அடுத்த பாஜக தலைவர் யார்?

நீண்ட இடைவெளிக்கு பின்னர் 2017 - ஆம் ஆண்டு உத்தர பிரதேச சட்டப்பேரவைத் தேர்தலில் பாஜக மிக அறுதிப் பெரும்பான்மையுடன்(403-க்கு 322) வெற்றி பெற்று ஆட்சியை பிடித்திருந்தது.
அடுத்த பாஜக தலைவர் யார்?
Published on
Updated on
3 min read

நீண்ட இடைவெளிக்கு பின்னர் 2017 - ஆம் ஆண்டு உத்தர பிரதேச சட்டப்பேரவைத் தேர்தலில் பாஜக மிக அறுதிப் பெரும்பான்மையுடன்(403-க்கு 322) வெற்றி பெற்று ஆட்சியை பிடித்திருந்தது. அப்போது தேசிய அளவில் பாஜக தலைவராக இருந்தவர் அமித் ஷா. அவர் உ.பி. தலைவர்களுடன் வகுத்த சமூக ரீதியான உத்தி வெற்றிக்குக் காரணமாக இருந்தது என்று சொல்லப்பட்டாலும், அதற்கு உறுதுணையாக இருந்தவர் அப்போதைய உ.பி. மாநில பாஜகவின் தலைவர் கேசவ் பிரசாத் மெளரியா! தற்போது இவர் உ.பி. மாநில துணை முதல்வர். மௌரியா இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்தவர். உத்தர பிரதேசம் பிரயாக்ராஜ் (அலாகாபாத்) பகுதியில் தொடர்ந்து செல்வாக்குடன் திகழ்பவர்.

உத்தர பிரதேச தேர்தலை முன்னிட்டு 2016-ஆம் ஆண்டே பாஜகவின் மாநிலத் தலைவராக நியமிக்கப்பட்டார் மெளரியா. உ.பி.யில் பலம் வாய்ந்த யாதவ் மற்றும் தலித் வாக்குகளுக்கிடையே யாதவ் அல்லாத இதர பிற்படுத்தப்பட்டோர் மற்றும் ஜாதவ் அல்லாத பட்டியலினத்தவர், பழங்குடியினத்தவர் போன்றோருடன் கூடுதலாக சிறிய அளவில் இருந்த மிகவும் பிற்படுத்தப்பட்டோர் இனத்தவர்கள், முற்பட்டோர் என ஒன்று திரட்டி உருவாக்கப்பட்டது கூட்டணி. அது 2017-இல் மாபெரும் வெற்றியைத் தந்தது.

இந்த வெற்றிக்குப் பிறகு மாநிலத் தலைவராக இருந்த தன்னையே உ.பி. மாநில முதல்வராகக் கட்சித் தலைமை தேர்வு செய்யும் என எதிர்பார்த்தார் கேசவ் பிரசாத் மெளரியா. போட்டியில் மனோஜ் சின்ஹா(தற்போது ஆளுநர்) உள்ளிட்ட பலர் இருந்தனர். ஆனால், கோரக்பூர் மக்களவைத் தொகுதி உறுப்பினராக இருந்த யோகி ஆதித்யநாத்திற்கு முதல்வராகும் வாய்ப்பு கிடைத்தது. கேசவ் பிரசாத் மெளரியா வருத்தத்திற்கு உள்ளானார்.

யோகியின் தலைமையே உ.பி.க்கு பொருத்தம் என கட்சித் தலைமை கருதியது. குறிப்பாக, யோகியின் தாக்கூர் இனமும் இதர பிற்படுத்தப்பட்டோர் பிரிவில் இருந்ததோடு யோகியின் எளிமை, கண்டிப்பு, கொள்கைப் பிடிப்பு போன்றவற்றால் முதலிடம் பெற்று தேர்வு பெற்றார்.

