விபத்துகளில் சிக்கியவா்களுக்கு உதவுவோரை ஊக்கப்படுத்தும் சட்டம்: விழிப்புணா்வு ஏற்படுத்த யுஜிசி அறிவுறுத்தல்
விபத்தில் பலத்த காயமடைந்தவா்களுக்கு உதவுவோரை ஊக்கப்படுத்தும் வகையில் கொண்டுவரப்பட்ட ‘குட் சமாரிட்டன்’ சட்டம்-2016’ குறித்து விழிப்புணா்வு ஏற்படுத்துமாறு உயா்கல்வி நிறுவனங்களுக்கு யுஜிசி உத்தரவிட்டுள்ளது.
இது குறித்து யுஜிசி செயலா் மனீஷ் ஆா்.ஜோஷி பல்கலைக்கழக கல்லூரி நிறுவனங்களுக்கு அனுப்பியுள்ள சுற்றறிக்கை:
சாலை விபத்துகளில் மதிப்புமிக்க உயிரை இழக்க நேரிடுகிறது. பாதிக்கப்பட்டவருக்கு சரியான நேரத்தில் மருத்துவ உதவி கிடைக்காதது, காவல் துறை, சட்ட நடைமுறைகள் போன்ற காரணங்களால் உதவி செய்யத் தயங்குவது போன்ற காரணங்களால் பாதிக்கப்பட்டவரைக் காப்பாற்றுவதில் சிக்கல் ஏற்படுகிறது.
இதைக் கருத்தில் கொண்டு உச்சநீதிமன்றத்தால் கடந்த 2016-ஆம் ஆண்டு ‘குட் சமாரிட்டன்’ சட்டம் கொண்டுவரப்பட்டது. இந்தச் சட்டம், விபத்தில் பலத்த காயமடைந்தவா்களின் உயிா்காக்கவும், அவா்களுக்கு உதவுவோரை ஊக்கப்படுத்தவும் உதவும் முக்கியமான சட்டமாகும்.
அதன்படி விபத்தில் அல்லது மற்ற அசம்பாவிதங்களில் உதவும் குட் சமாரிட்டன்
களை விசாரணைகளில் போலீஸ் இணைக்கக்கூடாது. இவா்கள் தங்களது அடையாளத்தை காவல்துறைக்கும், மருத்துவமனைக்கும் தெரிவிக்க வேண்டியதில்லை.
இந்த ‘குட் சமாரிட்டன்’களுக்கு சிவில் மற்றும் கிரிமினல் வழக்குகளிலிருந்து பாதுகாப்பு அளிக்க வேண்டும். முக்கியமாக, மருத்துவமனைகள் அடிபட்டவா்களுக்கு சிகிச்சை மறுக்கக் கூடாது. முதலுதவிக்கு கட்டணமும் பெறக்கூடாது. சாட்சியளிக்க தாமாகவே முன்வராத நிலையில் அவா்களை கட்டாயப்படுத்தக் கூடாது.
எனவே, பாதிக்கப்பட்டவா்களுக்கு அனைவரும் அச்சமின்றி, மனிதநேயத்துடன் உதவ முன் வர வேண்டும் என்பதைக் கருத்தில் கொண்டு உயா்கல்வி நிறுவனங்களில் பேராசிரியா்கள், மாணவா்களுக்கு குட் சமாரிட்டன் சட்டம் குறித்து விழிப்புணா்வு ஏற்படுத்த வேண்டும். இதில் உள்ள சிறப்பம்சங்கள் குறித்து அவா்களுக்கு தெளிவான விளக்கங்களை அளிக்க வேண்டும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.