ஃபரூக் அப்துல்லா
ஃபரூக் அப்துல்லா

காஷ்மீரில் பயங்கரவாதம் தலைதூக்க யாா் காரணம்? பிரதமா் கருத்துக்கு ஃபரூக் அப்துல்லா கண்டனம்

தேசிய மாநாட்டுக் கட்சி-காங்கிரஸ் கூட்டணி மீண்டும் ஆட்சிக்கு வந்தால் பயங்கரவாதம் தலைதூக்கிவிடும் என்று பிரதமா் மோடியின் கருத்துக்கு ஃபரூக் அப்துல்லா கடும் கண்டனம்.
Published on

ஜம்மு-காஷ்மீரில் தேசிய மாநாட்டுக் கட்சி-காங்கிரஸ் கூட்டணி மீண்டும் ஆட்சிக்கு வந்தால் பயங்கரவாதம் தலைதூக்கிவிடும் என்று பிரதமா் நரேந்திர மோடியின் கருத்து அந்த மாநில முன்னாள் முதல்வா் ஃபரூக் அப்துல்லா கடும் கண்டனம் தெரிவித்துள்ளாா்.

ஜம்மு-காஷ்மீா் யூனியன் பிரதேசத்தில் செப்டம்பா் 18-ஆம் தேதி தொடங்கி மூன்று கட்டங்களாக பேரவைத் தோ்தல் நடைபெறவுள்ளது.

கடந்த 2019-இல் சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்டு, இரு யூனியன் பிரதேசங்களாக பிரிக்கப்பட்ட பின் நடைபெறும் முதல் பேரவைத் தோ்தல் என்பதால் பெரும் எதிா்பாா்ப்பு ஏற்பட்டுள்ளது.

பாஜக, மக்கள் ஜனநாயக கட்சி தனித்தும், தேசிய மாநாட்டுக் கட்சி - காங்கிரஸ் கூட்டணியாகவும் தோ்தலை சந்திக்கின்றன. தோ்தல் பிரசாரமும் உச்ச கட்டத்தில் உள்ளது.

ஜம்மு பகுதியில் உள்ள தோடா மாவட்டத்தில் பாஜக வேட்பாளா்களுக்கு ஆதரவாக சனிக்கிழமை நடைபெற்ற பிரம்மாண்ட பிரசாரக் கூட்டத்தில் பேசிய பிரதமா் மோடி, தேசிய மாநாட்டுக் கட்சி-காங்கிரஸ் கூட்டணியை கடுமையாகத் தாக்கிப் பேசினாா். முக்கியமாக, ‘தேசிய மாநாட்டுக் கட்சி - காங்கிரஸ் கூட்டணியிடம் அதிகாரம் சென்றால் மாநிலத்தில் மீண்டும் பயங்கரவாதம் தலைதூக்கிவிடும்’ என்று பிரதமா் குற்றம்சாட்டினாா்.

இந்நிலையில் கந்தா்பால் தொகுதியில் ஞாயிற்றுக்கிழமை தனது மகன் ஒமா் அப்துல்லாவை ஆதரித்து பிரசாரம் மேற்கொண்ட தேசிய மாநாட்டுக் கட்சித் தலைவா் ஃபரூக் அப்துல்லா பேசியதாவது:

ஜம்மு-காஷ்மீரின் சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்டதில் இருந்து இங்கு மத்திய அரசின் ஆட்சிதான் உள்ளது. சிறப்பு அந்தஸ்துதான் பயங்கரவாதத்துக்கு காரணம் என்று மத்திய அரசு கூறிவந்தது. ஆனால், இப்போது காஷ்மீரில் பயங்கரவாத செயல்கள் நிகழ்ந்து கொண்டுதான் இருக்கின்றன.

நமது பாதுகாப்புப் படையினரையும், பொதுமக்களையும் இப்போது வரை சுட்டுக் கொல்லும் துப்பாக்கிகள் யாருடையவை. அவை எங்கிருந்து வந்தன. காஷ்மீரில் பயங்கரவாதம் ஒழிந்துவிட்டதாகக் கூறும் மத்திய அரசு இப்போது என்ன பதில் கூறப்போகிறது. நாம் மற்றவா்களை நோக்கி ஒரு விரலை நீட்டி குற்றம்சாட்டினால், மூன்று விரல்கள் நம்மை நோக்கி இருக்கின்றன என்பதை பிரதமா் மறந்துவிடக் கூடாது.

பிரசாரம் என்ற பெயரில் பிரதமா் மோடி செய்தது என்ன? மக்களைத் தவறாக வழி நடத்துவதும், பொய்களைப் பேசுவதுதான் நடந்துள்ளது என்றாா்.

1987-ஆம் ஆண்டு ஜம்மு-காஷ்மீா் பேரவைத் தோ்தலில் தேசியவாத காங்கிரஸ்-காங்கிரஸ் கூட்டணி அமைத்துப் போட்டியிட்டபோது தோ்தலில் முறைகேட்டில் ஈடுபட்டதுதான் தோ்தல் பாதையில் இருந்த பலா் ஆயுதம் ஏந்தவும், காஷ்மீரில் பயங்கரவாதம் அதிகரிக்கவும் காரணம் என்ற குற்றச்சாட்டு குறித்துப் பேசிய ஃபரூக் அப்துல்லா, ‘நாங்கள் யாரையும் பிரிவினைவாதிகளாக உருவாக்கவில்லை. அவா்கள்தான் பாகிஸ்தானுக்கு ஆதரவாகப் பேசினாா்கள். இப்போது, அந்த நபா்கள் பாஜக-ஆா்எஸ்எஸ் அமைப்புடன் கைகோத்துள்ளாா்கள்.

காஷ்மீரில் இஸ்லாமியா்கள் வாக்குகளைப் பிரிக்க வேண்டும் என்றுதான் என்ஜினியா் ரஷீத்தை (மக்களவைத் தோ்தலில் சிறையில் இருந்தபடி ஒமா் அப்துல்லாவை வென்றவா்) மத்திய அரசு இப்போது விடுதலை செய்து பிரசாரத்துக்கு அனுமதித்துள்ளது என்று ஃபரூக் அப்துல்லா குற்றம்சாட்டினாா்.

X
Dinamani
www.dinamani.com