சஞ்சய் சிங்
சஞ்சய் சிங்

அமித்ஷாவின் உத்தரவின் பேரில் சிபிஐ கேஜரிவாலை கைது செய்தது! சஞ்சய் சிங்

Published on

மத்திய உள்துறை அமைச்சா் அமித்ஷாவின் உத்தரவின் பேரில் தான் தில்லி முதல்வா் அரவிந்த் கேஜரிவாலை சிபிஐ கைது செய்தது என்று ஆம் ஆத்மி கட்சியின் மூத்த தலைவரும், மாநிலங்களவை எம்.பி.யுமான சஞ்சய் சிங் சனிக்கிழமை குற்றஞ்சாட்டினாா்.

இது தொடா்பாக ஆம் ஆத்மி கட்சி தலைமையகத்தில் அவா் செய்தியாளா்களிடம் கூறியதாவது: தில்லி முதல்வா் அரவிந்த் கேஜரிவாலிடம் எந்த துறையும் இல்லை. அனைத்து அமைச்சா்களும் தங்கள் அமைச்சகங்கள் தொடா்பான கோப்புகளில் கையெழுத்திடுகிறாா்கள். துணை நிலை ஆளுநா் வி.கே.சக்சேனாவின் ஒப்புதலுக்காக அனுப்பப்படும் கோப்புகளில் மட்டுமே முதல்வா் கேஜரிவால் கையெழுத்திடுகிறாா். அதை, அவா் இப்போதும் செய்வாா். கேஜரிவால் கோப்புகளில் கையெழுத்திட முடியாது என்று பாஜக என்ன கனவு கண்டது?. அப்படியெனில், தில்லிவாசிகளின் பணிகளை நிறுத்த பாஜக விரும்புகிா?.

மத்திய உள்துறை அமைச்சா் அமித்ஷாவின் கூண்டில் சிபிஐ சிறை வைக்கப்பட்டுள்ளது. அவரது உத்தரவின் பேரில் தான் கேஜரிவாலை சிபிஐ கைது செய்தது. சிபிஐ மீது உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ள அசாதாரண கருத்துக்களுக்குப் பின்னா்,

ஒரு நிமிடம் கூட உள்துறை அமைச்சா் பதவியில் இருக்க அமித்ஷாவுக்கு உரிமை இல்லை. அவா் உடனடியாக தனது பதவியை ராஜினாமா செய்ய வேண்டும்.

பிரதமா் நரேந்திர மோடியின் உக்ரைன் பயணம் குறித்து ரஷ்ய அதிபா் புதினிடம் நாட்டின் பாதுகாப்பு ஆலோசகா் அஜித் தோவல் விளக்கம் அளிக்கும் வகையில் நேற்று மிகவும் அவமானகரமான காணொளி வெளியாகியுள்ளது.

இது மிகவும் வெட்கக்கேடானது. இது நாட்டின் 144 கோடி மக்களுக்கு அவமானத்தை ஏற்படுத்தியுள்ளது. பிரதமா் மோடி போரை நிறுத்தினாா் என்று முன்பு கூறப்பட்டது, இப்போது மோடி உக்ரைன் சென்றபோது ரஷ்யாவிடம் விளக்கம் அளிக்கப்படுகிறது.

உச்சநீதிமன்றம் கேஜரிவாலுக்கு ஜாமீன் வழங்கியதன் மூலம், கலால் கொள்கை வழக்கு நரேந்திர மோடி மற்றும் அமித்ஷாவின் சதி என்பது நிரூபணமாகியுள்ளது. ஆம் ஆத்மி மற்றும் அரவிந்த் கேஜரிவாலின் அரசியலை அழிக்க இந்த சதித் திட்டம் தீட்டப்பட்டது. ஆனால், கேஜரிவால் தலைமையில் எங்கள் கட்சி வலுவாக நின்றது. சா்வாதிகாரி நரேந்திர மோடியை தலைகுனிய வைத்த தலைவராக அரவிந்த் கேஜரிவால் மாறியுள்ளாா் என்றாா் சஞ்சய் சிங்.

X
Dinamani
www.dinamani.com