நிலவில் அதிர்வுகள்! சந்திரயான் 3 வெளியிட்ட புதிய தகவல்!

நிலவில் அதிர்வுகள் ஏற்பட்டது குறித்து சந்திரயான் 3 வெளியிட்ட தரவுகள் பற்றி...
isro
சந்திரயான் 3 கோப்புப்படம்
Published on
Updated on
1 min read

நிலவில் ஏற்பட்ட அதிர்வுகளை பிரக்யான் ரோவர் பதிவு செய்துள்ளதாக சந்திரயான் 3 திட்டத்தின் ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நாசாவின் அப்பல்லோ திட்டங்கள் தொடங்கியது முதல், நிலவின் தென் துருவத்தில் அதிர்வுகளை முதல்முறையாக பிரக்யான் ரோவர் கண்டுபிடித்துள்ளது. இதுவரை நிலவின் தென் துருவத்தில் ஏற்பட்ட அதிர்வுகள் குறித்த தரவுகள் எதுவும் வெளியானது இல்லை.

நிலவில் அதிர்வுகள்

நிலவின் தென் துருவத்தில் சுமார் 250-க்கும் மேற்பட்ட அதிர்வுகளுக்கான சமிக்ஞைகளை பிரக்யான் ரோவர் பதிவு செய்துள்ளது. இதனை ஆய்வு செய்த விஞ்ஞானிகள், 200 அதிர்வுகள் பிரக்யான் மற்றும் பிற கருவிகளால் ஏற்பட்டது என்றும், 50 அதிர்வுகள் எதற்கும் தொடர்பு இல்லாமல் இருப்பதாகவும் தெரிவித்துள்ளனர்.

மேலும், 50 அதிர்வுகள் நிலவில் ஏற்பட்ட நிலநடுக்கமாக இருக்கக் கூடும் என்று சந்தேகிப்பதாகவும், இதுகுறித்த விரிவான ஆய்வு மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் தெரிவித்துள்ளனர்.

ஐஎல்எஸ்ஏ கருவி

சந்திரயான் 3 விண்கலத்தில் அனுப்பப்பட்ட விக்ரம் லேண்டர் கடந்தாண்டு ஆகஸ்ட் மாதம் நிலவின் தென் துருவத்தில் தரையிறங்கியது. அதிலிருந்த பிரக்யான் ரோவர், நிலவின் வெப்பநிலை, மண்ணின் தன்மை உள்ளிட்ட ஆய்வுகளை 14 நாள்கள் மேற்கொண்டது.

விக்ரம் லேண்டரில் உள்ள இன்ஸ்ட்ரூமெண்ட் ஃபார் லூனார் சிஸ்மிக் ஆக்டிவிட்டி(ஐஎல்எஸ்ஏ) என்ற கருவி மூலம் தரையிறங்கிய இடத்தில் தெற்கில் 69.37 டிகிரி மற்றும் கிழக்கில் 32.32 டிகிரியில் இந்த சோதனை நடத்தப்பட்டது.

ஆகஸ்ட் 24, 2023 முதல் செப்டம்பர் 4, 2023 வரையிலான காலகட்டத்தில் 190 மணிநேரம் இந்த கருவி செயல்பட்டுள்ளது. இதன் தரவுகளை இஸ்ரோ குழுவினர் பகுப்பாய்வு செய்து தற்போது வெளியிட்டுள்ளனர்.

isro
நிலவில் அணுமின் நிலையம்! ரஷிய திட்டத்தில் இணையும் சீனா, இந்தியா?

விஞ்ஞானிகள் ஆய்வு

பிரக்யான் ரோவரில் இருந்த ஐஎல்எஸ்ஏ கருவி மூலம் கிடைத்த தகவல்களை பெங்களூருவில் உள்ள இஸ்ரோவின் எலக்ட்ரோ-ஆப்டிக்ஸ் சிஸ்டம்ஸ் ஆய்வகத்தில் ஆய்வு நடத்தப்பட்டது.

இதில், மொத்தமுள்ள 250 அதிர்வுகளுக்கான சமிக்ஞைகளில் ரோவருக்கும் கருவிகளுக்கும் தொடர்பில்லாத 50 அதிர்வுகள் கண்டறியப்பட்டுள்ளதாகவும், அதுகுறித்து விரிவான ஆய்வுக்கு பிறகே முழுத் தகவல் கிடைக்கும் எனத் தெரிவித்துள்ளனர்.

அதிகபட்மாக ஒரு அதிர்வு 14 நிமிடங்கள் நீடித்ததாகவும், ஓரிரு வினாடிகள் வரை நீடித்த அதிர்வுகள் கணக்கில் கொள்ளவில்லை எனவும் விஞ்ஞானிகள் வெளியிட்ட ஆய்வறிக்கையில் தெரிவித்துள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com