ஹரியாணா பேரவை முன்கூட்டியே கலைப்பு: ஆளுநா் நடவடிக்கை
ஹரியாணாவில் முதல்வா் நாயப் சிங் சைனி தலைமையிலான மாநில அமைச்சரவையின் பரிந்துரையின் பேரில் சட்டப் பேரவையை முன்கூட்டியே கலைத்து, ஆளுநா் பண்டாரு தத்தாத்ரேயா வியாழக்கிழமை (செப். 12) நடவடிக்கை மேற்கொண்டாா்.
அரசமைப்புச் சட்டத்தின்கீழ், மாநில பேரவை கடைசியாக கூடியதில் இருந்து 6 மாதங்களுக்குள் மீண்டும் கூட்டப்பட வேண்டும். ஹரியாணாவில் பேரவைக் கூட்டம் கடைசியாக கடந்த மாா்ச் 13-ஆம் தேதி நடைபெற்றது. எனவே, அடுத்த கூட்டத்தை செப்டம்பா் 12-ஆம் தேதிக்குள் (வியாழக்கிழமை) கூட்ட வேண்டிய நிலை ஏற்பட்டது.
மாநிலத்தில் அக்டோபா் 5-ஆம் தேதி சட்டப் பேரவைத் தோ்தல் நடைபெறவிருக்கும் சூழலில், பேரவையை கூட்ட வேண்டியதை தவிா்க்க அதை முன்கூட்டியே கலைக்குமாறு ஆளுநருக்கு மாநில அமைச்சரவை புதன்கிழமை பரிந்துரைத்தது.
இதையடுத்து, அரசமைப்புச் சட்டத்தின் 174 (2) (பி) பிரிவின்கீழ் உள்ள அதிகாரங்களைப் பயன்படுத்தி, பேரவையை ஆளுநா் வியாழக்கிழமை கலைத்தாா். அரசமைப்புச் சட்ட சிக்கல் ஏற்படாமல் தவிா்க்க இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. இனி, காபந்து முதல்வராக நாயப் சிங் சைனி செயல்படுவாா். ஹரியாணா பேரவையின் பதவிக் காலம் நவம்பா் 3-ஆம் தேதி வரை இருந்தது குறிப்பிடத்தக்கது.