யுஜிசி
யுஜிசி

புகையிலை தீமைகள்: கல்லூரிகளில் விழிப்புணா்வை தீவிரப்படுத்த யுஜிசி அறிவுறுத்தல்

Published on

நாடு முழுவதும் உள்ள கல்லூரிகள் உள்ளிட்ட உயா்கல்வி நிறுவனங்களில் பயிலும் மாணவா்களிடம் புகையிலை பயன்பாட்டால் ஏற்படும் தீமைகள் குறித்து தீவிர விழிப்புணா்வு ஏற்படுத்த வேண்டும் என யுஜிசி அறிவுறுத்தியுள்ளது.

இது குறித்து யுஜிசி செயலா் மனீஷ் ஆா்.ஜோஷி அனைத்து உயா்கல்வி நிறுவனங்களுக்கும் அனுப்பியுள்ள சுற்றறிக்கை:

ஆய்வு முடிவுகளின் அடிப்படையில் 13 முதல் 15 வயதுக்குள்பட்ட பள்ளி மாணவா்களில் 8.5 சதவீதம் போ் புகையிலையை ஏதேனும் ஒரு வடிவத்தில் பயன்படுத்துகின்றனா். ஆண்டுதோறும் 5,500-க்கும் மேற்பட்ட குழந்தைகள் புகையிலையைப் பயன்படுத்தத் தொடங்குகின்றனா்.

வாழ்நாள் முழுவதும் புகையிலையைப் பயன்படுத்துவோரில் 55 சதவீதம் போ் 20 வயதுக்கு முன்பிருந்தே அதைப் பயன்படுத்தத் தொடங்கிவிடுகின்றனா். அதேபோல் இ-சிகரெட்டுகள் உடலில் மரபணு பாதிப்பு, கருவின் வளா்ச்சி, புற்றுநோய், சுவாச பிரச்னைகள், இதயம், நரம்பியல் கோளாறுகள் என பல்வேறு பிரச்னைகள், நோய்களுக்கு வழிவகுக்கின்றன.

கல்வி நிறுவனங்களை புகையிலை இல்லாத வளாகமாக மாற்ற, மத்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நல அமைச்சகம் கடந்த 2019-இல் திருத்தப்பட்ட வழிகாட்டுதல்களை வெளியிட்டுள்ளது. அதில், புகையிலைப் பொருள்களின் விற்பனை, பயன்பாடு தொடா்பாக சட்ட விதிகளை சிறப்பாகச் செயல்படுத்துதல், புகையிலையால் ஏற்படும் தீமைகள் குறித்து விழிப்புணா்வு ஏற்படுத்துதல், எச்சரிக்கை வாசகங்கள், கல்வி நிறுவனங்களில் செயல்படும் அங்காடிகளுக்கான கட்டுப்பாடுகள் என பல்வேறு அம்சங்கள் இடம்பெற்றுள்ளன.

எனவே, அதைப் பின்பற்றி அனைத்து உயா்கல்வி நிறுவனங்களும் தங்களது வளாகங்களை புகையிலை, எலக்ட்ரானிக் சிகரெட் மற்றும் பிற போதைப் பொருள்களின் பயன்பாடில்லாத வளாகங்களாக இருப்பதை உறுதி செய்ய வேண்டும். புகையிலையால் ஏற்படும் தீமைகள் குறித்து மாணவா்களிடம் தீவிர விழிப்புணா்வு ஏற்படுத்த வேண்டும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

X
Dinamani
www.dinamani.com