கேசவ் பிரசாத் மெளரியாவின் முக்கியத்துவத்தை மறக்காமல் அவரையும் சமாதானம் செய்ய கட்சி அவரைத் துணை முதல்வராக்கியது. இந்தக் கூட்டுத் தலைமை உ.பி.யில் பாஜகவை மேலும் பலப்படுத்தியது. அடுத்தடுத்து வந்த தேர்தல்களான 2019-ஆம் ஆண்டு மக்களவைத் தேர்தல், பின்னர் 2022-ஆம் ஆண்டு உ.பி. சட்டப்பேரவைத் தேர்தலிலும் பாஜகவின் வெற்றி தொடர்ந்தது.

2022- ஆம் ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தலில் கேசவ் பிரசாத் மெளரியா தனது பேரவைத் தொகுதியில் தோல்வியைத் தழுவினார். தோல்வி அடைந்தாலும் உ.பி. மேலவை (கவுன்சில்) மூலமாக கேசவை தேர்வு செய்து மீண்டும் துணை முதல்வராக்கினார் யோகி.

இருப்பினும், சட்டப்பேரவைத் தேர்தலில் தோற்கடிக்கப்பட்டதற்கு முதல்வர் யோகி ஆதித்யநாத்தின் கைவரிசைதான் காரணம் என்ற சந்தேகத்திலேயே கேசவ் பிரசாத் மெளரியா இருந்தார். மீண்டும் 2024 -ஆம் ஆண்டில் மக்களவைத் தேர்தல் வந்தது. உ.பி.யில் பாஜகவுக்கு கடும் சரிவு. கடந்த வெற்றியில் பாதியைக்கூட தாண்டவில்லை.

மெளனம் காத்த மெளரியா, மக்களவைத் தேர்தலுக்கு பின்னர் பேசத் தொடங்கி மறைமுகமாக முதல்வர் யோகியைத் தாக்கினார். "கட்சிதான் முக்கியம். கட்சியினரை கேட்காமல் ஆட்சி செய்தால் எப்படி ?' எனக் குற்றஞ்சாட்டினார். தில்லி வந்து கட்சித் தலைமை மட்டுமல்ல பிரதமர் மோடியையும் சந்தித்தார் கேசவ் பிரசாத் மெளரியா.

" அதிகாரிகளை வைத்துக் கொண்டு யோகி ஆதித்யநாத் ஆட்சி நடத்துகிறார்' என தன் முதல்வர் குறித்தே குற்றஞ்சாட்டினார்.

மக்களவைத் தேர்தல் தோல்விக்குப் பிறகு முதல்வர் யோகி ஆதித்யநாத்தை நகர்த்திவிட்டு தன்னை முதல்வராக்க வேண்டும் என்ற அளவுக்கு கேசவ் பிரசாத் மெளரியாவின் முயற்சி இருந்தது. இந்த மோதல்கள் தில்லி தலைமைக்கு சிக்கலாக இருந்தது.

2016-ஆம் ஆண்டு உ.பி. மாநிலத் தலைவரானார் என்றாலும் 2014-ஆம் ஆண்டு மக்களவைத் தேர்தல் வெற்றியிலும் மெளரியாவின் பங்கு உண்டு. பிரதமர் மோடியைப் போன்று "சாய்வாலா' வாக இருந்து இளமையில் வறுமையைச் சந்தித்து செய்தித்தாள்களை விற்பனை செய்து தனிப்பட்ட குடும்ப வாழ்க்கையிலும், அரசியலிலும் உயர்ந்தவர் எனப் பெயர் பெற்றவர். தொழிலதிபராகவும் உயர்ந்தவர்.

சிறு வயதில் ஆர்.எஸ்.எஸ்., விஹெச்பி போன்றவற்றில் இணைந்து பணியாற்றி பிறகு பாஜகவுக்கு வந்தவர். அனல் பறக்கும் பேச்சுகள் காரணமாக பல முறை சிறை சென்றவர்; 2012-இல் சட்டப்பேரவை உறுப்பினராக இருந்தார்; பின்னர் புல்பூர் மக்களவைத் தொகுதியிலும் (மறைந்த பிரதமர் நேருவின் தொகுதி) கேசவ் பிரசாத் மெளரியா வெற்றி பெற்றார்.

