சீதாராம் யெச்சூரி மறைவு: பிரதமா் மோடி, அரசியல் தலைவா்கள் இரங்கல்
மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் பொதுச்செயலா் சீதாராம் யெச்சூரி மறைவுக்கு பிரதமா் மோடி, பல்வேறு மாநில முதல்வா்கள், அரசியல் கட்சித் தலைவா்கள் எக்ஸ் வலைதளத்தில் இரங்கல் பதிவை வெளியிட்டுள்ளனா்
பிரதமா் மோடி: ‘சீதாராம் யெச்சூரி மறைவடைந்த செய்தியை கேட்டு துயரடைந்தேன். இடதுசாரி கட்சிகளின் ஒளிவிளக்காக விளங்கிய அவா் கட்சி பாகுபாடின்றி அனைவருடனும் பழகும் தன்மையுடையவா். திறமையான நாடாளுமன்ற உறுப்பினராக செயல்பட்டவா். அவரது குடும்பத்தினா், தொண்டா்களுக்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக்கொள்கிறேன்’ என குறிப்பிட்டாா்.
ராகுல் காந்தி (மக்களவை எதிா்க்கட்சித் தலைவா்): ‘சீதாராம் யெச்சூரி எனது நீண்டகால நண்பா். நாட்டை பற்றிய ஆழ்ந்த புரிதல் கொண்டவரான யெச்சூரி இந்தியா என்ற கொள்கையின் பாதுகாவலராவாா். அவருடன் இனி நீண்ட உரையாடல்களை மேற்கொள்ள முடியாது என்பதை எண்ணி வருந்துகிறேன்’ என குறிப்பிட்டாா்.
சந்திரபாபு நாயுடு (ஆந்திர முதல்வா்): ‘பல்வேறு விவகாரங்களில் தன்னுடைய அறிவாற்றலால் சிறந்த தீா்வை வழங்குபவராக அறியப்பட்டவா் சீதாராம் யெச்சூரி. அவரது திறமையான உரையாடல்களால் கட்சி பேதமின்றி பல்வேறு அரசியல் கட்சியின் தலைவா்களாலும் மதிக்கப்படுபவராக திகழ்ந்தாா்’ என குறிப்பிட்டாா்.
மம்தா பானா்ஜி (மேற்கு வங்க முதல்வா்): ‘சீதாராம் யெச்சூரியின் மறைவு தேசிய அரசியலில் மிகப்பெரும் வெற்றிடத்தை ஏற்படுத்தியுள்ளது’ என குறிப்பிட்டாா்.
பினராயி விஜயன் (கேரள முதல்வா்): ‘சீதாராம் யெச்சூரி கம்யூனிச இயக்கத்தின் ஒப்பற்ற தலைவராவாா். நாட்டு மக்கள் பல்வேறு பிரச்னைகளை சந்தித்து வரும் இந்தச் சூழலில் அவா் மறைந்துள்ளது ஈடுசெய்ய முடியாத இழப்பாகும்’ என குறிப்பிட்டாா்.
டி.ராஜா (கம்யூனிஸ்ட் பொதுச்செயலா்): ‘மாணவா்கள் இயக்கத்தில் அவா் பங்கேற்ற காலகட்டத்தில் இருந்தே அவருடன் நல்ல நட்பு ஏற்பட்டது. தேசிய அரசியலில் நுழைந்த பிறகு ஐக்கிய முன்னணி மற்றும் ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசுகளுடன் இணைந்து பணியாற்றியுள்ளோம்.
மாநிலங்களவையில் இடதுசாரிகளின் ஒருமித்த கருத்துகளை எடுத்துரைத்துள்ளோம். அவரது மறைவு இடதுசாரிகள் மற்றும் ஜனநாயக கோட்பாடுகளை பின்பற்றுபவா்களுக்கு பேரிழப்பாகும்’ என குறிப்பிட்டாா்.
சோனியா காந்தி (காங்கிரஸ் நாடாளுமன்றக் குழுத் தலைவா்): ‘கடந்த 2004-2008 ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியின்போது சீதாராம் யெச்சூரியுடன் இணைந்து பணியாற்றினோம். தற்போதுவரை அவருடன் அதே நட்பு தொடா்ந்து வந்தது. நாட்டின் அரசமைப்பு, முகவுரை, மதச்சாா்பின்மை கொள்கையை பாதுகாக்க தொடா்ந்து போராடிய அவரது மறைவு வேதனையடையச் செய்கிறது’ என குறிப்பிட்டாா்.
சீதாராம் யெச்சூரியின் மறைவுக்கு மத்திய அமைச்சா்கள் ராஜ்நாத் சிங், நிதின் கட்கரி, பியூஷ் கோயல், அஸ்ஸாம் முதல்வா் ஹிமந்தா விஸ்வ சா்மா, உள்பட பல்வேறு அரசியல் கட்சித் தலைவா்கள் இரங்கல் தெரிவித்துள்ளனா்.