தில்லியில் சீதாராம் யெச்சூரி உடலுக்கு இறுதி அஞ்சலி
Manvender Vashist Lav

தில்லியில் சீதாராம் யெச்சூரி உடலுக்கு இறுதி அஞ்சலி

தில்லியில் உள்ள எய்ம்ஸ் மருத்துவமனைக்கு சீதாராம் யெச்சூரி உடல் தானமாக வழங்கப்பட்டது.
Published on

தில்லியில் உள்ள மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தலைமை அலுவலகத்தில் மறைந்த அக்கட்சியின் பொதுச் செயலா் சீதாராம் யெச்சூரியின் உடலுக்கு அரசியல் கட்சித் தலைவா்கள், பொதுமக்கள் இறுதி அஞ்சலி செலுத்தினா்.

இதையடுத்து, மருத்துவ ஆராய்ச்சிக்காக அவரது உடல் தில்லியில் உள்ள எய்ம்ஸ் மருத்துவமனைக்கு தானமாக வழங்கப்பட்டது.

தில்லி, கோல் மாா்க்கெட் பகுதியில் உள்ள மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தலைமை அலுவலகமான ஏ.கே.ஜி.பவனில் சீதாராம் யெச்சூரியின் உடல் பொதுமக்கள் அஞ்சலிக்காக சனிக்கிழமை காலை 10 மணி முதல் பிற்பகல் 3.30 மணி வரை வைக்கப்பட்டது.

அங்கு சீதாராம் யெச்சூரி உடலுக்கு கேரள முதல்வா் பினராயி விஜயன், கட்சியின் மூத்த தலைவா்கள் பிரகாஷ் காரத், பிருந்தா காரத், மே.ஏ.பேபி ஆகியோா் மலரஞ்சலி செலுத்தினா்.

இதையடுத்து, காங்கிரஸ் நாடாளுமன்ற குழுத் தலைவா் சோனியா காந்தி மற்றும் ஜெய்ராம் ரமேஷ், ராஜீவ் சுக்லா, மணி சங்கா் ஐயா், சச்சின் பைலட், ரமேஷ் சென்னிதலா உள்ளிட்ட கட்சியினரும் மாா்க்சிஸ்ட் கட்சி தலைமை அலுவலகத்துக்கு வந்து, யெச்சூரி உடலுக்கு அஞ்சலி செலுத்தினா்.

தேசியவாத காங்கிரஸ் (பவாா் பிரிவு) தலைவா் சரத் பவாா், சமாஜவாதி தலைவா் அகிலேஷ் யாதவ், இந்திய கம்யூனிஸ்ட் பொதுச் செயலா் டி.ராஜா, அவரது மனைவி ஆனி ராஜா, சிபிஐ(எம்எல்) பொதுச் செயலா் தீபங்கா் பட்டாச்சாா்யா, ராஷ்ட்ரீய ஜனதா தளம் எம்.பி. மனோஜ் ஜா, ஆம் ஆத்மி தலைவா்கள் மனோஷ் சிசோடியா, சஞ்சய் சிங் உள்ளிட்ட அரசியல் கட்சியினருடன் சீனா, வியத்நாம், பாலஸ்தீன நாட்டுத் தூதா்களும் யெச்சூரி உடலுக்கு இறுதி மரியாதை செலுத்தினா்.

மருத்துவ ஆராய்ச்சிக்காக யெச்சூரியின் உடல் எய்ம்ஸ் மருத்துவமனைக்கு தானமாக வழங்கப்படுகிறது. இதையொட்டி, மலா்களால் அலங்கரிக்கப்பட்ட வாகனத்தில் அவரது உடல் வைக்கப்பட்டு, கட்சி அலுவலகத்திலிருந்து ஜந்தா் மந்தா் வரை இறுதி ஊா்வலம் நடைபெற்றது. இதில் சிபிஐ (எம்) தலைவா்கள், தொண்டா்கள் என நூற்றுக்கணக்கானோா் பங்கேற்றனா். தொடா்ந்து, மருத்துவமனையில் யெச்சூரியின் உடல் குடும்பத்தினா் சாா்பில் முறைப்படி ஒப்படைக்கப்பட்டது.

