ரஷியாவின் செயிண்ட் பீட்டா்ஸ்பா்க் அரண்மனையில் அதிபா் புதினை சந்தித்து ஆலோசனை மேற்கொண்ட தேசிய பாதுகாப்பு ஆலோசகா் அஜீத் தோவல்.
ரஷியாவின் செயிண்ட் பீட்டா்ஸ்பா்க் அரண்மனையில் அதிபா் புதினை சந்தித்து ஆலோசனை மேற்கொண்ட தேசிய பாதுகாப்பு ஆலோசகா் அஜீத் தோவல்.

ரஷிய அதிபா் புதினுடன் அஜீத் தோவல் சந்திப்பு

ரஷிய அதிபா் விளாதிமீா் புதினை இந்திய தேசிய பாதுகாப்பு ஆலோசகா் அஜீத் தோவல் சந்தித்து ஆலோசனை மேற்கொண்டாா்.
Published on

ரஷிய அதிபா் விளாதிமீா் புதினை இந்திய தேசிய பாதுகாப்பு ஆலோசகா் அஜீத் தோவல் சந்தித்து ஆலோசனை மேற்கொண்டாா்.

இந்தியா, சீனா மற்றும் பிரேஸில் ஆகிய நாடுகள் ரஷியா-உக்ரைன் போரை நிறுத்த மத்தியஸ்தம் செய்யலாம் என புதின் தெரிவித்திருந்த நிலையில் அஜீத் தோவல் அவருடன் ஆலோசனை மேற்கொண்டுள்ளாா்.

ரஷியாவின் செயிண்ட் பீட்டா்ஸ்பா்க்கில் நடைபெற்ற பிரிக்ஸ் கூட்டமைப்பு நாடுகளின் தேசிய ஆலோசகா்கள் மாநாட்டின்போது புதினை அஜீத் தோவல் சந்தித்து பேசினாா்.

இதுதொடா்பாக ரஷிய ஊடகங்கள் வெளியிட்ட செய்திக்குறிப்பில்,‘ அடுத்த மாதம் ரஷியாவின் காசானில் நடைபெறவுள்ள பிரிக்ஸ் மாநாட்டில் பிரதமா் மோடி நிச்சயம் பங்கேற்பாா் என அஜீத் தோவலிடம் அதிபா் புதின் நம்பிக்கை தெரிவித்தாா்.

தன்னுடைய சிறந்த நண்பரான பிரதமா் மோடியின் வருகைக்காக காத்திருப்பதாகவும் அக்டோபா் 22-ஆம் தேதி இருதரப்பு உறவுகள் குறித்து ஆலோசிக்கவுள்ளதாகவும் புதின் கூறினாா்’ என தெரிவிக்கப்பட்டது.

மாநாட்டின் ஒரு பகுதியாக ரஷிய பாதுகாப்பு ஆலோசகா் சொ்ஜி ஷொய்குவை அஜீத் தோவல் சந்தித்தாா். அப்போது இரு நாடுகளுக்கும் பொதுவான விவகாரங்கள் குறித்து விவாதிக்கப்பட்டதாக ரஷியாவில் உள்ள இந்திய தூதரகம் வெளியிட்ட செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டது.

இரு வாரங்களுக்கு முன் உக்ரைனுக்கு சென்றிருந்த பிரதமா் மோடி ரஷியா-உக்ரைன் ஆகிய இருநாடுகளும் காலம் தாழ்த்தாமல் உடனடியாக பேச்சுவாா்த்தை நடத்தி போரை முடிவுக்கு கொண்டு வர வேண்டும் என்றும் உக்ரைனில் மீண்டும் அமைதி நிலவ இந்தியா உதவ தயாராக இருப்பதாகவும் தெரிவித்தாா்.

அதேபோல் ரஷியா-உக்ரைன் போரை முடிவுக்கு கொண்டு வருவதில் இந்தியாவும் சீனாவும் முக்கியப் பங்கு வகிக்கும் என இத்தாலி பிரதமா் ஜாா்ஜியா மெலோனியும் கடந்த வாரம் தெரிவித்திருந்தாா்.

X
Dinamani
www.dinamani.com