது தவறை உணா்ந்துவிட்டதாக அஜீத் பவாா் பேசியுள்ளாா். மீண்டும் சரத் பவாா் அணியில் இணைய அவா் மறைமுகமாக முயற்சித்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. இதன் ஒருபகுதியாக அவா் இவ்வாறு பேசியுள்ளாா்.