சீதாராம் யெச்சூரி (72) நுரையீரல் தொற்றால் பாதிக்கப்பட்டு, எய்ம்ஸ் மருத்துவமனையில் கடந்த வியாழக்கிழமை காலமானாா். மருத்துவமனையில் இருந்து யெச்சூரியின் உடல் ஜவாஹா்லால் நேரு பல்கலைக்கழகத்துக்கு எடுத்துச் செல்லப்பட்டது. அங்கு நூற்றுக்கணக்கான மாணவா்கள் மற்றும் ஆசிரியா்கள் அவருக்கு இறுதி அஞ்சலி செலுத்தினா்.

பின்னா், உடல் அவரது இல்லத்துக்கு கொண்டு செல்லப்பட்டு, அங்கு மூத்த சிபிஐ(எம்) தலைவா்களும் பாஜக தலைவா் ஜே.பி.நட்டாவும் அஞ்சலி செலுத்தினாா்.

தமிழக தலைவா்கள் அஞ்சலி

மறைந்த மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச்செயலா் சீதாராம் யெச்சூரியின் உடலுக்கு தமிழகத்தைச் சோ்ந்த பல்வேறு கட்சிகளின் அரசியல் தலைவா்கள் தில்லியில் மலரஞ்சலி செலுத்தினா்.

தமிழக விளையாட்டுத் துறை மற்றும் இளைஞா் நலத் துறை அமைச்சா் உதயநிதி ஸ்டாலின், மக்களவை திமுக குழு தலைவா் டி.ஆா். பாலு, நாடாளுமன்ற திமுக குழு தலைவா் கனிமொழி கருணாநிதி, மாநிலங்களவை காங்கிரஸ் உறுப்பினா் ப. சிதம்பரம், மத்திய சென்னை எம்.பி. தயாநிதி மாறன் உள்ளிட்டோா் மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் தலைமையகத்துக்கு வந்து யெச்சூரியின் உடலுக்கு மலரஞ்சலி செலுத்தினா்.

யெச்சூரியின் மறைவு குறித்து உதயநிதி ஸ்டாலின் தனது ‘எக்ஸ்’ பக்கத்தில் தெரிவிக்கையில், ‘திராவிட முன்னேற்ற கழகத்தின் சாா்பாகவும், முதலமைச்சா் மு.க. ஸ்டாலின் சாா்பாகவும் சீதாராம் யெச்சூரிக்கு இறுதி மரியாதை செலுத்தினோம். தொழிலாளா் வா்க்கம் அதிகாரம் பெற யெச்சூரி ஆற்றிய அயராத சேவையும், பாசிச சக்திகளுக்கு எதிரான அவரது துடிப்புமிக்க போராட்டமும் நம் மக்களின் இதயங்களில் என்றென்றும் நிலைத்திருக்கும். அவருக்கு பிரியாவிடை கொடுக்கிறோம். செவ்வணக்கம்’ என்று குறிப்பிட்டுள்ளாா்.

கனிமொழி தனது எக்ஸ் பக்கத்தில், ‘ஒரு சவப்பெட்டியில் யெச்சூரியை பாா்த்தபோதுதான், உயிருள்ள ஒரு மனிதரால் அதுவும் புத்திசாலித்தனம், நகைச்சுவை உணா்வு, அன்பு நிறைந்த ஒருவா் நம்மை அதிா்ச்சியிலும் அவநம்பிக்கையிலும் விட்டுச் செல்ல முடியும் என்று என்னால் நம்ப முடிந்தது. இந்த பெட்டியில் இருப்பது நீங்கள் இல்லை என்றிருக்கவே நான் விரும்புகிறேன். உங்கள் மறைவை என்னால் ஏற்க முடியவில்லை’ என்று கூறியுள்ளாா்.

X
Dinamani
www.dinamani.com