
வினேஷ் போகத் போட்டியிடவுள்ள ஜூலானா தொகுதி மக்கள் வினேஷ் போகத்தை வெற்றி பெறச் செய்வார்கள் என்ற நம்பிக்கை உள்ளதாக காங்கிரஸ் தலைவர் தீபிந்தர் ஹூடா இன்று (செப். 11) தெரிவித்தார்.
ஹரியாணா மாநிலத்தின் ஜிந்த் மாவட்டத்திற்குட்பட்ட ஜூலானா தொகுதியில் வினேஷ் போகத் போட்டியிடுவதாக அறிவிக்கப்பட்ட நிலையில், இன்று அவர் வேட்புமனு தாக்கல் செய்தார்.
ஒலிம்பிக் தொடரில் 100 கிராம் எடை கூடுதலாக இருந்ததாக பதக்கம் கிடைக்காமல் திரும்பிய வினேஷ் போகத், மல்யுத்தத்தில் இருந்து விலகுவதாக அறிவித்தார். அவரின் அறிவிப்பு பலரிடையே சோகத்தை ஏற்படுத்திய நிலையில், காங்கிரஸ் கட்சியில் இணைந்து பலருக்கும் ஆச்சரியத்தை அளித்தார்.
தில்லியில் காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே மற்றும் ராகுல் காந்தியை சந்தித்துப் பேசிய வினேஷ் போகத் மற்றும் பஜ்ரங் புனியா ஆகியோர், காங்கிரஸ் பொதுச்செயலாளர் கே.சி.வேணுகோபால் தலைமையில் காங்கிரஸில் இணைந்தனர்.
இதில் வினேஷ் போகத் ஹரியாணா தேர்தலில் போட்டியிடுவார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், அவர் ஜூலானா தொகுதியில் களமிறக்கப்பட்டுள்ளார்.
ஹரியாணாவில் அக்டோபர் 5ஆம் தேதி தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், இன்று வினேஷ் போகத் வேட்புமனுவை தாக்கல் செய்தார். அவருடன் காங்கிரஸ் மூத்த தலைவர் தீபிந்தர் ஹூடா இருந்தார்.
வேட்புமனுத் தாக்கல் செய்த பிறகு செய்தியாளர்களிடம் பேசிய தீபிந்தர் ஹூடா, ''
கடந்த 10 ஆண்டுகளாக பாஜக அநீதி இழைத்துவந்துள்ளது. இதனால் இந்தமுறை காங்கிரஸுக்கு ஆதரவான அலை ஹரியாணாவில் உள்ளது. ஹூலானா தொகுதியில் போட்டியிடுவதற்காக வினேஷ் போகத் வேட்புமனுவை இன்று தாக்கல் செய்தோம். அவருக்கு இழைக்கப்பட்ட அநீதிக்கு எதிராக அவர் போட்டியிடவுள்ளார். ஜூலானா மக்கள் வினேஷ் போகத்தை வெற்றிபெறச் செய்வார்கள் என்ற நம்பிக்கை உள்ளது'' என்றார்.
அக்னிபத் திட்டம் குறித்த கேள்விக்கு பதில் அளித்த அவர், ''அக்னிபத் திட்டத்தை நாங்கள் கடுமையாக எதிர்க்கிறோம். ஹரியாணாவில் ஆட்சியைக் கைப்பற்றிய பிறகு, அக்னிபத் திட்டத்தை மாற்றக்கோரி மத்திய அரசுக்கு அழுத்தம் கொடுப்போம்'' எனக் குறிப்பிட்டார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.