இதன் பின்னணியில் இருந்தது முன்னாள் உ.பி. முதல்வர் கல்யாண் சிங் போன்று, இவருக்கு இருந்த இதர பிற்படுத்தப்பட்ட பிரிவினர் (ஓபிசி) மற்றும் தலித்(எஸ்சி) பிரிவு ஆதரவு. உ.பி.யில் பாஜகவின் செல்வாக்கை தக்கவைக்க ஓபிசி, எஸ்சி, எஸ்டி வாக்கு வங்கியாக இருக்க, அதை விட்டுக் கொடுக்க முடியாத நிலை தில்லி தலைமைக்கு.

அதே சமயத்தில் யோகி ஆதித்யநாத் செல்வாக்கும் பாஜகவுக்கு பலம். இந்த இரண்டையும் பாஜக விட்டுக்கொடுக்க விரும்பவில்லை. சமாதானப்படுத்த மீண்டும் கேசவ் பிரசாத்தை கட்சியின் உ.பி. மாநிலத் தலைவராகவும் நியமிக்க முடியாது. அவர் அடுத்தகட்டத்துக்கு செல்ல நினைத்தார். அதே சமயம், யோகி ஆதித்யநாத்தை முதல்வர் பதவியிலிருந்து மாற்ற விருப்பம் இல்லாத சூழ்நிலையில், கட்சித் தலைமை கேசவ் பிரசாத்திடம் சமாதானம் செய்து "யோகியுடன் இணைந்து பணியாற்றுங்கள்... பொறுத்திருங்கள்' எனக் கூறி அமைதி காக்க வைத்தது.

பாஜக அச்சமடைந்தபடி கடந்த மக்களவைத் தேர்தலில் காங்கிரஸ் செய்த பிரசாரம் ஓ.பி.சி.-எஸ்.சி., எஸ்.டி. மக்களைச் சென்றடைந்தது. தனிப் பெரும்பான்மையுடன் பாஜக வெற்றி பெற்று ஆட்சி அமைத்தால், "அரசியல் சாசனத்தை மாற்றி இட ஒதுக்கீட்டை பறிப்பார்கள்' என்ற எதிர்க்கட்சிகளின் பொய்ப் பிரசாரம் மக்களிடம் எடுபட்டு, அது தங்கள் வெற்றியைப் பறித்துவிட்டதாக பாஜக கருதும் நிலையில், ஓபிசி, எஸ்சி, எஸ்டி வாக்கு வங்கி மூலதனம் என பாஜக கருதுகிறது.

அதே சமயத்தில், உ.பி.யில் ஒரே உறைக்குள் "இரண்டு வாள்'களை வைக்க முடியாது என்கிற முடிவுக்கும் வந்துள்ளது. தற்போதைய தேசியத் தலைவர் ஜெ.பி. நட்டாவின் பதவிக் காலத்தையும் நீட்டிக்கவில்லை. அவர் நீக்கப்படவும் இல்லை. ஹரியாணா, மகாராஷ்டிரம் உள்ளிட்ட தேர்தல் மட்டுமல்ல கட்சித் தேர்தலும் விரைவாக நடத்தப்பட உள்ளது.

இறுதியாக ஜனவரியில் கேசவ் பிரசாத் மெளரியாவை தில்லிக்கு கொண்டுவரவும், மிகவும் பிற்படுத்தப்பட்ட ஒருவரை பாஜக தலைவர் என அறிவிக்கும் திட்டத்துக்கும் பாஜக தயாராகிக் கொண்டு இருக்கிறது. அடுத்த பாஜக தலைவர் கேசவ் பிரசாத் மெளரியாதான் என்கின்றனர் பாஜகவின் முக்கிய தலைவர்கள்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.