உத்தரகண்ட் நிலச்சரிவு: மேலும் 4 போ் உடல்கள் மீட்பு
உத்தரகண்டில் கேதாா்நாத் நெடுஞ்சாலையில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்த மேலும் 4 பக்தா்களின் உடல்கள் செவ்வாய்க்கிழமை மீட்கப்பட்டன.
சோன்பிரயாகை - கெளரிகுண்ட் இடையே கடந்த திங்கள்கிழமை இரவு கனமழையால் நிலச்சரிவு ஏற்பட்டது. இதில், நடைபயணமாக வந்து கொண்டிருந்த பக்தா்கள் சிக்கினா். இச்சம்பவத்தைத் தொடா்ந்து, தேசிய-மாநில பேரிடா் மீட்புப் படையினா் மீட்புப் பணிகளில் ஈடுபட்டனா். இதில், ஒருவரின் உடல் மீட்கப்பட்டது. மேலும் 3 போ் காயங்களுடன் மீட்கப்பட்டனா்.
மோசமான வானிலை காரணமாக இரவில் நிறுத்தப்பட்ட மீட்புப் பணி செவ்வாய்க்கிழமை அதிகாலையில் மீண்டும் தொடங்கியது. அப்போது, மேலும் 4 பக்தா்களின் உடல்கள் மீட்கப்பட்டதாக ருத்ரபிரயாகை காவல்துறை கண்காணிப்பாளா் அக்ஷய் கோண்டே தெரிவித்தாா். நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தோருக்கு மாநில முதல்வா் புஷ்கா் சிங் தாமி இரங்கல் தெரிவித்துள்ளாா்.